நமது உடலில் உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை உள்ள அனைத்து உறுப்புகளுக்கும் ஏதோ ஒரு வகையில் முக்கியத்துவம் உள்ளது. நமது ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை பராமரிப்பதில் சில உடல் உறுப்புகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இந்த உறுப்புகளால்தான் நாம் என்றைக்கும் சுறுசுறுப்பாக மற்றும் தெளிவாக இருக்க முடிகிறது. அப்படிப்பட்ட சில முக்கியமான உறுப்புகளில் ஏற்படும் பிரச்னைகளுக்கு நாமும் ஒரு வித காரணமாக இருப்போம். அவை என்னென்ன உறுப்புகள் என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.
இதயம்:
இதயம்தான் நம் உடலின் மைய உறுப்பு ஆகும். இது தமனிகள் (Arteries) வழியாக ஆக்ஸிஜனேற்றப்பட்ட ரத்தத்தை ஓய்வில்லாமல் பம்ப் செய்து நம் உடலில் உள்ள ஒவ்வொரு செல்லையும் வளர்க்க உதவுகிறது.
நம்மால் உண்டாகும் உபாதைகள்:
தவறான உணவு, உடற்பயிற்சியின்மை, புகைபிடித்தல் மற்றும் அதிக மன அழுத்தம் ஆகியவை இதயத்தின் செயல்பாடுகளில் தொந்தரவை விளைவிக்கும். வயது மூப்பு மற்றும் நாம் செய்யும் சில தவறுகளால் மார்பு வலி, சோர்வு மற்றும் ஒழுங்கற்ற இதயத் துடிப்பு போன்ற அறிகுறிகளை உணர்வோம்.
மூளை:
100 பில்லியனுக்கும் அதிகமான நரம்புகளைக் கொண்ட மூளை, நமது முழு உடல் அமைப்பையும் ஒழுங்கமைக்கிறது. இது நமது எண்ணங்கள், உணர்ச்சிகள் மற்றும் உடல் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்துகிறது.
நம்மால் உண்டாகும் உபாதைகள்:
தெளிவற்ற மனநலம், போதிய தூக்கமின்மை மற்றும் தலையில் ஏற்படும் காயங்கள் ஆகியவை மூளையின் செயல்பாட்டை சற்று பாதிக்கலாம். அதன் அறிகுறிகளாக தலைவலி, சோர்வு, நினைவாற்றல் பிரச்னைகள் மற்றும் மனநிலை மாற்றங்களை நாம் எதிர்கொள்வோம்.
நுரையீரல்:
இந்த பஞ்சுபோன்ற உறுப்புதான் ஆக்ஸிஜன் பரிமாற்றத்தை எளிதாக்குகிறது. அவை அசுத்தங்களை வடிகட்டி நமது ரத்த ஓட்டத்திற்குப் புதிய காற்றை வழங்குகின்றன.
நம்மால் உண்டாகும் உபாதைகள்:
புகைப்பிடித்தல், மாசுபாடு மற்றும் வேகமாக சுவாசிக்கும் முறை நுரையீரல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். நம் நுரையீரல் பாதிக்கப்பட்டு இருக்கிறது என்பதற்கான அறிகுறிகளாக தொடர்ந்து இருமல், மூச்சு விட சிரமம் அல்லது மூச்சுத்திணறல் போன்றவற்றை எதிர்கொள்வோம்.
சிறுநீரகங்கள்:
சிறுநீரகங்கள் நம் உடலில் உள்ள கழிவுகளை வடிகட்டி, உடலின் திரவ சமநிலையை ஒழுங்குபடுத்துகிறது. அதே நேரம் அவை ரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்த உதவுகின்றன.
நம்மால் உண்டாகும் உபாதைகள்:
நீரிழப்பு(Dehydration), அதிகப்படியான உப்பு உட்கொள்வது மற்றும் சிறுநீர் கழிக்கும் நேரங்களில் நாம் உணரும் பிரச்னை அறிகுறிகளைப் புறக்கணிப்பது ஆகியவை சிறுநீரக செயல்பாட்டைப் பாதிக்கின்றன. இதனால் உடலில் தேவையற்ற வீக்கம், சோர்வு, சிறுநீரின் நிறத்தில் மாற்றம் மற்றும் உயர் ரத்த அழுத்தம் போன்றவற்றை எதிர்கொள்வோம்.
கல்லீரல்:
கல்லீரல் நமது ரத்தத்தில் உள்ள நச்சை நீக்கி ஊட்டச்சத்துக்களை உடல் முழுக்க அனுப்புகிறது. தேவையான அத்தியாவசிய புரதங்களையும் (Proteins) உற்பத்தி செய்கிறது.
நம்மால் உண்டாகும் உபாதைகள்:
குடிப்பழக்கம், தவறான உணவு முறை மற்றும் வைரஸ் தொற்றுகள் கல்லீரலை சேதப்படுத்தும். இதில் நிகழும் பிரச்னைக்கான அறிகுறிகளாக மஞ்சள் காமாலை, சோர்வு, வயிற்று வலி மற்றும் செரிமான பிரச்னைகள் போன்றவற்றை எதிர்கொள்வோம்
அட்ரீனல் சுரப்பிகள் (Adrenal Glands):
இந்தச் சுரப்பிகள் மன அழுத்தம் மற்றும் ஹார்மோன் உற்பத்தியை நிர்வகிக்கின்றன. நாள்பட்ட மன அழுத்தம், தூக்கமின்மை மற்றும் பாதிக்கப்பட்ட தூக்கம், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை அட்ரீனல் செயல்பாட்டை முற்றிலும் பாதிக்கிறது.
நினைவில் கொள்ளுங்கள், சமச்சீர் உணவு, வழக்கமான உடற்பயிற்சி, போதுமான தூக்கம் மற்றும் மன அழுத்தத்தை நிர்வகிப்பது ஆகியவை இந்த முக்கிய உறுப்புகளின் ஆரோக்கியத்தை நம் வாழ்நாள் முழுவதும் பாதுகாக்கும். இதற்கு முதலில் நீங்களே உங்கள் உடலிடம் கேட்டு பாருங்கள், எல்லாம் கச்சிதமாக செயல்படுகிறதா என்று, அப்படி இல்லை என்றால் உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள், உங்கள் வாழ்க்கையை சிரமமின்றி சந்தோஷமாக வாழுங்கள்.