
இந்தியர்களால் அதிக அளவில் பயன்படுத்தப்படும் பாமாயில் மலிவான விலையில் கிடைக்கும் எண்ணெயாகும். நாம் தயாரிக்கும் பெரும்பாலான உணவுகளில் இதை சேர்க்கிறோம். ஆனால், இந்த மலிவான விலைக்குப் பின்னால் நமது ஆரோக்கியம் பணயம் வைக்கப்படுகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? குறிப்பாக, மாரடைப்பு ஏற்படுவதற்கு பாமாயில் பயன்பாடு ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. அது சார்ந்த உண்மைகளை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
மலேசியா மற்றும் இந்தோனேஷியாவில் இருந்து மிகக் குறைந்த விலையில் இறக்குமதி செய்யப்படும் பாமாயில், பல எண்ணெய்களுடன் கலக்கப்பட்டு சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், நாம் வாங்கும் பெரும்பாலான எண்ணெயில் பாமாயில் கலந்திருப்பது தெரியாமலேயே அதை வாங்கி உட்கொள்கிறோம்.
ஏன் ஆபத்தானது?
பாமாயில் ஏன் ஆபத்தானது என்பதற்கு பல காரணங்கள் உண்டு. குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால், இதில் அதிக அளவு டிரான்ஸ்ஃபேட் உள்ளது. இந்த கொழுப்பு நம் உடலால் எளிதில் கரைக்கப்படாமல், தமனிகளில் படிந்து அடைப்பை ஏற்படுத்தும். இதனால், மாரடைப்பு, பக்கவாதம் போன்ற மோசமான நோய்கள் ஏற்படும் வாய்ப்புள்ளது.
நம் உடலின் சிறந்த இயக்கத்திற்கு நல்ல கொழுப்பு மிகவும் முக்கியம். ஆனால், பாமாயில் நல்ல கொழுப்பின் அளவைக் குறைத்து கெட்ட கொழுப்பின் அளவை அதிகரிக்கிறது. இது இதய நோய்கள், உயர் ரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். நீங்கள் தொடர்ச்சியாக அதிக அளவில் பாமாயில் பயன்படுத்தி வந்தால், உங்களது உடல் எடை அதிகரிக்கும். எனவே, முடிந்தவரை பாமாயில் சேர்க்கப்படாத உணவுகளை சாப்பிடுவது நல்லது.
பாமாயிலை தொழிற்சாலைகளில் சுத்திகரிக்கும்போது அவற்றில் பல்வேறு விதமான ரசாயனங்கள் கலக்கப்படுகின்றன. இந்த ரசாயனங்கள் எண்ணெயில் இருக்கும் கொஞ்ச நஞ்ச ஊட்டச்சத்துக்களையும் அழித்து ஆரோக்கியமற்றதாக மாற்றிவிடுகின்றன.
இயற்கை எண்ணெய்கள்:
பாமாயிலுக்கு மாற்றாக இயற்கை எண்ணெய்களை நாம் பயன்படுத்த வேண்டும். உதாரணத்திற்கு தேங்காய், கடலை, கடுகு, எள் போன்ற எண்ணெய்களைப் பயன்படுத்துவதால், அதில் நிறைந்துள்ள இயற்கை ஊட்டச்சத்துக்கள் நமக்குக் கிடைக்கும். மேலும், இவற்றில் நல்ல கொழுப்புகள் இருப்பதால் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன. இதனால், இதய நோய் ஏற்படும் அபாயம் குறைகிறது.
இதுமட்டுமின்றி, எண்ணெய்களை வாங்கும்போது சில விஷயங்களை நாம் கருத்தில்கொள்ள வேண்டியது அவசியம். பேக்கேஜ் செய்யப்படும் எண்ணெய்கள் வாங்குவதைத் தவிருங்கள். உள்ளூரிலேயே தயாரிக்கப்படும் உற்பத்தியாளர்களிடமிருந்து தரமான எண்ணெய் வாங்கி பயன்படுத்துவது நல்லது. இயற்கை எண்ணெய்களின் ஆரோக்கிய நன்மைகளைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள். இதன் மூலமாக அதை நாம் அதிகமாகப் பயன்படுத்த வேண்டும் என்ற தெளிவு உங்களுக்குக் கிடைக்கும். எந்த எண்ணெய் தேர்வு செய்வது எனத் தெரியவில்லை என்றால் ஒரு நல்ல மருத்துவரை அணுகி ஆலோசிப்பது நல்லது.