குடல், நம் உடலின் மிக முக்கிய உறுப்புகளில் ஒன்றாகும். இது உணவை செரித்து, ஊட்டச்சத்துக்களை உறிஞ்சி, நோய்க் கிருமிகளில் இருந்து நம்மை பாதுகாக்கிறது. ஆரோக்கியமான குடல் நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு அடித்தளமாக அமைகிறது. இந்நிலையில், சமீப காலமாக குடல் ஆரோக்கியத்திற்கு கொலாஜன் மிகவும் முக்கியமானது என்ற கருத்து பரவலாக பேசப்படுகிறது.
கொலாஜன் என்பது நம் உடலில் இயற்கையாகவே காணப்படும் ஒரு புரதம். இது தோல், எலும்பு, மூட்டுகள் போன்ற பல உறுப்புகளின் முக்கிய கட்டமைப்புக்கு உதவுகிறது. ஆனால், வயதாகும்போது நம் உடலில் கொலாஜன் உற்பத்தி குறையலாம். இதனால், சருமம் சுருங்குவது, மூட்டு வலி போன்றவை ஏற்படும். அதுமட்டுமின்றி குடல் ஆரோக்கியத்திலும் இது தாக்கத்தை ஏற்படுத்தும்.
குடலும் கொலாஜனும்: குடலின் உட்புறம் ஒரு மெல்லிய திசுவால் மூடப்பட்டிருக்கும். இந்த திசு ஒரு லேயர் போல அமைந்திருக்கும். இது உணவை செரித்து, ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த திசு படலத்தின் முக்கிய கூறுகள் கொலாஜ்னால் ஆனவை. கொலாஜன் இந்த திசு படலத்திற்கு வலிமை, நெகழ்ச்சித் தன்மையை அளிக்கிறது. இதனால், உணவு செரிமானத்தின்போது ஏற்படும் அழுத்தத்தை குடல் தாங்கிக் கொள்ளும்.
கொலாஜனும் குடல் ஆரோக்கியமும்:
கொலாஜன், குடல் திசு படலத்தில் உள்ள இடைவெளிகளை நிரப்பி, குடலின் தன்மையை வலுப்படுத்துகிறது. இதனால், நோய்க்கிருமிகள் நச்சுப் பொருட்கள் போன்றவை குடலை ஊடுருவ முடியாமல் தடுக்கப்படும். குடலில் ஏற்படும் புண்கள் குணமடைய கொலாஜன் அவசியம். இது புண்களை ஆற்றி குடல் திசுக்களை மீண்டும் உருவாக்க உதவுகிறது.
கொலாஜன் குடல் திசுக்களின் உறிஞ்சும் திறனை அதிகரிப்பதால், உணவில் உள்ள ஊட்டச்சத்துக்கள் நன்கு உறிஞ்சப்படுகின்றன. இதன் அழற்சி எதிர்ப்பு பண்புகள், குடலில் ஏற்படும் அழற்சியைக் குறைத்து, குடல் திசுக்களை ஆரோக்கியமாக வைத்திருப்பதில் பெரும் பங்காற்றுகிறது.
கொலாஜனை எவ்வாறு பெறுவது? பெரும்பாலான உணவுகளில் கொலாஜன் இருக்கிறது. அது என்னென்ன என்பதை நாம் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். மீன், முட்டை, பழங்கள், கோழி, காய்கறிகள் போன்ற உணவுகளில் கொலாஜன் அதிக அளவில் உள்ளது. அல்லது மருத்துவரின் பரிந்துரை பெயரில் கொலாஜன் சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக் கொள்ளலாம்.
கூடல் ஆரோக்கியத்தில் கொலாஜன் பெரும் பங்கு வகிப்பதால், இதை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம். இது குறித்து மேலும் தகவல்களைத் தெரிந்துகொள்ள, தகுந்த மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.