சிறுநீரக நோய்களைத் தடுப்பதற்கும், குணப்படுத்துவதற்கும் இயற்கையான மூலிகைகள் பல நூற்றாண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அப்படிப்பட்ட ஒரு அற்புத மூலிகைதான் பூனை மீசை செடி. இது சிறுநீரக ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாகக் கருதப்படுகிறது.
பூனை மீசை செடியின் சிறப்புகள்:
பூனை மீசை செடி (Orthosiphon stamineus), தென்கிழக்கு ஆசியாவில் வளரும் ஒரு மருத்துவ மூலிகையாகும். இதன் பூக்கள் பூனை மீசை போன்று இருப்பதால் இப்பெயர் பெற்றது. இது சிறுநீரக நோய்களுக்கு ஒரு பாரம்பரிய மருத்துவமாகப் பயன்படுத்தப்படுகிறது. இந்தச் செடியில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், அழற்சி எதிர்ப்பு மற்றும் சிறுநீரகக் கற்களை கரைக்கும் பண்புகள் உள்ளன.
சிறுநீரகத் தொற்று: இது சிறுநீரகங்கள், சிறுநீர்ப் பாதையில் ஏற்படும் பாக்டீரியா தொற்றுகள் ஆகும். இவை அதிகப்படியான வலி, காய்ச்சல் மற்றும் சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும். பூனை மீசை செடி சிறுநீரகத் தொற்றுகளுக்கு ஒரு சிறந்த நிவாரணியாகும். இது சிறுநீரகப் பாதையில் உள்ள பாக்டீரியாக்களை அழித்து, தொற்றை குணப்படுத்த உதவுகிறது. மேலும், இது சிறுநீரகங்களின் செயல்பாட்டை மேம்படுத்தி சிறுநீர் உற்பத்தியை அதிகரிக்கிறது. இதனால் கழிவுகள், நச்சுகள் உடலில் இருந்து வெளியேற்றப்படுகின்றன.
சிறுநீரக கற்கள்: சிறுநீரக கற்கள், சிறுநீரகங்களில் உருவாகும் தாதுக்கள் மற்றும் உப்புகளின் கடினமான படிவுகள் ஆகும். அவை கடுமையான வலியை ஏற்படுத்தும். பூனை மீசை செடி சிறுநீரக கற்களை கரைக்க உதவுகிறது. இதில் உள்ள பொருட்கள் சிறுநீரக கற்களை சிறிய துகள்களாக உடைத்து, அவை சிறுநீர் மூலம் வெளியேற உதவுகின்றன.
பூனை மீசையின் பிற நன்மைகள்:
பூனை மீசை செடி இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இது நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இது உடலில் உள்ள அதிகப்படியான நீரை வெளியேற்ற உதவுகிறது, இதனால் உடல் எடை குறையலாம். மேலும் இதை சாப்பிடுவதால் இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும் உதவுகிறது.
பூனை மீசை செடியில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன, அவை உடலை ஃப்ரீ ரேடிக்கல்களின் சேதத்திலிருந்து பாதுகாக்கின்றன.
இந்த செடியை டீ யாக காய்ச்சி குடிக்கலாம் அல்லது அதன் இலைகளை பொடி செய்து உணவில் சேர்த்துக்கொள்ளலாம். அதேபோல, பூனை மீசை சப்ளிமெண்ட்ஸும் கடைகளில் கிடைக்கின்றன.
பூனை மீசை செடி பொதுவாக பாதுகாப்பானது என்றாலும், சிலருக்கு ஒவ்வாமை அல்லது பக்க விளைவுகள் ஏற்படலாம். கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் ஏற்கனவே உடல்நல பிரச்சனைகள் உள்ளவர்கள் பூனை மீசை செடியை பயன்படுத்துவதற்கு முன்பு மருத்துவரை அணுக வேண்டும். மேலும், சிறுநீரக நோய்களுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள், மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் பூனை மீசை செடியை பயன்படுத்தக்கூடாது.