வெளிப்படையாக சில மூலிகைகளின் பெயர்களை சொல்ல மாட்டார்கள். அதில் ஒன்றுதான் வசம்பு. இதை 'பேர் சொல்லாதது' என்றுதான் பெரும்பாலும் கூறுவார்கள். இந்த வசம்பில் அதிசயத்தக்க அளவில் நிறைந்த மருத்துவ குணம் அடங்கியுள்ளது. வசம்பை ஆங்கிலத்தில் ஸ்வீட் ஃபிளாக் என அழைப்பார்கள். உலகில் எத்தனை மருந்துகள் வந்தாலும் குழந்தைகளின் அசௌகரியத்தை போக்க இந்த வசம்பை தவிர வேறு நல்ல மருந்து கிடையாது. வசம்பின் பயன்கள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.
குழந்தைகள் இருக்கும் வீடுகளில் இருக்க வேண்டிய முக்கியமான மருந்து இதுவாகும். குழந்தைகளின் பசியின்மையை போக்கும். சிறு தொற்றுகள் கூட வராமல் தடுக்கும். இதை ‘பிள்ளை வளர்ப்பான்’ எனக் கூறுவார்கள். வசம்பின் முனையை காமாட்சி அம்மன் விளக்கில் சுட்டு, அதை சுடும் பாலில் குழைத்து குழந்தைகளுக்கு கொடுப்பார்கள். இதனால் குழந்தைகளுக்கு பசியின்மை, வயிறு உப்புசம், சிறிய தொற்றுகள் கூட வராமல் தடுக்கும்.
கைக்குழந்தைகளாக இருந்தால் வாரத்தில் ஒரு நாள் இந்த வசம்பை விளக்கில் சுட்டு , ஒரு களிமண் அகலில் முதலில் வசம்பை இழைக்க வேண்டும். அப்போது அதிலிருந்து கரி போன்று பவுடர்கள் வரும். தேவையான அளவு எடுத்து கொண்ட பிறகு, அதில் தாய்மார்கள் சிறிது தாய்ப்பாலை விட்டு அதை இழைத்துக்கொள்ள வேண்டும். பிறகு அந்தக் கலவையை பாலாடையில் போட்டு குழந்தைகளுக்கு வாயில் ஊற்றி விட வேண்டும். பிறகு மீதமுள்ளதை குழந்தையின் தொப்புள், மாறு கால் மாறு கையில், உள்புறம் இட வேண்டும். நெற்றியிலும் ஒரு பொட்டு வைத்துவிட்டால் காற்றுக் கருப்பு ஏதும் அண்டாது என்பார்கள்.
அதேபோல், குழந்தைகளுக்கு இருக்கும் திக்குவாய் நீங்கவும் இந்த வசம்பு உதவுகிறது. இந்த வசம்பை பொடி செய்து அருகம்புல் சாறு எடுத்து 30 நாட்கள் கொடுத்து வந்தால் திக்குவாய் குணமாகும். மேலும், வசம்பை வீட்டு வாசலில் கட்டி வைத்தால் கெட்ட சக்திகள் உள்ளே வராது என்பார்கள். அதுபோல் குழந்தைகளுக்கு வசம்பால் காப்பும் போட்டுவிடுவார்கள். வசம்பை கிருமிநாசினியாகவும் பயன்படுத்தலாம். பசி, சோம்பலை நீக்க இந்த வசம்பை பெரியவர்களும் சிறுவர்களும் சாப்பிடலாம். வசம்பு பொடியை தேனுடன் கலந்து கொடுத்தால் குழந்தைகளுக்கு வயிற்று பிரச்னைகள் நீங்கும். ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பாலில் கலந்து கொடுக்கலாம்.
வசம்பு மற்றும் அதிமதுரத்தில் இருந்து தயாரிக்கப்பட்ட கசாயத்தை கொடுத்தால் இருமல், வயிற்று வலி போன்ற குழந்தைகளின் நோய்கள் தீரும்.இது குழந்தைகளுக்கு ஏற்படும் வயிறு பிரச்னைகளை சரி செய்ய உதவுகிறது. வசம்பை அடிவயிற்றில் தடவினால் வாயுத் தொல்லை நீங்கும்.
குழந்தைகளுக்கு சரியான மூளை வளர்ச்சி, பேச்சுத் திறன், சிறந்த பார்வை திறன் போன்றவற்றுக்குத் தீர்வை கொடுக்கிறது இந்த வசம்பு. இதை எரித்து பிறகு தேங்காய் எண்ணெயில் வைத்து குழைத்து கண் மை போல் பயன்படுத்தலாம். இதன் மூலம் திருஷ்டி போகும். வசம்பு பொடியை முகத்திற்கு அதிகம் பயன்படுத்துவதில்லை. ஆனால், சரும நோய்களுக்கும் சரும தடிப்பு போன்றவற்றைத் தடுக்க வசம்பு மிக மிக நல்லது. இதை அதிகம் பயன்படுத்தக் கூடாது. அப்படி செய்தால் பக்கவிளைவுகளை ஏற்படுத்தும்.
வசம்புத் துண்டை சிறிதளவு வாயில் போட்டுச் சுவைத்தால் வாயில் நீர் பெருகும். அப்போது ஒரு அனல் எழும். இதனால் தொண்டைக் கம்மல், இருமல் ஆகியவை நீங்கி விடும். இரண்டு டம்ளர் நீரை நன்றாகக் காய்ச்சி அது கொதிக்கின்ற போது சிறிது வசம்பு போட்டு ஊறவைத்து பிறகு வடிகட்டி அந்த நீரை குழந்தைகளுக்குக் கொடுக்க, அவர்களின் பேதி, காய்ச்சல் ஆகியவை தடுக்கப்படும். இதையே பெரியவர்கள் தொண்டை கமறல், இருமலுக்குப் பயன்படுத்தி வரலாம்.
வசம்பு, சிறிதளவு காசுக்கட்டியையும் சேர்த்து நீர் விட்டு அரைத்துப் பற்று போட நாளடைவில் கீழ்வாத நோய்கள் அனைத்தும் சரியாகும். விஷக் காற்றால் நோய்கள் பரவும் காலத்தில் கொஞ்சம் வசம்பு எடுத்து வாயில் போட்டு மெல்லுவது உடலுக்கு நல்லது. சிறிதளவு வசம்பு எடுத்துக் கொண்டு அதை நெருப்பில் சுட்டு கரியாக்கி அதை தேன் கலந்து மூன்று முறை சாப்பிட வாந்தி நிற்கும், குன்ம நோய், மூலநோய், தொண்டை நோய் போன்றவை குணமாகும்.
வசம்புவை அளவாகப் பயன்படுத்தினால் அது நன்மையை அளிக்கும். குழந்தை பிறந்த பிறகு வசம்புவை பயன்படுத்தும்போது அளவாகப் பயன்படுத்த வேண்டும். இல்லையெனில் அது பக்கவிளைவையும் உண்டாக்கும்.