
தற்போது உள்ள காலக்கட்டத்தில் எடைக் குறைப்பது என்பது பலருக்கும் பெரும் சவாலாக உள்ளது. எடைக் குறைக்க பல வழிகளை முயற்சிக்கிறோம். அதில் ஒரு வழி தான் OMAD அல்லது Warrior Diet ஆகும். சமீபத்தில் பாலிவுட் நடிகரான ஷாருக்கான் இந்த டயட்டை தான் பின்பற்றி பிட்டாக இருப்பதாக கூறியிருந்தார். இதைப்பற்றி விரிவாக இந்தப் பதிவில் காண்போம்.
உடலில் உள்ள அதீத உடல் கொழுப்பை நாம் குறைக்க வேண்டும் என்றால் உடலில் கலோரி தட்டுப்பாட்டை ஏற்படுத்த வேண்டும். இதற்கு உணவில் Portion Control செய்ய வேண்டும். தினமும் இத்தனை கலோரிகள் சாப்பிட வேண்டும் என்று கணக்குப் போட்டு சாப்பிடுவது ஆகும். ஆனால், 90 சவீத மக்களால் இதுப்போன்று கணக்குப் போட்டு சாப்பிட முடியாது. இன்சுலினை கட்டுப்படுத்த மாவுச்சத்தை குறைக்கும் Paleo, Low carb உணவு முறை அல்லது சாப்பிடும் நேரத்தை குறுக்கி Intermittent fasting போன்ற முறைகளை பின்பற்றுவதன் மூவம் கலோரி தட்டுப்பாடு ஏற்பட்டு உடல் எடை நன்றாக குறையும்.
Intermittent fasting உடைய தீவிரமான டயட் முறை தான் OMAD ஆகும். ஒரு நாளைக்கு ஒரு வேளை மட்டும் உணவு எடுத்துக் கொள்வது தான் One meal a day முறையாகும். இதில் பிடித்த உணவை ஒரு வேளை ஒரு மணி நேரத்திற்குள் சாப்பிட்டு விட்டு மீதமிருக்கும் 23 மணி நேரம் விரதம் இருக்க வேண்டும். இந்த முறை ஆரோக்கியமானதா? இது சாத்தியமா? என்று கேட்டால், ஒரு நாளைக்கு ஒருவேளை மட்டும் சாப்பிடுவது எல்லோருக்கும் சாத்தியப்படாத முறையாகும்.
சிலருக்கு இது ஒத்துப் போகும். சிலர் Heavy ஆன உணவுகளை சப்பிடக்கூடிய பழக்கத்தைக் கொண்டிருப்பார்கள். இவர்களுக்கு இந்த உணவுமுறை ஒத்துப்போகும். ஒருவேளை உணவை சாப்பிட்டுவிட்டு மற்ற நேரம் பசியை கட்டுப்படுத்தும் தன்மை நமக்கு இயற்கையாகவே இருக்க வேண்டும். அப்படி செய்ய முடியாதவர்களுக்கு இது மிகவும் கஷ்டமாக இருக்கும். இந்த முறையை ஃபாலோ செய்தால் கண்டிப்பாக உடல் எடையை குறைக்க முடியும், கொழுப்பும் நன்றாக குறைவதாக கண்டுப்பிடித்துள்ளனர்.
இந்த OMAD முறை கொழுப்பை நன்றாக குறைக்கவும் அதனால் ஏற்படும் இன்சுலின் எதிர்ப்புத்தன்மையை குறைக்கவும் நன்றாகவே உதவி செய்யும். இதில் அதிகமாக ஆரோக்கியமில்லாத உணவு வகைகள் மற்றும் ஸ்நாக்ஸ் சாப்பிடுவதால் அடுத்த நாள் சர்க்கரையின் அளவு மற்றும் இன்சுலின் எதிர்ப்புத்தன்மை அதிகமாக இருப்பதாக சில ஆராய்ச்சி முடிவுகள் சொல்கின்றன.
OMAD முறையை ஒரு மணி நேரத்தில் எதை வேண்டுமானாலும் குப்பை போல உள்ளே தள்ளி விடுவதற்கான முறையாக கருதாமல் ஆரோக்கியமான உணவு முறைகளை எடுத்துக் கொள்ளும் போது மட்டுமே உடல் எடை குறைவதற்கு, கொழுப்பு குறைவதற்கு, இன்சுலின் குறைவதற்கு உதவி செய்யும். நல்ல புரதங்கள், நார்ச்சத்து உணவுகள், பழங்கள், காய்கறிகளை எடுத்துக் கொள்ளலாம்.
18 வயதிற்கு கீழ் உள்ளவர்கள், கர்ப்பிணி பெண்கள், டையாபிடிஸ் போன்ற பிரச்னைகளுக்கு மருந்து எடுத்துக் கொள்பவர்கள் இந்த முறையை பின்பற்ற வேண்டாம். எந்த மருத்துவ பிரச்னைகளும் இல்லாதவர்கள் உடல் எடைக் குறைக்க வாரம் ஒருமுறை அல்லது இருமுறை முயற்சி செய்துப் பார்க்கலாம். தேவையான புரதம், நார்ச்சத்து எடுத்துக் கொள்ளும் உணவில் இல்லை என்றால் தசை இழப்பு, ஊட்டச்சத்து குறைப்பாடு ஏற்படுவற்கும் வாய்ப்பு உண்டு என்பதை மறக்க வேண்டாம்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)