உடல் ஆரோக்கியம் - இந்த 8ல் இருக்கட்டும் கவனம்!

 Physical health
Physical health

குழந்தை பருவம் முதல் முதியவர் ஆகும்வரை ஒவ்வொரு நிலையிலும் ஒவ்வொரு விதமான நோய் மனிதனை தாக்குகிறது. எனவே நோயின்றி வாழ நாம் தேவையான முன்னெடுப்புகளை எடுத்துக் கொள்ளவேண்டும்.

1. உணவு:

நாம் உட்கொள்ளூம் உணவுகளில் சரிவிகித உணவை உட்கொள்வதின் மூலம் நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும். வைட்டமின்கள், தாதுக்கள் கொண்ட உணவுகளை உண்ண வேண்டும். இதில் பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், பால் பொருட்கள்,  புரதம் நிறைந்த உணவுப் பொருட்கள் அடங்கும். இவைகள்  நல்ல ஊட்டச்சத்துடன் நமக்கு சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்க வல்லன. இயற்கை விவசாயத்தில்  குறைவான பூச்சிக்கொல்லிகள் உபயோகப்படுத்தப்படுத்தப்படுகின்றன. ஆர்கானிக் உணவு  என அழைக்கப்படும் இவற்றை உண்பதால் நமக்கு புத்துணர்ச்சி கிடைக்கிறது. இவ்வுணவை உட்கொண்டு நம்மால் நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ முடியும்.

2. உடற்பயிற்சி:

அன்றாடம் உடற்பயிற்சி செய்வதை ஒரு வழக்கமாக கொள்ள வேண்டும். நம் உடல்நலத்திற்காக தினம் ஒரு மணி நேரத்தையாவது ஒதுக்க வேண்டும். வேகமாக நடத்தல், நண்பர்களுடன் ஏதேனும்  ஒரு விளையாட்டை குழுவாக விளையாடுதல் போன்ற உடலியக்க செயல்பாடுகளில் ஈடுபடலாம். இதனால் நமது உடல் ஆரோக்கியமாகவும் கட்டமைப்போடும் இருக்கும். இவை நமது தசைகளை வலிமைப்படுத்தும். உடற்பயிற்சி நமது  திசுக்களுக்கு ஆக்ஸிஜனை கொண்டு சென்று நமது இதயத்தை திறம்பட செயல்பட உதவுகிறது. இதனால் ​​நாம் நமது அன்றாட வேலைகளைச் செய்வதற்கு அதிக ஆற்றலும் கிடைக்கிறது.

3. தூக்கம்:

நல்ல ஆரோக்யத்திற்கு நல்லத் தூக்கம் வேண்டும். நல்ல தூக்கம் என்பது படுக்கைக்குச் சென்றவுடன் 30 நிமிடங்களுக்குள் அல்லது அதற்கும் குறைவான நேரத்திற்குள் உறக்கத்தைப் பெறுவது. அவரவர் வயதிற்குப் பரிந்துரைக்கப்பட்ட மணிநேரத் தூக்கத்தைத்  நாம் பெறும்போது நம்மால் ஆரோக்கியமாக வாழ முடியும்.

4. தியானம்:

ஒரு நாளைக்கு 10 நிமிடங்களாவது தியானம் செய்வதை வழக்கமாக்கிக் கொள்ளுவது நல்லது. அதனால் மனதில் அமைதியை பெற முடியும். தியானம் செய்ய அமைதியான இடத்தைக் கண்டுபிடித்து, வசதியாக உட்கார்ந்து தியானத்தை தொடங்க வேண்டும். சுவாசப் பயிற்சியில் முழு கவனத்தை செலுத்த வேண்டும். இதன் மூலம் உடல், மனம் ஆகிய இரண்டையும் ஆரோக்கியமாய் நம்மால் வைத்திருக்க முடியும்.

5. காலமுறை பரிசோதனைகள்:

இரத்தத்தில் சர்க்கரை,உயர் இரத்த அழுத்தம் போன்றவை அதிக உடல் பருமன்  காரணமாக ஏற்படுபவை. மேலும் இவை இருதய நோய்க்கு இடமளிக்கும். எனவே, 40 வயது வரை ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் (18 வயதுக்கு மேற்பட்ட பெரியவர்களுக்கு) அதன் பிறகு ஒவ்வொரு ஒன்று முதல் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகும் காலமுறை பரிசோதனைகளைச் செய்து கொள்ள வேண்டும். பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை உட்கொள்பவர்கள் அடிக்கடி உடல் பரிசோதனை செய்து கொள்வது அவசியம். எடுத்துக் கொள்ளும் மருந்துகளில் மாற்றம் தேவைப்படலாம். இவ்வாறு செய்வதால் நோயின் தீவிரத்தைத் தடுத்து நீண்ட நாட்கள் நம்மால் ஆரோக்கியமாக வாழ முடியும்.

இதையும் படியுங்கள்:
சுறுசுறுப்பூட்டும் 5 வகை ஆரோக்கிய காலை உணவுகள்!
 Physical health

6. சுத்தம் சுகாதாரம்:

சுற்றுச்சூழலை சுத்தமாகவும், பசுமையாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க பல்வேறு வழிகளைக் கண்டறியலாம். நமக்குத்தேவையான உணவு வகைகளை நமது தோட்டத்திலேயே வளர்க்கலாம். வீட்டுக் கழிவுகளால் ஏற்படும் மாசுபாட்டைத் தவிர்க்க தேவையான முயற்சிகளை எடுக்க வேண்டும்.  

7. திட்டமிடல்:

காலை எழுந்ததும் என்ன செய்வது என்பதை திட்டமிட்டு தினமும் எழுந்ததும் இந்த வேலைகளை செய்துவிட வேண்டும். இதனால் நேரமும் கூடுதலாகக் கிடைக்கும். அவசர அவசரமாக எழுந்து டென்ஷனுடன் செய்ய வேண்டிய தேவையுமிருக்காது.

8. காலை உணவும் போதுமான தண்ணீரும்:

எந்த விஷயத்திற்காகவும் காலை உணவை சமரசம் செய்துகொள்ளாதீர்கள். அன்றைய நாளை சிறப்பாக்க வேண்டுமெனில் உடலில் ஆற்றல் வேண்டும். அதை உணவின் மூலம் மட்டுமே பெற முடியும். தினமும் போதுமான அளவு தண்ணீர் அருந்துவது நமது  தாகத்தை தீர்ப்பதோடு, உடலின் நச்சுக்களையும் வெளியேற்றி மற்ற உறுப்புகளுக்கு போதுமான ஆற்றலை அளிக்கிறது.

இவற்றை பின்பற்றினால் நம்மால் நெடுநாள் நலமாக வாழ முடியும். முயன்றுதான் பாருங்களேன்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com