வியக்க வைக்கும் வெங்காயத்தாள் மற்றும் வெங்காயப் பூ மருத்துவம்!

Onion leaf
வெங்காயத்தாள்

த்தனை நாடுகள், எத்தனை மனிதர்கள், எத்தனை சமையல்கள் என அத்தனையிலும் மாற்றம் கண்டாலும் வெங்காயம் என்னும் ஒரு விஷயத்தில் மட்டும் மாற்றம் காணவே முடியாது. காரணம், சமையலின் அடிப்படை தேவைக்கும் ருசிக்கும் வெங்காயம் அவசியமாகிறது. வெங்காயத்தில் உள்ள ப்ரோபனேதியல் ஆக்சைடை இனிப்பு, மணம் மற்றும் சுவையான பிஸ்ப்ரோபெனைல் டைசல்பைடாக மாற்றுவதால் வெங்காயத்தின் ருசி நமக்கு பிடித்தமானதாகிறது.

வெங்காயத்தில் பெரிய வெங்காயம், சின்ன வெங்காயம், வெள்ளை வெங்காயம் என பல வகைகள் உண்டு. இவை ஒவ்வொன்றிலும் பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளன. வெங்காயம் முழு விளைச்சல் அடைவதற்கு முந்தைய நிலையில் நமக்கு கிடைப்பது வெங்காயத்தின்  பிரதிகள்தான் வெங்காயத் தாள்கள் மற்றும் வெங்காயப் பூக்கள். இவையும் நமக்கு பல்வேறு  நன்மைகளைத் தருகிறது.

நீளத்தண்டுகளாக மேலே பசேலென்று கீழே சற்று வெண்மையாக நறுக்கினால் வெங்காய மணம் கொண்ட  வெங்காயத்தாளில் வைட்டமின் சி, பி2 மற்றும் தயமின் உட்பட பல்வேறு வைட்டமின் சத்துக்கள் நிறைந்துள்ளன. மேலும், கால்சியம், செம்புச்சத்து, இரும்புச்சத்து, மெக்னீசியம், மாங்கனீசு, பாஸ்பரஸ், பொட்டாசியம், செலீனியம், துத்தநாகம், கார்போஹைட்ரேட், புரதச்சத்து, நார்ச்சத்து, பீட்டா கரோடீன் சத்துக்கள் இதில் அடங்கி இருக்கிறது. குறைந்த கலோரிகளே இருக்கும் இதில் நார்ச்சத்து நிறைந்திருப்பதால் ஜீரண மண்டலம் நன்றாக வேலை செய்ய உதவுகிறது. மேலும், வெங்காயத்தாள் கீல்வாதம் மற்றும் ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நல்ல மருந்தாகவும் விளங்குகிறது.

வெங்காயத் தாள்களில் உள்ள புரதம், கொழுப்புச்சத்தினைக் குறைக்கிறது. இதிலுள்ள சல்பர் சத்துக்கள் சர்க்கரையைக் கட்டுப்படுத்தி நோயாளிகளுக்கு சிறந்த நிவாரணம் தருகிறது. வைட்டமின் A கண் சம்பந்தப்பட்ட பிரச்னைகளை முன்கூட்டியே தடுக்கவும், வைட்டமின் K எலும்புகளை வலுவாக வைத்திருக்கவும் உதவுகிறது. புற்றுநோய் செல்களை உருவாக்கும் நொதிகளின் வளர்ச்சியையும் தடுத்து நிறுத்துகிறது. இதில் உள்ள பெக்டின் என்னும் கார்போஹைட்ரேட் பெருங்குடல் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பை குறைக்கிறது.

Onion flower
வெங்காயப்பூ

இதேபோல், வெங்காயப் பூக்களும் நமக்கு பல வகைகளில் உதவுகின்றன. வெங்காயம், வெங்காயத் தாள்களைப் போலவே வெங்காயப் பூக்களிலும் நிறைந்துள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளுடன் இதிலுள்ள வைட்டமின் C நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கிறது. குளிர்ச்சி மிகுந்த இந்த வெங்காயப் பூக்கள், உடல் சூடு, எரிச்சல் போன்றவற்றுக்கு சிறந்த மருந்தாக உதவுகின்றன. வெங்காயத்தையும், வெங்காயப்பூக்களையும் பொடியாக நறுக்கி தயிரில் ஊறப்போட்டு சாப்பிட்டு வந்தால் மூலம் தொடர்புடைய தொந்தரவுகள் உடனடியாக குறையும்.

கடுமையான வயிறு வலி இருந்தால், ஒரு கைப்பிடியளவு வெங்காயப்பூக்களை, சுத்தம் செய்து, பாத்திரத்தில் போட்டு, அரை டம்ளர் தண்ணீர் விட்டு வேகவிட வேண்டும். இது நன்றாக வெந்ததும், இறக்கி ஆறவைத்து சிறிதளவு உப்பு சேர்த்து சாப்பிட்டால் வயிற்றுவலி பறந்துவிடும். கூடவே குடலில் தேங்கிக்கிடக்கும் வாயு, நச்சுக்களை இந்த பூக்கள் அகற்றுகின்றன என்கிறது மருத்துவம்.

இதையும் படியுங்கள்:
காற்று மாசுபாடு கற்றுத் தரும் பாடம்!
Onion leaf

மேலும், பற்கள், கண்கள் பலம் பெறவும் இந்த பூக்கள் உதவுகின்றன. வெங்காயம், வெங்காயப்பூக்கள் இரண்டிலுமே சம அளவுக்கு சாறு எடுத்து, வாய் கொப்பளித்தால் பல் வலி நீங்கி, ஈறுகள் சம்பந்தப்பட்ட நோய்களும் குணமாகும் என்கின்றனர். இதுபோன்ற ஏராளமான மருத்துவ வழிமுறைகளில் இந்த வெங்காயத் தாள்கள் மற்றும் பூக்களைப் பயன்படுத்தலாம்.

இத்தனை நன்மைகள் கொண்ட வெங்காயத்தாள், வெங்காயப் பூவை கிடைக்கும் போது நிச்சயம் வாங்கி பொரியல், துவையல்,  கடைசல்,  சாம்பாரில் சேர்த்தல் என ஏதாவது ஒரு வகையில் சமையலில் பயன்படுத்தி உண்டு  வந்தால் பலவித மருத்துவப் பயன்களை அடைந்து நலமுடன் வாழலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com