
மூலிகை மருத்துவம் நமது பாரம்பரிய மருத்துவ முறைகளில் ஒன்று. இதில் பயன்படுத்தப்படும் மூலிகைகளில் ஓரிதழ் தாமரை (Orithal Thamarai - Hybanthus) எனும் தாவரத்திற்கு தனி இடம் இருப்பதாக சொல்லப்படுகிறது. தாமரை இதழ்களை அறிவோம். அதென்ன ஓரிதழ் தாமரை? அப்படி என்ன நன்மைகள் இருக்கிறது இதில்? வாருங்கள் பார்ப்போம்.
பொதுவாக தாமரை நீரில் வளரும். ஆனால் அதன் பெயர் கொண்ட இது வயல்வெளி மற்றும் சதுப்பு நிலங்களில் வளரக்கூடிய தன்மை கொண்டது. சிறு செடியினத்தைச் சேர்ந்த இந்த மூலிகைக்கு 'ரத்தின புருஷ்' என்ற பெயரும் உள்ளது.
இதன் பூ சிவந்த நிறமும் நடுவில் நாமம் போன்றும் காணப்படும். இதன் காய் ஒற்றைக்கல் மூக்குத்தி போலிருக்கும். ஓரிதழ் தாமரையின் இலை, தண்டு, பூ, வேர், காய் மட்டுமன்றி முழுச் செடியுமே மருத்துவக்குணம் வாய்ந்தது.
ஓரிதழ் தாமரை என்று பொதுவாக அழைக்கப்படும் ஹைக்ரோபிலா ஆரிகுலாட்டா என்ற மருத்துவ தாவரத்திலிருந்து தயாரிக்கப்படும் மூலிகை காப்ஸ்யூல்கள், இயற்கையின் குணப்படுத்தும் சக்திக்கு ஒரு சான்றாகிறது என்கின்றனர்.
தகுந்த இயற்கை மருத்துவ ஆலோசனை பெற்று இந்த ஓரிதழ் தாமரை சப்ளிமெண்ட்டுகளை பயன்படுத்தி பல உடல் நல பாதிப்புகளிலிருந்து நிவாரணம் பெறலாம் என்கிறது மருத்துவ குறிப்புகள்.
இந்த மூலிகை தாவரம் தரும் நன்மைகள் என்ன?
அடாப்டோஜெனிக் பண்புகள் நிறைந்த இது உடல் மன அழுத்தத்திற்கு ஏற்ப மாற உதவுகிறது. மேலும் உடல் சகிப்புத்தன்மையை அதிகரித்து சோர்வு, பலவீனத்தை நீக்கி ஆற்றல் மற்றும் உயிர்ச்சக்தியை அதிகரிக்கிறது.
இதன் மிகவும் பிரபலமான நன்மைகளில் ஒன்று இனப்பெருக்க ஆரோக்கியத்தில் அவற்றின் நேர்மறையான பலன்களாகும். ஆண்களுக்கு விந்தணு எண்ணிக்கை, இயக்கம் மற்றும் பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சிகளை ஒழுங்குபடுத்துவதற்கும் உதவுகின்றன.
பாரம்பரிய மருத்துவத்தில் குறிப்பாக கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களை நச்சு நீக்கப்பயன்படுகிறது. இந்த தாவரத்தில் இயற்கையான டையூரிடிக் பண்புகள் இருப்பதால் ஆரோக்கியமான சிறுநீர் ஓட்டத்தை ஊக்குவித்து நச்சுகளை வெளியேற்ற உதவுகின்றன மற்றும் சிறுநீரக கற்கள் மற்றும் சிறுநீர் தொற்று அபாயத்தைக் குறைப்பதாக சொல்லப்படுகிறது.
ஓரிதழ் தாமரை இரத்த சர்க்கரை அளவை ஒழுங்குபடுத்த உதவக்கூடும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அவை இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துகின்றன மற்றும் குளுக்கோஸ் சமநிலையை பராமரிக்க உடலின் இயற்கையான திறனை மேம்படுத்தும்.
இதிலுள்ள கால்சியம் மற்றும் பிற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் வலுவான எலும்புகள் மற்றும் ஆரோக்கியமான மூட்டுகளை பராமரிக்க உதவுகிறது. அவை மூட்டுவலி அல்லது ஆஸ்டியோபோரோசிஸ் வலியிலிருந்து நிவாரணம் அளித்து இயக்கத்தை மேம்படுத்துகின்றன.
இது வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து செரிமானத்தை மேம்படுத்தும் திறன் மற்றும் எடையைக் கட்டுப்படுத்த விரும்புவோருக்கு பருமனைக் குறைக்க சிறந்த தேர்வாக அமைகிறது.
சரி இதனால் தீமைகளே இல்லையா?
சக்தி வாய்ந்த மூலிகையான ஓரிதழ் தாமரைக்கு நேரடியான தீமைகள் எதுவும் இல்லை, ஆனால் அதன் தவறான அல்லது அளவுக்கு அதிகமான பயன்பாடு தீமையை தரும். இதை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தினால், உடலுக்கு குளிர்ச்சியைக் கொடுத்து, சளி, இருமல் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். மேலும், இது சில ஆண்களுக்கு ஆண்மை குறைபாட்டை அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது. சிலருக்கு ஒவ்வாமையையும் ஏற்படுத்தக்கூடும்.
ஆகவே சூரணம் அல்லது கேப்ஸ்யூல்களாக கிடைக்கும் ஓரிதழ் தாமரையை மருந்தாகப் பயன்படுத்துவதற்கு முன்பு இயற்கை மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது அவசியம்.