இயற்கை மருத்துவ முறைகள் என்பது இன்று மட்டும் அல்ல, பல நூற்றாண்டுகளாக மனித சமூகத்துடன் இணைந்திருக்கும் ஒரு வாழ்வியல் நடைமுறையாகும். நம் முன்னோர் அன்றாட வாழ்வில் இயற்கை மூலிகைகளை உணவாகவும், மருந்தாகவும் சிறந்த முறையில் பயன்படுத்தி வந்துள்ளனர். அவர்களின் அறிவும் அனுபவமும் இன்று நாம் மறந்து கொண்டிருக்கும் இந்த வேகமான நவீன வாழ்க்கை முறையில், அவை மீண்டும் புதிய ஆற்றலுடன் முன்வந்து கொண்டுள்ளன.
அந்த வரிசையில், சிறந்த மருத்துவ குணங்களைக் கொண்ட ஒரு இயற்கை மூலிகை தான் பிரண்டை. நம் சமையலில் ஒரு எளிய துவையலாக மட்டுமல்லாமல், உடலின் பல்வேறு பிரச்சனைகளுக்கு நம்பிக்கைக்குரிய மருந்தாகவும் இது அறியப்படுகிறது. இந்தச் சிறு கொடிமரமானது நம் வீட்டுத்தோட்டங்களில் கூட வளரக்கூடியது, ஆனால் அதில் மறைந்திருக்கும் மருத்துவப் பெருமையை உணர்வோர் குறைவே. இந்நிலையில், உடல்நலத்திற்கு பலன்கள் தரும் பிரண்டையின் நன்மைகளை பார்ப்போம்.
எலும்பு சார்ந்த நன்மைகள்:
பிரண்டை எலும்பு சார்ந்த பிரச்சனைகளுக்கு சிறந்த மருந்தாகக் கருதப்படுகிறது. உடைந்த எலும்புகளை எளிதில் இணைக்கும் வகையில் இதில் சத்துக்கள் நிறைந்துள்ளன. எலும்பு முறிவு, எலும்பு தேய்மானம் போன்ற பிரச்சனைகளுக்கு இது ஒரு சிறந்த தீர்வாகும். மூட்டு வலி, கணுக்கால் வலி போன்றவற்றையும் இது நன்கு போக்க உதவுகிறது.
ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும் திறன்:
முட்டி மற்றும் கணுக்கால்களில் ஏற்படும் ரத்த கட்டுக்களை சரி செய்யும் ஆற்றல் பிரண்டைக்கு அதிகளவில் உள்ளது. இதனால் ரத்த ஓட்டம் சீராகும், வீக்கம் குறையும்.
செரிமானத்திற்கு உதவுகிறது:
செரிமானக் கோளாறு உள்ளவர்கள் பிரண்டை துவையல் செய்துக்கொண்டு வாரத்தில் 2-3 முறை சாப்பிடுவது நல்லது. இது குடல் இயக்கத்தை சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது.
கொழுப்பை குறைக்கும் சக்தி:
உடலில் தேங்கி இருக்கும் கெட்ட கொழுப்புகளை கரைக்க பிரண்டை உதவுகிறது. இதனால் உடல் எடையை கட்டுப்படுத்தலாம்.
மூச்சுத் திணறல் குறைக்கும் மருந்து:
மூச்சுத் திணறல் உள்ளவர்கள், பிரண்டை தண்டு மற்றும் மிளகு இரண்டையும் அரைத்து, தினமும் இரண்டு முறை சாப்பிட்டு வந்தால், மூச்சு திணறல் குறையும்.
புதிய மருந்துகள், பக்கவிளைவுகளும் பலமுறை உறுதியற்ற முடிவுகளும் கொண்டிருக்கின்ற இந்த காலகட்டத்தில், நம் முன்னோர்களால் பரிந்துரைக்கப்பட்ட இயற்கை மூலிகைகள் மீண்டும் நம் நலனுக்காக வழிகாட்டுகின்றன.
மருந்துகளை நம்புவதைவிட, உணவையே மருந்தாகக் கருதி வாழும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்வது சிறந்தது. பிரண்டை போன்ற இயற்கை மூலிகைகளை சரியான முறையில் பயன்படுத்தினால், ஆரோக்கியமான வாழ்வை எளிதாகக் கடந்து செல்லலாம்.