
நம்மில் பலர் உடல் ஆரோக்கியத்திற்காக நம் வீட்டில் உள்ள அஞ்சறைப் பெட்டியில் உள்ள சோம்பு, சீரகம், வெந்தயம் போன்றவற்றை நீரில் ஊறவைத்து சாப்பிடுவது உண்டு. அது மட்டும் இன்றி இன்னும் சிலர் காலையில் எலுமிச்சை நீரை, உப்பு, அல்லது தேன் கலந்து குடிப்பார்கள். இது போன்று ஆரோக்கியத்தை மேம்படுத்த ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான பழக்கங்களை அதிகாலையில் செய்வார்கள்.
அதுவும் சீரகம், ஓமம் ,சோம்பு (Health drink) ஆகிய மூன்றையும் ஊறவைத்த நீரை காலையில் எழுந்ததும் குடிப்பதால், உடலின் ஆரோக்கியத்தை எவ்வாறு மேம்படுத்தலாம் ? அதன் நன்மைகள் என்ன என்பதை பார்ப்போம்.
1. செரிமான சக்தி மேம்படும்.
ஓமம், சீரகம் ,சோம்பு ஆகிய மூன்றிலுமே செரிமான ஆரோக்கியத்திற்கு தேவையான சத்துக்கள் உள்ளன. அதில் சீரகம் செரிமான அமிலத்தின் உற்பத்தியை அதிகரிக்கிறது. ஓமம், அஜீரணக் கோளாறு வருவதை தடுக்கிறது. சோம்பு, வாய்வு மற்றும் வயிற்று உப்புசத்தை தடுக்க உதவுகிறது.
இப்படிப்பட்ட மூன்று விதைகளையும் நீரில் ஊற வைத்து ஒன்றாக எடுக்கும் போது செரிமானம் தொடர்பான பிரச்னைகள் தடுக்கப்படுவதோடு, செரிமான சக்தி சிறப்பாக நடைபெறும்.
2. எடை இழப்பை சரி செய்யும்
சீரகம், சோம்பு / ஓமம் ஊற வைத்த நீரை தினமும் காலையில் குடித்து வந்தால், உடல் எடையில் பெரிய மாற்றத்தை காணலாம். ஏனெனில், சீரகம் மற்றும் ஓமம் மெட்டபாலிசத்தை அதிகரிக்கிறது.
சோம்பு உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும் செயல்முறையை அதிகரிக்கிறது. இந்த மூன்றும் கலந்த நீரை குடித்து போதுமான உடற்பயிற்சி செய்தால் மற்றும் டயட்டை மேற்கொண்டு வரும்போது எடை இழப்பை உறுதி செய்து உடலில் நல்ல மாற்றத்தை காணலாம்.
3. சரும ஆரோக்கியத்திற்கு நல்லது
உங்கள் சரும ஆரோக்கியத்தை இயற்கையாக மேம்படுத்த விரும்பினால், முதலில் உடலில் நடக்கும் செயல்முறைகளை சீராக்க வேண்டும். அதுவும் செரிமானம் சீராக நடைபெற்று உடலில் மெட்டபாலிசம் சிறப்பாக இருந்தால் சருமம் ஆரோக்கியமாகவும், பொலிவோடும் இருக்கும்.
முக்கியமாக சோம்பு மற்றும் சீரகத்தில் உள்ள அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் சருமத்தில் உள்ள ஏற்படும் பிரச்னைகளை சரி செய்து சரும ஆரோக்கியத்தை உள்ளிருந்து மேம்படுத்த உதவுகிறது. எனவே, இந்த நீரை காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் சரும ஆரோக்கியமும் மேம்படும்.
4. குடல் ஆரோக்கியம், நோய் எதிர்ப்பு சக்தி மேம்பட
சோம்பு, சீரகம், ஓமம் ஆகிய மூன்றிலும் நார்ச்சத்து இரும்பு சத்து மற்றும் வைட்டமின்கள் நிறைய உள்ளன. இவை செரிமானத்தை மேம்படுத்த உதவுவது மட்டுமின்றி குடல் நுண்ணுயிர்களை மேம்படுத்த உதவுகிறது. ஒருவருக்கு உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருந்தால் நோய் எதிர்ப்பு சக்தி மேம்படும்.
எனவே, இந்த மூன்று விதைகளை ஊற வைத்த நீரை தினமும் குடித்து வரும் போது, அது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து அடிக்கடி நோய் வராமல் தடுக்கப்படுகிறது.
5. உடல் சுத்தமாக வைக்க
நம் உடலை சுத்தமாக வைத்துக் கொள்ள சோம்பு, சீரகம், ஓமம் ஊற வைத்த நீர் பெரிதும் உதவுகிறது. இதில் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் ஆன்ட்டி பாக்டீரியல் பண்புகள் அதிகம் உள்ளன. இந்த நீரைக் குடிக்கும் போது அது கல்லீரலின் செயல்பாட்டை மேம்படுத்தி உடலையும் சுத்தமாக வைத்துக் கொள்ள உதவுகிறது மற்றும் நாள் முழுவதும் உடல் சுறுசுறுப்பாக ஆற்றலுடன் செயல்பட உதவுகிறது.
இந்த Health drink தயாரிக்கும் முறை
ஒரு பாத்திரத்தில் ஒரு ஸ்பூன் சீரகம், ஒரு ஸ்பூன் சோம்பு, ஒரு ஸ்பூன் ஓமம் எடுத்து அதில் நீரை ஊற்றி இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். மறுநாள் காலையில் எழுந்ததும் நீரை கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி கொள்ளவும். பின்பு அதை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும் சுவைக்கு தேன் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து குடிக்கலாம்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)