'டேபென்டடால், ட்ரெமடால், பென்டாசோசைன், நைட்ராசேபாம், கோடெய்ன்' போன்ற வலி நிவாரண மருந்துகள் மீதான விழிப்புணர்வை தற்போது அரசு கையிலெடுத்து வருகிறது. இணைய வழியில் எளிதாக கிடைக்கும் இந்த மாத்திரைகளால் பாதிக்கப்படும் இளைய சமுதாயத்தின் நலன் கருதி இந்தப் பிரச்னைக்கு தீர்வு காண முயல்கிறது.
உடலில் வலி என்பது இயற்கையானது. எப்படி வந்ததோ அப்படியே போய்விடும். நீண்ட கால வலிகளுக்கு அவசியம் மருத்துவம் தேவைதான். ஆனால் எந்த வலி என்றாலும் உடனே கடைகளில் கிடைக்கும் வலி நிவாரணி மாத்திரைகளை தொடர்ந்து பயன்படுத்தி தற்காலிக நிவாரணம் பெறுவது எவ்வளவு ஆபத்து தெரியுமா?
உதாரணமாக வலி நிவாரணிகளில் ஒன்றான டேபென்டாடோல் தீங்கு குறித்து இங்கு காண்போம்.
டேபென்டாடோல் என்பது மிதமான முதல் கடுமையான வலிக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு ஓபியாய்டு வலி நிவாரணி. ஓபியாய்டு சில நேரங்களில் ஒரு போதைப்பொருள் என்றும் மருத்துவம் கூறுகிறது.
மேலும் கடுமையான சுவாசப் பிரச்சினைகள் அல்லது பக்கவாத இலியஸ் எனப்படும் குடல் அடைப்பு இருந்தால் இந்த மருந்தைப் பயன்படுத்தக்கூடாது.
உணவுடன் அல்லது இல்லாமல் ஒவ்வொரு நாளும் ஒரே நேரத்தில் ஒரு முழு கிளாஸ் தண்ணீருடன் டேபென்டாடோலை எடுத்துக் கொள்ளவேண்டும். மாத்திரையை நசுக்கவோ, உடைக்கவோ அல்லது திறக்கவோ கூடாது, ஆபத்தான அளவைத் தவிர்ப்பதற்காக அதை முழுவதுமாக விழுங்கவும், என்றெல்லாம் அந்த மாத்திரையை பயன்படுத்துவதில் பல கட்டுபாடுகள் உள்ளன.
டேபன்டாடோல் மலச்சிக்கலை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது என்றும், போதைக்காக இதன் பொடியை உள்ளிழுக்க அல்லது நரம்புக்குள் செலுத்த ஒருபோதும் மாத்திரையை நசுக்க வேண்டாம் என்றும் மீறினால் மரணத்திற்கு கூட வழிவகுக்கும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
வலி மாத்திரைகளை தருமுன் பாதிக்கப்பட்டவரின் வலியின் தீவிரம், சிகிச்சைக்கு எதிர்வினை, முந்தைய வலி நிவாரணி சிகிச்சை அனுபவம் மற்றும் அடிமையாதல், துஷ்பிரயோகம் போன்ற தவறான பயன்பாட்டிற்கான ஆபத்து காரணிகளைக் கருத்தில் கொண்டுதான் மருத்துவர்கள் சிகிச்சையைத் துவங்குகின்றனர்.
இதேபோன்ற எதிர் விளைவுகளையே தருகிறது மற்ற வலி நிவாரணிகளும். இனி நமது வீட்டில் யாரேனும் வலி நிவாரணி மாத்திரைகளை பயன்படுத்தினால் அதைப் பற்றிய சந்தேகங்கள் மற்றும் அளவு போன்றவற்றை மருத்துவரிடம் கேட்டு அறியுங்கள். உடல் நலனைப் பாதித்து போதைக்கு அடிமையாக்கி கடைசியில் உயிருக்கே ஆபத்தாக முடியும் வலி நிவாரணி மாத்திரைகளை கூடுமானவரை புறக்கணிப்பது நல்லது.
முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்.