இந்தியர்கள் காரத்திற்காக மிளகாய் பயன்படுத்தத் தொடங்கியதற்கு முன்பு வரை மிளகுதான் அதிகமாக பயன்படுத்தப்பட்டது. மிளகில் நமக்குத் தெரியாத பல மருத்துவ குணங்கள் மறைந்துள்ளது. குறிப்பாக சளித் தொந்தரவு பிரச்சனைகளுக்கு மிளகு அருமருந்தாகப் பார்க்கப்படுகிறது. இயற்கையாகவே நமது உடலுக்கு நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரித்து ஆரோக்கியமாக வைத்திருக்கும் ஆற்றல் மிளகிற்கு உண்டு.
பனிக்காலத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலானவர்களுக்கு நெஞ்சு சளி பாதிப்பு ஏற்படும். இத்தகைய நெஞ்சு சளியை வெளியேற்ற அவ்வப்போது இருமல் வந்து கொண்டே இருக்கும். இதற்கு காலா காலமாக நாம் பயன்படுத்தி வருவது மிளகுதான். குறிப்பாக இரவு நேரங்களில் நெஞ்சில் கட்டியிருக்கும் சளியால் நாம் அதிக அவதிக்குள்ளாவோம்.
இதுபோன்ற பிரச்சனைக்கு இருமல் மருந்து அந்த அளவுக்கு பலனளிக்காது. ஆனால் மார்புச்சளி பாதிப்பு உள்ளவர்கள், நான்கு மிளகை பொடித்து, தேனில் குழைத்து, கால் டம்ளர் தண்ணீரில் கலந்து இரவில் குடித்தால், சளி அனைத்தும் வெளியேறி இருமலை உடனடியாக நிறுத்தும். குழந்தைகளுக்கு இதை கொடுக்கும் போது கவனமாக இருங்கள். ஒரு வயதுக்கும் குறைவான குழந்தைகளுக்கு இதைக் கொடுக்க வேண்டாம்.
அலர்ஜி பாதிப்பு உள்ளவர்களும் மிளகை பயன்படுத்தி அலர்ஜியை சரி செய்ய முடியும். அலர்ஜியால் சிலருக்கு மூக்கடைப்பு, தும்மல், தோல் அரிப்பு போன்றவை ஏற்படும். இத்தகைய பாதிப்பு உள்ளவர்கள் பத்து மிளகை வாயில் போட்டு அப்படியே மென்று விழுங்கி விடுங்கள். உடலில் உள்ள நச்சுக்களை நீக்கும் பண்பு மிளகிற்கு உண்டு என்பதால், எவ்விதமான அலர்ஜி பாதிப்பாக இருந்தாலும் உடனடியாக சரியாகிவிடும்.
மிளகை நேரடியாக சாப்பிட முடியாதவர்கள் அதை கசாயமாக செய்தும் சாப்பிடலாம். சிலருக்கு தலையில் வட்ட வட்டமாக முடி கொட்டி புழுவெட்டு பாதிப்பு ஏற்படும். அவர்கள் மிளகு, வெங்காயம் இரண்டையும் அரைத்து அதன் மீது பூசினால் சரியாகும். பனிக்காலத்தில் நெஞ்சு சளி பாதிப்பு ஏற்படாமல் இருக்க எல்லா வயதினரும் உணவில் மிளகு சேர்த்துக் கொள்ளுங்கள். ஆஸ்துமா நோய் பாதிப்பு உள்ளவர்கள் மிளகை தினசரி உணவில் சேர்ப்பது நல்லது.
இப்படி ஏதாவது ஒரு விதத்தில் மிளகை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளும்போது, சளித்தொல்லை அலர்ஜி போன்ற பாதிப்புகளில் இருந்து விரைவில் விடுபடலாம்.