
பாலைவனத்தில் வாழும் அரிய விலங்குகள் பல உள்ளன. அவற்றுள் முக்கியமானவை சஹாரா பாலைவன சிறுத்தை, நுபியன் ஐபெக்ஸ், ஆர்க்டிக் நரி, பெரிய இந்திய பஸ்டர்ட், சஹாரன் வெள்ளி எறும்பு மற்றும் நார்தர்ன் மார்சுபியல் மோல் (ககராடுல்).
1) நுபியன் ஐபெக்ஸ்(Nubian Ibex):
இது ஒரு காட்டு மலை ஆடு இனம். இதன் நீளமான கொம்புகளால் அடையாளம் காணக்கூடியது. வெப்பமான, வறண்ட பாலைவனங்களில் வாழும் திறன் கொண்ட ஒரே ஐபெக்ஸ் இனம் நுபியனாகும். இவை செங்குத்தான மலைப்பாங்கான நிலப்பரப்பில் வாழ்கிறது. இனப்பெருக்கத்திற்கு ஆண் ஆடுகள் தங்கள் தாடியின் உதவியுடன் வாசனையை பரப்புகிறார்கள். மேலும் ஆதிக்கத்தை காட்ட சண்டையில் ஈடுபடுகிறார்கள்.
2) சஹாரா பாலைவன சிறுத்தை(Sahara Cheetah):
சஹாரா பாலைவனத்தில் வாழும் அழிந்து வரும் பாலூட்டி விலங்கிது. இந்த சிறுத்தைகள் வெளிர் நிற தோலையும், மற்ற ஆப்பிரிக்க சிறுத்தைகளை விட குறைவான புள்ளிகள் மற்றும் கோடுகளை கொண்டுள்ளன. இவை அடாக்ஸ் மற்றும் விண்மீன்கள் போன்ற மான்களை உண்கின்றன.
3) ஆர்க்டிக் நரி (Arctic fox):
அடர்த்தியான வெள்ளை ரோமங்களால் மூடப்பட்ட இந்த நரிகள் கிரீன்லாந்து, ரஷ்யா, கனடா மற்றும் ஸ்காண்டிநேவியாவில் உள்ள பாலைவனங்களில் காணப்படும் சிறிய வகை நரிகள் இவை. இவை வெள்ளை நரி, பனி நரி, துருவ நரி போன்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. கடுமையான ஆர்க்டிக் பனிப் பகுதிகளில் வாழ்வதற்கேற்ற தகவமைப்பை பெற்றுள்ளது. இதன் ரோமம் அடர்த்தியாகவும் கால்களில் மயிர் கற்றைகள் அடந்தும் காணப்படும். இதன் குறுகிய மொத்தமான காதுகள் பனியின் கடுமையை குறைக்கின்றன. பனிக்காலங்களில் இதன் நிறம் பனியை ஒத்து வெள்ளையாகவும், வெயில் காலங்களில் இது பழுப்பாகும் காணப்படும்.
4) பெரிய இந்திய பஸ்டர்ட் (Great Indian Bustard):
எடை அதிகமான பறக்கும் பறவைகளில் ஒன்றான இது ஆபத்தான உயிரினமும் கூட. சற்றே நீளமான கழுத்து மற்றும் நீண்ட கால்கள் கொண்டு சுமார் 3 அடி 3 அங்குலம் உயரத்தில் இருக்கும். வறண்ட புல்வெளிகள், முள் புதர்கள் கொண்ட திறந்தவெளிகளில் காணப்படும் இவை முன்பு இந்தியா மற்றும் பாகிஸ்தானில் பரவலாக காணப்பட்டது. ஆனால் தற்போது ராஜஸ்தான் மற்றும் குஜராத்தில் மட்டுமே அதிக அளவில் காணப்படுகிறது. அழிவின் விளிம்பில் உள்ள இந்தப் பறவை இனத்தை மீட்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
5) சஹாரன் வெள்ளி எறும்பு(Saharan Silver ant):
வெள்ளி நிறத்தில் காணப்படும் ஒரு எறும்பு இனம். நாளின் வெப்பமான நேரத்தில் சில நிமிடங்கள் மட்டுமே வெளியேறும். இதன் வெள்ளி முடிகள் சூரிய ஒளியை பிரதிபலிக்கின்றன. மேலும் வெப்ப உறிஞ்சுதலை கட்டுப்படுத்துகின்றன. இந்த உயிரினங்கள் மற்ற எறும்புகளை விட நீண்ட கால்களை கொண்டுள்ளன.
6) நார்தர்ன் மார்சுபியல் மோல்(Northern Marsupial Mole):
ஆஸ்திரேலியாவில் வசிக்கும் கண்களே இல்லாத தங்க நிறமான அரிய விலங்காகும். உலகிலேயே மிக அரிதான விலங்குகளில் ஒன்றாக கருதப்படும் இவை மக்கள் புழக்கம் இல்லாத பாலைவனப் பகுதியில் காணப் படுகின்றன. ககராடுல் என்று அழைக்கப்படும் இந்த சிறிய விலங்குகள் மனிதர்களின் கையளவே உள்ளது. இதற்கு கண்களே கிடையாது. உடல் முழுவதும் தங்க நிறம் ரோமமும், சிறிய வாலும், துடுப்பு போன்ற கைகளும் உள்ளது.
7) ஃபென்னெக் நரி(Fennec Fox):
வட ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் வாழும் பாலூட்டியாகும். கனிடே நாய் குடும்பத்தைச் சேர்ந்த மிகவும் சிறிய விலங்கு இது. பெரிய நீண்ட காதுகள் 15 சென்டிமீட்டர் நீளம் வரை இருக்கும். இவை பறவைகள், பூச்சிகள் மற்றும் கொறித்துண்ணிகளை உண்கின்றன.
8) ஜெர்போவா (Jerboa):
மிகச்சிறிய பாலைவன விலங்கான இவை கொறித்துண்ணிகளின் குழுவாகும். இவை வட ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள பாலைவனங்களில் காணப்படுகின்றன. கங்காருக்களை போலவே ஜெர்போக்கள் குதித்து நகரும். அவற்றின் நீண்ட சக்தி வாய்ந்த பின்னங்கால்களும், குறுகிய முன் கைகளும், நீண்ட வால்களையும் கொண்டுள்ளது.
9) பக்கவாட்டு பாம்பு(Sidewinder snake):
பக்கவாட்டு இயக்கத்தில் நகரும் இந்த பாம்பு வகைகள் சூடான மற்றும் மணலான பரப்புகளில் வாழக்கூடியவை. இவை அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கா பாலைவனங்களில் காணப்படுகின்றன.
10) ஒட்டகம்:
பாலைவன கப்பல் என்று அழைக்கப்படும் ஒட்டகங்கள் வறண்ட சூழ்நிலைகளில் வாழ்கின்றன. இவற்றின் திமில்கள் கொழுப்பை சேமிக்கின்றது. மேலும் அவற்றின் நீண்ட இமைகள் மணல் புயல்களில் இருந்து பாதுகாக்கின்றன. நீர் இல்லாமல் வாரக் கணக்கில் உயிர் வாழக்கூடிய விலங்கு இது.