

கேன்சர் எனப்படும் புற்றுநோய் பல வருடங்களுக்கு முன்னிபிருந்தே மனிதர்களை தாக்கும் குணப்படுத்த முடியாத ஒரு வகை நோயாக இருந்து வந்துள்ளது. தற்காலத்தில் கேன்சரை குணப்படுத்தவும் அந்நோய் வராமல் தடுக்கவும் ஆராய்ச்சிகள் மூலம் பலவகையான மருத்துவ சிகிச்சை முறைகள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன.
இங்கு நாம் ஓரல் கேன்சர் (Oral cancer) எனப்படும் வாய்ப் புற்றுநோய் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.
வாய்ப் புற்றுநோய்க்கு முக்கிய காரணியாய் இருப்பது புகையிலை. புகையிலையை வாயில் அடக்கி வைத்துக் கொண்டிருப்பவர்களின் கன்னத்துப் பகுதியில் தசைகள் நாளடைவில் வீக்கமடைகின்றன. அதுவே, பிறகு கேன்சராக மாறிவிடும் வாய்ப்பை உண்டாக்கி விடுகிறது.
அடுத்ததாக வருவது சிகரெட். சிகரெட் புகையானது, சிகரெட் பிடிப்பவரின் வாய்ப் பகுதி திசுக்கள், நாக்கு, ஈறு, நாக்கின் அடிப்பகுதி என வாய் முழுவதும் மட்டுமின்றி தொண்டையின் பின் புறமும் ஒரு அடுக்காக படிந்து விடுகிறது. தொடர்ந்து புகை பிடிக்கும் பழக்கத்தை பின் பற்றும்போது, வாய்க்குள் உண்டாகும் வீக்கங்கள் குணமாகாமல் புற்றுநோயின் தாக்குதலுக்கு பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பித்து வைத்துவிடுகின்றன.
அப்போது செல்களின் செயல்பாடுகள் மந்தமடைகின்றன. செல்களில் மரபணு மாற்றமும் உண்டாகிறது. இம்மாற்றம் சில நேரங்களில் புற்றுநோய் தோன்றவும் காரணமாகி விடுகிறது. சிகரெட் புகையில் எழுபது வெவ்வேறு வகையிலான இரசாயனப் பொருட்கள் கலந்திருப்பதாக கூறப்படுகிறது. அவற்றில் ஒன்று புற்றுநோய் உண்டாக்கும் தன்மை (Carcinogenic) கொண்டுள்ளது. அந்த குறிப்பிட்ட இரசாயனப் பொருளானது வாய் பகுதி DNA செல்களில் பாதிப்பை உண்டுபண்ணுகிறது. அவ்வாறு பாதிப்படைந்த செல்கள் இரண்டிரண்டாக பிரிந்து, பின்பு அவை கணக்கில் அடங்கா எண்ணிக்கையில் பெருகி கேன்சர் நோய் பரவலுக்கு வழி வகுக்கின்றன.
ஓரல் கேன்சர் (Oral cancer) உண்டாவதற்கான பிற காரணிகள்:
அதிக நேரம் சூரிய கதிர்களின் தாக்குதலுக்குள்ளாகி இருப்பது, மனித பாப்பிலோமா வைரஸ் (HPV) தொற்று, மரபணு, ஊட்டச் சத்து குறைபாடுகள், மது அருந்துதல், ஒருவரின் வயது முதிர்ச்சி மற்றும் புகையிலை சேர்த்து தயாரிக்கப்படும் பிற பொருட்களை அதிகளவில் பயன்படுத்துதல் ஆகியவையும் வாய்ப் பகுதி திசுக்களில் பாதிப்பை உண்டுபண்ணி புற்றுநோய் உண்டாக காரணமாகின்றன.
புகையிலைப் பொருட்களின் பயன்பாட்டை முழுவதுமாக நிறுத்தினாலே வாய், தொண்டை மற்றும் உணவுக் குழாய் புற்றுநோய் வரும் அபாயம் பாதியாகக் குறைந்துவிடும். அடுத்த 10-20 ஆண்டுகளில் புற்றுநோய் வரும் அபாயம் முற்றிலுமாக நீங்கி விடும். சிகரெட் போல் எரிக்கப்பட்டு புகை உண்டாக்காதவாறு, வேறு வகையில் பயன்படுத்தப்படும் ஸ்னஃப் (snuff), ஸ்னுஸ் (snus), மெல்லும் புகையிலை (Chewing tobacco), குட்கா (Gutka), கைனி (Khaini) மற்றும் ஜர்தா (Zarda) போன்ற புகையிலைப் பொருட்களில், ஓரல் மற்றும் உணவுக் குழாய் புற்றுநோய் உள்ளிட்ட வேறு பல வகையான புற்றுநோய்களை உண்டுபண்ணக் கூடிய இரசாயனப் பொருட்கள் அதிகம் உள்ளன. குறிப்பாக புகையிலைப் பொருட்களில் காணப்படும் tobacco-specific nitrosamines (TSNAs) என்பது மிகவும் கவலைக்குரிய நைட்ரோசமைன் வகைகளாகும். அவை திசுக்களின் மீது நேரடி தொடர்பில் பல மணி நேரம் தொடர்ந்து இருப்பதால் புற்றுநோய் செல்கள் சுலபமாக உருவாகி மற்ற இடங்களுக்கும் பரவ ஆரம்பித்து விடும்.
Snuff மற்றும் மெல்லும் புகையிலையுடன் ஒப்பிடுகையில், e-சிகரெட் பிடிப்பதில் பாதிப்பு அதிகமில்லை என்று கூறப்படுகிறது. இருந்தாலும் அதன் மீது நடத்தி வரும் ஆய்வுகள் இன்னும் முடிவுக்கு வரவில்லை என்று தெரிய வந்துள்ளது. அதனால் e-சிகரெட் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்குமா இல்லையா என்பதை உறுதிப் படுத்தி சொல்ல முடியாத நிலையே தற்போது நிலவுகிறது.
புகையிலைப் பொருட்களுடன் ஆல்கஹாலும் எடுத்துக் கொள்வது ஓரல் கேன்சர் வரும் வாய்ப்பை அதிகரிக்கச் செய்கிறது. எப்படியெனில், ஆல்கஹால் ஒரு கரைப்பானாக செயல்பட்டு புகையிலைப் பொருட்களில் உள்ள புற்றுநோய் உருவாக்கும் வேதிப் பொருளின் செயல் பாட்டை வேகமடையச் செய்கிறது. அதன் மூலம் அந்த இரசாயனம் சுலபமாக திசுக்களினுள் ஊடுருவிச் சென்று, வாய் மற்றும் தொண்டைப் பகுதிகளில் புற்றுநோயின் உருவாக்கத்திற்கு சாதகமான சூழலை உண்டுபண்ணிக் கொடுக்கிறது.
புகையிலைப் பொருட்களின் பயன்பாட்டை குறைத்தால் மட்டும் போதாது. அவற்றை முற்றிலும் தவிர்ப்பதின் மூலமே ஓரல் கேன்சர் வராமல் பாதுகாப்பாக வாழ முடியும். பல் மருத்துவரை குறிப்பிட்ட இடைவெளிகளில் கலந்தாலோசிப்பதும், தினமும் இரண்டு முறை பல் துலக்குவதும் சுத்தமும் சுகாதாரமும் பெற உதவும்.