பொன்னான நன்மைகள் தரும் பொன்னாங்கண்ணி கீரை!

பொன்னாங்கண்ணி கீரை
Ponnakanni keerai

‘கீரைகளுக்கெல்லாம் ராஜா’ என்று சொல்லப்படுவதுதான் இந்த பொன்னாங்கண்ணி. பொன்னாங்கண்ணி கீரையில் நார்ச்சத்து அதிக அளவில் உள்ளது. மேலும், இரும்பு சத்து, பாஸ்பரஸ், கால்சியம், வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் பி, தாதுக்கள் போன்றவை  வளமான அளவில் உள்ளன.

பாசிப்பருப்புடன் சேர்த்து இந்த கீரையை சாப்பிட்டு வந்தால், சருமப் பொலிவு கிடைக்கும். சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படுவது தடுக்கப்படும். அழகு மேம்படும்.பொன் போன்ற சருமம் மின்னிட இந்த பொன்னாங்கண்ணி கீரையே போதும் என்பார்கள்.

பொன்னாங்கன்னி கீரையை வாரம் இரணடு முறை சமைத்து சாப்பிட்டு வந்தால், இதயம் மற்றும் மூளை புத்துணர்வு பெறுகிறது. இந்தக் கீரை மற்றும் இதன் தண்டுகளை சாப்பிடுவது பாலூட்டும் தாய்மார்களுக்கு உதவுகிறது. இது கல்லீரலின் ஆரோக்கியத்தை பராமரிப்பதோடு தாய்ப்பால் சுரப்பை  அதிகரிக்க உதவுகிறது.

இந்தக் கீரையில் உள்ள சிறப்பு என்னவென்றால், உடல் எடையை குறைக்கவும், உடல் எடையை கூட்டவும் இந்த ஒரே கீரை பயன்படுகிறது. எடை குறைவாக இருப்பவர்களுக்கு, பொன்னாங்கண்ணி இலையை துவரம் பருப்புடன் நெய் சேர்த்து பிசைந்து கொடுத்தால் உடல் எடை ஆரோக்கியமாக அதிகரிக்கும். அதே சமயம், உடல் பருமனாக இருப்பவர்கள், இந்த கீரையில் உப்பு மற்றும் மிளகு சேர்த்து சமைத்து சாப்பிட்டால், உடல் எடையை குறைக்க உதவுமாம்.

சிறுநீர் எரிச்சல் நீங்கவும், சிறுநீரகம் நன்கு செயல்படவும் பொன்னாங்கண்ணியை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளலாம். பொன்னாங்கன்னி கீரையை பொடிப்  பொடியாக  நறுக்கி, அதனுடன் பாசிப்பருப்பு, சின்ன வெங்காயம், சீரகம், பூண்டு, மிளகுத்தூள் சேர்த்து வேகவைத்து மசியல் செய்து சாப்பிட்டு வந்தால் உடலில் இரத்த விருத்தி மற்றும் தூய்மை அடையும்.

பொன்னாங்கண்ணி இலைகளை பொடியாக்கி பூச்சிகள் கடித்த இடத்தில் வெளிப்புறமாக பூசினால் விஷக்கடி நீங்கும். வைட்டமின் ஏ சத்து நிறைந்த இந்த கீரையை நெய்யில் வதக்கி, வெள்ளை துணியில் வைத்து கண்களில் வைத்து கட்டினால், கண் பார்வை தெளிவுபெறும்.. இந்த இலையிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய்யை உச்சந்தலையில் தேய்த்து குளித்தால், கண்கள் பொலிவு பெறும். உடல் உஷ்ணம் தணியும். மாலை கண் நோய்க்கு, இந்தக் கீரையை வெண்ணெயுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் தீர்வு கிடைக்கும்.

இதையும் படியுங்கள்:
பெண்களின் சருமம் காக்கும் கஸ்தூரி மஞ்சள் மகிமை!
பொன்னாங்கண்ணி கீரை

பொன்னாங்கண்ணி கீரையில் கால்சியம் சத்து அதிகம் உள்ளது. அதனால் எலும்புகள் மற்றும் பற்களுக்கு வலிமை கிடைக்கிறது. நாள்பட்ட இருமலால் அவதிப்படுபவர்கள்,  காச நோயாளிகளுக்கு இந்தக் கீரை கண்கண்ட மருந்து. 27 நாட்கள் தொடர்ந்து இக்கீரையை சாப்பிட்டு வந்தால் விரைவில் குணம் தெரியும்.

பொன்னாங்கண்ணி இலையை கசக்கி நுகர்ந்து பார்த்தால் தலைவலி, தலைச்சுற்றல் குணமாகும். இக்கீரையின் சாறு, கரிசலாங்கண்ணி கீரை சாறு, நெல்லிக்காய் சாறு, பசும்பால், நல்லெண்ணெய்  இவற்றை சம அளவில் எடுத்து,  அரைக்கவும். இக்கலவையை இளம் சூட்டில் காய்ச்சி, வடிகட்டி எடுத்த எண்ணெயை வாரம் இருமுறை தலையில் தேய்த்து,குளித்து வர, கண் வியாதிகளும், பித்த நோய்களும் குணமாகும்.

பொன்னாங்கண்ணி கீரையுடன் மிளகு மற்றும் பூண்டு சேர்த்து  மசியலாக்கி சாப்பிட்டால் மூலத்துக்கு விரைவில் நிவாரணம் கிடைக்கும். பொன்னாங்கண்ணி சாறும் சிவப்பு முள்ளங்கி சாறும் சம அளவு எடுத்து தினமும் குடித்து வந்தால் மூல நோயால் வரக்கூடிய இரத்தப்போக்கு குணமாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com