‘தோள்பட்டை வலி தாங்க முடியல. ஒரு வாரமா பிசியோதெரபி ட்ரீட்மென்ட்டில் இருக்கேன். இப்போ கொஞ்சம் பரவாயில்லை’ என்று பலரும் கூறுவதைக் கேட்டிருக்கிறோம். மருத்துவத்தில் தற்போது தவிர்க்க முடியாத ஒரு சிகிக்சையாகி விட்டது, ‘பிசியோதெரபி’ (Physiotherapy) எனப்படும் இயன்முறை மருத்துவம்.
தற்காலத்தில் மருத்துவமனைகளுக்கு ஈடாக பிசியோதெரபி மையங்கள் இயங்குகின்றன. சரி, பிசியோதெரபி என்றால் என்ன? எலும்பு மூட்டு மற்றும் தசைகளின் இயக்கத்தில் பாதிப்பு ஏற்பட்டால், அவற்றை சரிசெய்து பராமரிக்கவும், மேம்படுத்தவும் உதவும் சிகிச்சைதான் பிசியோதெரபி. இந்தத் துணை மருத்துவ சிகிச்சையில் ஊசி, மருந்துகள் இல்லை என்பது சிறப்பு.
அவரவர் உடல் பாதிப்பிற்கு ஏற்ற உடற்பயிற்சி, தெரபியூடிக் மசாஜ் (Therapeutic Massage), வெப்ப சிகிச்சை, மின் சிகிச்சை போன்றவற்றை செய்து உடல் பாதிப்புகளின் அடிப்படையில் பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் ஒரு வழிமுறைதான் பிசியோதெரபி. உடலில் அடிபட்டு தசைகள் பிரள்வது , உடல் வலிகள் மற்றும் காயத்தின் தீவிரத்தைக் குறைக்கவும் இது உதவுகிறது.
பிசியோதெரபி சிகிச்சை எலும்பு மற்றும் மூட்டு (Orthopedic), நரம்பியல் (Neurology), இதயம் மற்றும் சுவாசம் (Cardio & Respiratory), குழந்தைகள் நலம் (Pediatrics), விளையாட்டு (Sports), முதியோர் (Geriatric) மறுவாழ்வு (Rehabilitation) உள்ளிட்ட பல்வேறு உடல் நலன்களில் முக்கியப் பங்கு வகிப்பதாக உள்ளது.
குறிப்பாக, எதிர்பாராத விதமாக உடலில் எலும்பு முறிவு ஏற்பட்டால், எலும்பு முறிவு மருத்துவர், முறிவின் தன்மையை ஆராய்ந்து அதன் தீவிரத்தின் அடிப்படையில் அறுவை சிகிச்சை அல்லது மாவுக்கட்டு போட பரிந்துரைப்பார். மாவுக்கட்டைப் பிரித்த பிறகு, பல நாட்கள் ஒரே நிலையில் இருந்ததால் தசைகளில் ஏற்படும் பிடிப்புகளைச் சரிசெய்யவும், அறுவை சிகிச்சைக்குப் பிறகு சரியான இயக்கம் மற்றும் இழந்த வலிமையைத் திரும்பப் பெறவும் பிசியோ தெரபி உதவுகிறது.
அதேபோல், முதியோர் நலத்தில் இந்த சிகிச்சை பெரும் பயன் தருகிறது. வயது மூப்பு காரணமாக எலும்புகள் வலுவிழந்து மூட்டுகள் தேய்மானம் அடையும். அதனால் ஏற்படும் வலியைப் போக்கவும், தேய்மானத்தைச் சரிசெய்யவும் பிசியோதெரபி அவசியம். இந்தச் சிகிச்சையைத் தொடர்ந்து அளித்தால்தான் பாதிக்கப்பட்ட மூட்டுகளை மீண்டும் செயல்பட வைக்க முடியும்.
மேலும், உடலில் தசைப்பிடிப்பு, சுளுக்கு பாதிப்புகளைச் சரிசெய்யவும் வலியைக் குறைக்கவும் ஐஎஃப்டி சிகிச்சை (IFT)) அளிக்கப்படுகிறது. இந்த முறையில் பாதிக்கப்பட்ட தசைநார்களை மீண்டும் அதே வலிமையுடன் செயல்பட வைக்கலாம். நரம்பு சார்ந்த நோய்களுக்கு பாதிப்பின் நிலையைப் பொறுத்து உடற்பயிற்சிகள் மூலமாகவும், சாதனங்கள் உதவியுடனும் தொடர் சிகிச்சையளிக்கப்படும்.
இதுபோன்ற பல முறைகளில் உடல் வலிகளை நீக்கும் பக்கவிளைவுகள் அச்சமற்ற இயன்முறை மருத்துவத்தை தேவை இருக்கும்போது பயன்படுத்தி வலியற்ற வாழ்வு பெறுவோம்.