
மனிதர்களுக்கு ஏற்படும் பலவித உணர்ச்சிகளில் பொறாமையும் ஒன்று. தன்னை பிறருடன் ஒப்பிடும்போது வெளிப்படும் உணர்ச்சி இது. காதல், உறவுகள், நட்பு வட்டம் போன்றவற்றில் பொறாமை வெளிப்படும். இது இயற்கையான ஒரு உணர்ச்சியாக இருந்தாலும், உடல், மன ஆரோக்கியத்தில் மிகுந்த சக்தி வாய்ந்த விளைவுகளை ஏற்படுத்தும்.
பொறாமைக்கான காரணங்கள்:
பொறாமை யார் மீது வேண்டுமானாலும் ஏற்படலாம். ஒரு குடும்பத்தில் இருக்கும் இரண்டு குழந்தைகளில், ஒன்றுக்கு மற்றொன்றின் மீது பொறாமை ஏற்படக்கூடும் பெற்றோர் அதன் மீது அதிகமாக அன்பு செலுத்துகிறார்கள் என்ற எண்ணம் பொறாமையை தூண்டக்கூடும். வளர்ந்த மனிதர்களிடத்திலும் இந்த பொறாமை உணர்ச்சி இருக்கிறது. தங்களுக்குப் பிடிக்காதவர்களுக்கு கிடைக்கும் வெற்றி, பதவி, அதிகாரம், வசதி வாய்ப்புகளின் காரணமாக அவர்கள் மீது பொறாமை உண்டாகலாம். சிலர் தங்களது நண்பர்களுக்கு வெற்றி கிடைத்தாலும் மனம் பொறுக்காமல் அதனால் அவர்கள் மீது பொறாமைப்படுவார்கள். ஆனால் அது மிகுந்த தீங்கு தரும் விளைவுகளை ஏற்படுத்தும்.
பொறாமையின் விளைவுகள்:
சகோதரர்களுக்குள் மற்றும் நண்பர்களுக்குள் ஏற்படும் பொறாமையானது அந்த உறவை, நட்பையே கெடுத்து விடும். இதனால் அவர்களின் நன்மதிப்பையும் அன்பையும் இழக்க நேரிடும். பொறாமை உணர்ச்சியை திறம்பட நிர்வகித்தால் தான் உறவுகளையும் நட்புகளையும் நல்ல முறையில் பராமரிக்க முடியும். பிறர் மீது பொறாமைப்படும் போது உடல் மற்றும் உளவியல் ரீதியான மாற்றங்கள் ஏற்படுகின்றன.
உடலியல் மாற்றங்கள்:
பொறாமை உடலின் மன அழுத்த எதிர்வினையைத் தூண்டுகிறது. ஒருவர் பொறாமைப்படும் போது அவர்களது உடலில் அட்ரினலின் மற்றும் கார்டிசோல் போன்ற மன அழுத்த ஹார்மோன்களின் அளவு அதிகரிக்கும். இதனால் இதயத்துடிப்பு மற்றும் ரத்த அழுத்தம் அதிகரிக்கும். சுவாசம் ஆழமற்றதாகவும் வேகமாகவும் மாறும். இதனால் படபடப்பு, சோர்வு, எரிச்சலூட்டும் மனநிலை, அதிக வியர்வை போன்றவை ஏற்படும்.
பொறாமை உணர்ச்சியை வெளிப்படுத்தும் போது மூளையின் உணர்ச்சி மையங்கள் பாதிக்கப்பட்டு எதிர்வினை ஆற்றத் தொடங்கும். மகிழ்ச்சி மற்றும் உற்சாகமான உணர்வுகளை தூண்டும் டோபமைன் அமைப்பு பொறாமை என்ற உணர்ச்சியால் பாதிக்கப்படுகிறது. இதனால் சிக்கலான உணர்ச்சிகளின் கலவைக்கு வழி வகுக்கும்.
உளவியல் ரீதியான மாற்றங்கள்:
பொறாமைப்படும் போது அது பதட்டம், கோபம், சோகம் மற்றும் வெறுப்பு போன்ற உணர்ச்சிகளுக்கு வழிவகுக்கும். இது பகுத்தறிவு சிந்தனையை மூழ்கடித்து தர்க்க ரீதியான முடிவுகளை எடுப்பதை கடினமாக்கும். தங்களுக்குப் பிடித்தவர்களையே வெறுப்பதற்கு வழிவகுக்கும். பொறாமையை வார்த்தைகளாக அவர்களிடம் வெளிப்படுத்தும் போது அவர்கள் மனம் காயம் அடைவது மட்டுமல்லாமல், அந்த உறவில் ஒரு சிக்கல் எழுகிறது, விரிசல் விழுகிறது.
பொறாமை என்பது இயற்கையான உணர்ச்சியாக இருந்தாலும் அதை மிக பாதுகாப்பாகக் கையாள வேண்டும். அதை ஆரம்பத்திலேயே கிள்ளி எறிய வேண்டும். இல்லை என்றால் அது உடலை மனதையும் பாதிப்பதோடு யார் மீது பொறாமை உண்டாயிற்றோ அவர்களது நட்பிலும் உறவிலும் விரிசல் விழும்படி செய்துவிடும். எனவே பொறாமையை விலக்கி ஆரோக்கியமான போட்டி மனப்பான்மையையைக் கடைபிடிப்போம்.