ஓட்ஸ் ஒரு ஆரோக்கியமான உணவு என்பதில் சந்தேகம் இல்லை. அதில் அதிகளவு நார்ச்சத்து உள்ளதால், அது இதயத்திற்கு மிகவும் நல்லது. அதேசமயம் ஓட்ஸ் எல்லோரும் சாப்பிட ஏற்றது அல்ல. சிலர் இதைக் கட்டாயம் தவிர்த்தே ஆக வேண்டும். யார் அவர்கள்? அதற்கான காரணங்கள் என்ன? என்பதைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
1. செலியாக் நோய் உள்ளவர்கள்:
செலியாக் நோய் என்பது ஒரு தன்னுடல் தாக்க நோய். கோதுமை, பார்லி, மற்றும் கம்பு ஆகியவற்றில் காணப்படும் புரதமான க்ளூட்டன் எனப்படும் பசையம், இவர்களது உடலில் உள்ள நோய் எதிர்ப்பு அமைப்பைத் தாக்கி சேதப்படுத்துகிறது. எனவே இவர்கள் வாழ்நாள் முழுவதும் க்ளூட்டன் பசையம் இல்லாத உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஓட்ஸில் இயற்கையாகவே பசையம் இல்லை. ஆனால் தொழிற்சாலைகளில் பார்லி, கம்பு, கோதுமை ஆகியவற்றை பதப்படுத்தும் வழிமுறையிலேயே ஓட்ஸும் கையாளப்படுகிறது. இதனால் ஓட்ஸில் பசையம் சேர்வதற்கான வாய்ப்புள்ளது. இது செலியாக் நோய் உள்ளவர்களுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். அவர்களுக்கு ஊட்டச்சத்து உறிஞ்சுதலில் குறைபாடு, வயிற்று வலி மற்றும் நீண்டகால ஆரோக்கியக் கேடுகளை உண்டாக்கும். மேலும் இதில் உள்ள புரதச்சத்தும் இவர்களுக்கு எதிர்வினை புரியக்கூடும். எனவே இவர்கள் அதை தவிர்க்க வேண்டும். குளூட்டன் ஃப்ரீ எனப்படும் பசையம் இல்லாதது என்று சான்றளிக்கப்பட்ட ஓட்ஸ் வகையை மருத்துவரின் பரிந்துரையின் பேரில் மட்டுமே உண்ண வேண்டும்.
2. ஓட்ஸ் அலர்ஜி உள்ளவர்கள்:
பொதுவாக ஓட்ஸ் அலர்ஜி அரிதென்றாலும், சிலருக்கு இந்த சிக்கல் உள்ளது. அவர்களுக்கு ஓட்ஸில் உள்ள அவனின் என்கிற புரதம் அலர்ஜி உள்ளவர்களுடைய எதிர்ப்புச் சக்தியை பாதிக்கும். இது அவர்களது சருமத்தில் படை, தேமல், கொப்புளங்கள் குடல் சம்பந்தமான பிரச்சனைகள், கடுமையான சுவாச பிரச்சனைகள், மூச்சு விடுவதில் சிரமங்கள் போன்றவற்றை ஏற்படுத்தும். எனவே இவர்கள் ஓட்ஸ் மற்றும் ஓட்ஸ் சார்ந்த தயாரிப்புகளை கண்டிப்பாக எடுத்துக்கொள்ளக் கூடாது.
3. எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறி உள்ளவர்கள்:
ஓட்ஸில் கரையக்கூடிய நார்ச்சத்து நிறைந்துள்ளது. இது செரிமானத்திற்கு நன்மை பயக்கும். ஆனால் I.B.S எனப்படும் எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறி உள்ளவர்களுக்கு இதில் உள்ள அதிக நார்ச்சத்து, குடலில் வீக்கம், வாயு உற்பத்தி, மற்றும் வயிற்று அசவுகரியத்தை அதிகரிக்கும். எனவே இவர்கள் ஓட்ஸைத் தவிர்க்க வேண்டும்.
4. நீரிழிவு நோயாளிகள்:
ஓட்ஸில் உள்ள கார்போஹைட்ரேட் மற்றும் அதன் நார்ச்சத்து ரத்த சர்க்கரையை சீராக்க உதவும். ஆனால் ஓட்ஸில் செய்த இனிப்பு வகைகளை உட்கொள்ளும் போது ரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும். எனவே நீரிழிவு நோயாளிகள் ஓட்ஸை மிக குறைவாக எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் இதனுடன் சேர்க்கப்படும் பிற சர்க்கரைகளில் கவனம் வைக்க வேண்டும். மருத்துவர் அல்லது உளவியல் நிபுணரின் பரிந்துரையின் பேரில் சிறிதளவு உண்ணலாம்.
5. தாதுப் பற்றாக்குறை உள்ளவர்கள்:
ஓட்ஸில் பைடிக் (phytic) அமிலம் உள்ளது. இது ஒரு ஆன்ட்டி நியூட்ரிசன் எனப்படுகிறது. இது உடலுக்குத் தேவையான தாதுக்களான கால்சியம், இரும்பு போன்ற சத்துக்களை, உடல் உறிஞ்சும் செயல் திறனை குறைக்கிறது. இது ஆரோக்கியமான மனிதர்களுக்கு ஒரு தீங்கும் செய்யாது. ஆனால் அதே சமயத்தில் தாதுக் குறைபாடு உள்ளவர்களுக்கு சிறிதளவு ஓட்ஸ் எடுத்துக் கொண்டாலும் அவர்களுக்கு உடலுக்கு சேர வேண்டிய தாதுக்கள் கிடைக்காது.
6. செரிமான கோளாறு உள்ளவர்கள்:
செரிமானக் கோளாறு உள்ளவர்களும் ஓட்சைத் தவிர்க்க வேண்டும். ஏனென்றால் செரிமானம் தாமதமாவதால் குடல் அடைப்புக்கு வழி வகுக்கும். எனவே இவர்கள் ஓட்சைத் தவிர்க்கலாம் அல்லது மிகக் குறைவாக எடுத்துக் கொள்ளலாம்.
முக்கிய அறிவிப்பு: இக்கட்டுரையில் உள்ள தகவல்கள், பல்வேறு செய்திகளின் தொகுப்பாக மட்டுமே வழங்கப்படுகின்றன. இவை மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைகள் அல்ல. உடல்நலம் தொடர்பான எந்தவொரு சந்தேகத்துக்கும் பிரச்னைக்கும், அவசியம் மருத்துவரை அணுகவும்.