இன்றைய வேகமான எந்திரத்தனமான வாழ்க்கை முறை, உங்கள் ஆரோக்கியத்தில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தி இருக்கலாம். ஆரோக்கியமான வாழ்க்கைமுறைக்கு சத்தான ஊட்டச்சத்து மிக்க உணவை உட்கொள்வது மிகவும் அவசியம். உணவில் ஊட்டச்சத்துக்கள் குறைவாக இருந்தால் அது உடல் ஆரோக்கியத்தை குறைத்து பல நோய்களை வரவழைக்கும். ஆரோக்கியமான உணவுகளைச் சாப்பிடுவது எவ்வளவு முக்கியமோ, அதே போல் அவற்றை ஆரோக்கியமான முறையில் சமைப்பதும் மிக முக்கியம்.
இந்தியர்கள் பெரும்பாலும் சுத்திகரிக்கப்பட்ட சூரிய காந்தி எண்ணெயைதான் அதிகம் பயன்படுத்துகின்றனர். அதே நேரம் ஆரோக்கிய உணர்வு கொண்டவர்கள் சிலர் ஆலிவ் எண்ணெயை உணவுகளில் சேர்த்துக் கொள்கின்றனர். ஆலிவ் எண்ணெயில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. அதே நேரம் அதை பயன்படுத்தும் விதத்தில் தான் நன்மைகளும் உள்ளன. அளவுக்கு அதிகமான உபயோகம் நன்மைக்கு பதிலாக தீமையில் கொண்டு வந்து விடலாம்.
நமது தினசரி சமையலில் ஆலிவ் எண்ணெயைச் உபயோகம் செய்வது நன்மை தருவதாக இருக்கும் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர். ஆலிவ் எண்ணெயில் நிறைய ஆரோக்கியமான நல்ல கொழுப்பு உள்ளது. இது கெட்ட கொழுப்பு உடலில் சேர்வதை தடுக்கிறது. இரத்த நாளங்களில் கொழுப்பு படிவதை ஆலிவ் எண்ணெய் தடுக்கிறது. உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி , இதயத்திற்கு நன்மை செய்கிறது. இதனால் இதய நோய் ஆபாயம் குறைகிறது. இது போன்ற காரணங்களால் ஆலிவ் எண்ணெயை ஆரோக்கியத்திற்காக பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.
ஆலிவ் எண்ணெயில் நிறைய நன்மைகள் இருந்தாலும் அதை முறையாகப் பயன்படுத்தாவிட்டால் தீமைக்கு வழிவகுக்கும். பொதுவாகவே ஆலிவ் எண்ணெய்கள் அதிகளவு அடர்த்தி கொண்டவை . இந்தியர்கள் சாதாரணமாக பயன்படுத்தும் எண்ணெய்கள் அடர்த்தி மிக குறைவாக இருப்பதால் எளிதில் சூடாகும் தன்மையை பெற்றுள்ளன. ஆனால், அதிக அடர்த்தி கொண்ட ஆலிவ் எண்ணெய் சூடாக அதிக நேரம் எடுக்கும். ஆலிவ் எண்ணெயின் கொதிநிலை அதிகரிக்கும் போது அதில் உள்ள நல்ல சத்துக்கள், நன்மை செய்யும் கொழுப்புகள் அனைத்தும் அழிந்து விடுகின்றன. இறுதியில் எண்ணெயில் டிரைகிளிசராய்டு வகை கொழுப்பு உருவாகி உணவில் சேர்கிறது. இந்த டிரைகிளிசராய்டு வகை கொழுப்பு இதய ஆபாயத்தை உருவாக்கும்; மேலும் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும் பண்பினை கொண்டவை .
பொதுவாகவே ஆலிவ் எண்ணெயில் கலோரிகள் அதிகம். ஒரு தேக்கரண்டி ஆலிவ் எண்ணெயில் சுமார் 120 கலோரிகள் உள்ளன. இந்தியர்கள் இயல்பாகவே ஒரு தோசைக்கு 2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி சாப்பிடுபவர்கள். ஒரு நாளைக்கு மிகக் குறைவாக 5 தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தினால் கூட 600 கலோரிகள் உடலில் சேர்கின்றன.
இந்த கலோரிகள் எரிக்கப்படாவிட்டால் உடலில் கொழுப்பாக சேரும். ஆலிவ் எண்ணெயில் நிறைவுற்ற கொழுப்புகள் உள்ளன, அவை கெட்ட கொழுப்பான எல்டிஎல் அளவை அதிகரிக்கும். ஆலிவ் எண்ணெயின் அதிகப்படியான நுகர்வு கூட எடை அதிகரிப்பிற்கு வழிவகுக்கும். இது பல ஆரோக்கிய குறைபாடுகளை ஏற்படுத்தும்.
ஆலிவ் எண்ணெயின் நன்மைகளை பெற , அதை எப்போதும் அதிக சூடாக்கி உபயோகப் படுத்தாதீர்கள். எண்ணெயில் பொரிக்கும் உணவுகளை செய்ய ஆலிவ் எண்ணெயை பயன்படுத்த வேண்டாம். பெரும்பாலும் காய்கறி சாலட் , சப்பாத்தி , உப்புமா போன்ற உணவுகளில் குறைவாக சேர்த்து பயன்படுத்தினால் நன்மையாக இருக்கும்.