ஆப்பிள் சாறு வினிகர் என்பது, ஆப்பிள் பழத்திலிருந்து சாற்றை நொதிக்க வைத்து தயாரிக்கப்படுகிறது. இந்த செயல் முறையில் ஆப்பிள் சாற்றில் உள்ள சர்க்கரையை ஆல்கஹாலாக மாற்றப்படுகிறது. இந்த ஆல்கஹால் பின்னர் அசிட்டிக் அமிலமாக மாற்றப்படுகிறது. ஆப்பிள் சீடர் வினிகரில் தாதுக்கள், வைட்டமின்கள், பாலிபினால்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் போன்ற நன்மை பயக்கும் சேர்மங்கள் நிறைந்துள்ளன. பொதுவாக ஆப்பிள் சீடர் வினிகரில் சில ஆரோக்கிய நன்மைகளும் இருக்கத்தான் செய்கின்றன. கல்லீரல் கொழுப்பு நோய் உள்ளவர்கள், அதிக எடை கொண்டவர்கள், பசியின்மை உள்ளவர்கள் எல்லாம் ஆப்பிள் சீடர் வினிகரை தண்ணீரில் கலந்து குடித்து பயன் பெறுகின்றனர்.
எடை குறைக்க விரும்புவர்கள் பெரும்பாலும் ஆப்பிள் சீடர் வினிகரை பயன்படுத்துகின்றனர். இது எடை குறைப்பில் நல்ல பலன் தருவதாக பலரும் நினைக்கின்றனர். தற்போது பலரும் ஆப்பிள் சீடர் வினிகர் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் என்று நம்புகின்றனர். இந்த வினிகர் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்கும் என்று கருதுகின்றனர். நீரிழிவு நோயாளிகள் பலரும் இப்போது ஆப்பிள் சீடர் வினிகரை பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.
ஆனால் மருத்துவர்கள் நீரழிவு நோயாளிகள் ஆப்பிள் சீடர் வினிகர் பயன்படுத்துவதில் கவனமாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்துகின்றனர். வினிகரில் உள்ள அசிட்டிக்கு அமிலம் சர்க்கரை நோயாளிகளுக்கு பலவித பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றும் எச்சரிக்கின்றனர்.
சில ஆய்வு முடிவுகளின் படி ஆப்பிள் சீடர் வினிகர் இன்சுலின் உணர்திறனை அதிகரிக்கிறது. உணவுக்குப் பிறகு ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பதை குறைக்கிறது. இதனால் இந்த வினிகர் சர்க்கரை நோயை கட்டுப்படுத்துவதில் நன்மை பயக்கும் என்றாலும் ,இன்சுலின் அல்லது நீரிழிவு நோய்க்கான மருந்துகளை எடுத்துக் கொள்பவர்களுக்கு சில அபாயத்தையும் கொடுக்கும். இது அபாயமான அளவில் இரத்த சர்க்கரையை குறைக்கும். இதன் காரணமாக ஒருவருக்கு தலைசுற்றல், வாந்தி, மயக்கம் போன்ற உடல்நல பிரச்சனைகள் ஏற்படலாம்.
இது தவிர ஆப்பிள் சீடர் வினிகரை பயன்படுத்துவதால் அது நீரழிவு மருந்துகளுடன் வினைபுரிந்து இரைப்பை கோளாறுகள், வயிற்றுப் புண்கள், குடல் புண்கள் ஆகியவை ஏற்பட காரணமாக இருக்கும். ஆப்பிள் சீடர் வினிகர் தேவைக்கும் அதிகமாக பயன்படுத்தி விட்டால் குமட்டல், வாந்தி, மிதத்தல் போன்ற வயிறு சார்ந்த பிரச்சனைகளையும் ஏற்படுத்தக்கூடும்.
இது ரத்த ஓட்டத்தில் சர்க்கரை சேரும் அளவை கடுமையாக பாதிப்பதால் ரத்தத்திற்கு தேவையான சர்க்கரை கிடைக்காமல், நீரழிவு நோயாளி கடுமையான சோர்வால் பாதிக்கப்படுவார். இது அவருக்கு படபடப்பு உள்ளிட்ட சில இதய பிரச்சினைகளையும் ஏற்படுத்தும்.
பொதுவாக நீரழிவு நோய் மற்றும் ரத்த அழுத்தம் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்ட நபர்கள், தங்கள் வழக்கமாக எடுத்துக் கொள்ளும் மாத்திரைகளைத் தவிர புதிதாக வேறு ஏதேனும் வைத்தியத்தை நாடுவதை தவிர்க்க வேண்டும். ஒரே நேரத்தில் இரண்டு வகையான வைத்தியங்கள் ஒரே நோய்க்கு பயன்படுத்தும் போது அது அவரின் உடல் நிலையை கடுமையாக பாதிக்கக்கூடும். இதனால் மருத்துவரின் தக்க ஆலோசனை பெற்ற பிறகு ஆப்பிள் சீடர் வினிகரை குறைந்த அளவில் பயன்படுத்தலாம்.