முக்கியமாக, மூத்த குடிமக்கள் குடிப்பதை வீட்டிலிருப்போர் தடுக்காதீர்கள்.
ஐயோ, கடவுளே, இது என்ன யோசனை?
ஆமாம், உங்கள் பயத்தை நிவர்த்தி செய்வதற்கு முன் இந்தக் கேள்விக்கு பதில் சொல்லுங்கள்:
வயதானவர்களுக்கு மனக் குழப்பங்கள் வருகின்றன. இதற்கு என்ன காரணம் அல்லது காரணங்கள்?
கவலைகள்? அல்சைமர் (நினைவு தப்புதல்)? வீட்டிலுள்ளோர் சரியாகப் பராமரிக்காதது?
இவையும் காரணமாக இருக்கலாம், ஆனால் எல்லாவற்றையும் விட மிக முக்கியமான காரணம், அவர்களுக்கு ஏற்படும் நீரிழப்புதான்!
முதியோர் நல மருத்துவர் ஒருவர் இவ்வாறு காரணம் சொல்லும்போது அது சிந்தனைக்குரியதாகத்தான் இருக்கிறது.
பொதுவாக அறுபது வயதுக்கு மேற்பட்டவர்கள், பணி ஓய்வு பெற்று பெரும்பாலும் வீட்டிலேயே முடங்கி விடுகிறார்கள். சிலர் காலையில் நடைப் பயிற்சி மேற்கொள்வது, மாலையில் தன் வயது தோழர்களுடன் பேசுவது என்று பொழுதைக் கழித்தாலும், இடையிடையே செய்ய வேண்டிய மிக முக்கியமான ஒரு பழக்கத்தை மேற்கொள்வதில்லை. அது – குடிப்பது. ஆமாம், தண்ணீர் குடிப்பதுதான்!
தொலைக்காட்சி நிகழ்ச்சி பார்ப்பது, செய்தித்தாள் வாசிப்பது, புத்தகம் படிப்பது, அலமாரியை ஒழிப்பது மாதிரியான வேலைகளில் ஈடுபடுவது என்றிருக்கும்போது, தாகமே எடுத்தாலும், ‘இதோ இங்கேதான் தண்ணீர் இருக்கிறதே, கொஞ்ச நேரம் கழித்துக் குடித்துக் கொள்ளலாம்' என்ற அலட்சியத்தால் நீர் உட்கொள்வதைத் தள்ளிப் போடுகிறார்கள். மாத்திரை, மருந்து உட்கொள்ள வேண்டியவர்கள் அதை விழுங்கத் தேவையான சிறிதளவு தண்ணீர் அருந்துகிறார்களே, அதோடு உடலின் நீத்தேவை பூர்த்தியாகி விட்டதாகவே நினைத்துக் கொள்கிறார்கள். வீட்டிலிருப்பவர்களும் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாததால் முதியவர்கள் நீரிழப்பு என்ற ‘நோயை‘ அடைகிறார்கள்.
நீரிழப்பு நோய் மிகக் கடுமையானது மற்றும் அது முழு உடலையும் பாதிக்கிறது. இவ்வாறு நீரிழப்பு ஏற்படுவதால், அது திடீர் மனக் குழப்பம், இரத்த அழுத்த பாதிப்பு, இதயத் துடிப்பு அதிகரிப்பு, ஆஞ்சினா (மார்பு வலி), கோமா, ஏன் மரணம் கூட ஏற்படலாம்.
தண்ணீர் என்றில்லை, ஏதேனும் பானங்களையும் அவர்கள் அருந்தலாம், இவ்வாறு திரவ வகைகளை உட்கொள்ள மறக்கவோ, அலட்சியமாக ஒதுக்கவோ செய்பவர்கள் 60ஐக் கடந்தவர்களாகவே இருக்கிறார்கள். இதனால்தான் கட்டுரை ஆரம்பத்தில், ‘குடிப்பதைத் தடுக்காதீர்கள்‘ என்று சொல்லப்பட்டிருக்கிறது.
பொதுவாக நம் உடலில் நீரின் அளவு 50% க்கும் அதிகமாக இருக்க வேண்டும். ஆனால் 60க்கு மேற்பட்டவர்கள் தம் உடலில் நீர் பற்றாக்குறையை உணர்வதில்லை. அதனால் எளிதில் நீரிழப்புக்கு ஆளாகிறார்கள், இவர்கள் வெளிப்பார்வைக்கு ஆரோக்கியமாகத் தோன்றினாலும், நீர் அளவுக் குறைவால் எதிர்வினைகள் தோன்றும்; வேதியியல் மாற்றங்கள் உருவாகும். இதனால் முழு உடலும் பாதிக்கப்படலாம்.
ஆகவே, வயதானவர்கள் திரவங்களை அடிக்கடி குடிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். பழச்சாறுகள், தேநீர், தேங்காய் தண்ணீர், சூப் மற்றும் நீர்ச்சத்து அதிகம் உள்ள தர்பூசணி, முலாம்பழம், பீச் மற்றும் அன்னாசி பழங்களையோ அல்லது அவற்றின் சாறையோ அருந்தலாம். அல்லது, இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை ஒரு தம்ளர் தண்ணீராவது குடிக்க வேண்டும்.
குடும்பத்தார் இவர்களுக்குத் தொடர்ந்து திரவங்களைக் கொடுக்க வேண்டும். அதே நேரத்தில், அவர்களை கண்காணிக்கவும் செய்யுங்கள். திரவங்களை எடுத்துக் கொள்ளாத அவர்கள், கோபப்படுவது, கவனக் குறைவு கொள்வது, மூச்சுத் திணறல் உண்டாவது என்பன போன்ற அறிகுறிகள் அவர்களிடம் தெரிந்தால், இவை நீரிழப்பால் ஏற்படுபவை என்று ஊகிக்கலாம்.
உடலுக்குத் தேவையான அளவு நீர் உட்கொண்டாலேயே வயோதிக காலத்தில் வரக்கூடிய பல நோய்களை அண்ட விடாமல் செய்துவிடலாம்.
ஆகவே, 60ஐக் கடந்தவர்களே, கட்டாயம் குடியுங்கள்; வீட்டாரே அவரைக் குடிக்கக் கட்டாயப்படுத்துங்கள், சரியா?