மதிய தூக்கத்தை அலட்சியம் செய்யாதீர்கள்... இதயம் முதல் நினைவாற்றல் வரை கிடைக்கும் நன்மைகள்!

பகலில் ஒரு குட்டித் தூக்கம் உங்கள் நினைவாற்றலையும் உடல் நலத்தையும் எப்படி மாற்றுகிறது தெரியுமா?
Power Nap | குட்டித் தூக்கம்
Power Nap | குட்டித் தூக்கம்AI Image
Updated on

ஆய்வுகளின்படி மதிய நேரத் தூக்கம் குழந்தைகளுக்கு மட்டுமல்ல, பெரியவர்களுக்கும் மிகவும் நல்லது. மதிய வேளையில் நாம் எடுக்கும் ஒரு சிறு தூக்கம் (power nap) நமது நினைவாற்றலை அதிகரிக்கவும், பணித்திறனை மேம்படுத்தவும், மனநிலையை உற்சாகப்படுத்தவும், நம்மை அதிக விழிப்புடன் வைத்திருக்கவும், மன அழுத்தத்தைக் குறைக்கவும் உதவும்.

நினைவுகளைச் சேமிப்பதில் உறக்கம் ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும், உடல் இயக்கத் திறன்கள், புலன் உணர்வு மற்றும் வார்த்தைகளை நினைவு கூர்தல் போன்றவற்றை நாம் மறக்காமல் இருக்கவும். நம்மால் விஷயங்களை எளிதாக தொடர்புபடுத்திப் பார்க்கவும் இது உதவுகிறது.

ஒரு குட்டித் தூக்கம் (power nap) நாம் சற்றுமுன் கற்றுக்கொண்ட விஷயங்களை நினைவில் கொள்ள உதவுவது மட்டுமல்லாமல், நாம் அறிந்துகொள்ளும் விஷயங்களுக்கு இடையே உள்ள தொடர்புகளை ஏற்படுத்தவும் நமது மூளைக்கு உதவக்கூடும். ஓர் ஆய்வில், குட்டித் தூக்கம் மேற்கொண்டவர்களுக்கு, அன்றைய தினம் முன்னதாகப் பெற்ற தகவல்களை ஒருங்கிணைப்பது எளிதாக இருப்பதாகக் கண்டறிந்தனர்.

நாள் முழுவதும் ஒரே வேலையைத் திரும்பத் திரும்பச் செய்யும்போது, நாள் செல்லச் செல்ல நமது செயல்திறன் மோசமடைகிறது. ஆனால், ஒரு சிறு தூக்கம் நமது மனநிலையை மேலும் சீராக வைத்திருக்க உதவும் என்று ஆய்வுகள் காட்டுகின்றன.

நாம் மனச்சோர்வாக இருக்கும் போது, நமது மனநிலையை மேம்படுத்த ஒரு குட்டித் தூக்கம் (power nap) மிகவும் உதவும். தூங்காமல் சிறிது நேரம் ஓய்வெடுப்பது கூட, நமது மனநிலைக்கு புத்துணர்ச்சியைத் தரும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

Power Nap | குட்டித் தூக்கம்
Power Nap | குட்டித் தூக்கம்

மதிய உணவிற்குப் பின் ஒரு 20 நிமிட சிறு தூக்கம், கனத்த இமைகளைச் சமாளிக்க நமக்கு உதவும். தூக்கத்திற்குப் பிறகு நாம் உணரக்கூடிய அந்த மந்தநிலை, 'தூக்க மந்தம்' (sleep inertia) என்று அழைக்கப்படுகிறது. நாம் எவ்வளவு நேரம் தூங்குகிறோமோ, அந்த அளவிற்கு அந்த உணர்வு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம். அது எந்த அளவிற்கு மோசமாக இருக்கிறதோ, அந்த அளவிற்கு நாம் எழுந்து மீண்டும் வேலைக்குத் திரும்புவதற்கு அதிக நேரம் தேவைப்படும்.

உதாரணமாக, பயணம் காரணமாக, ஓரிரு இரவுகளுக்கு நமக்குப் போதுமான தூக்கம் கிடைக்காது என்று தெரிந்தால், காஃபின் அருந்திச் சமாளிப்பதை விட, முன்கூட்டியே ஒரு குட்டித் தூக்கம் (power nap) போட்டுத் தயாராவது நல்லது. நாம் காஃபினை நாட வேண்டிய நிலை ஏற்பட்டால், ஒரு பெரிய கப் காபி குடிப்பதற்குப் பதிலாக, அதை அடிக்கடி சிறிதளவு அருந்துவது சிறந்தது.

ஒரு சிறு தூக்கம் மன அழுத்தத்தைக் குறைத்து, நம் நோய் எதிர்ப்புச் சக்தியை மேம்படுத்தும். 30 நிமிடத் தூக்கம் இதற்குப் பலனளிக்கும் என்று நிபுணர்கள் நம்புகிறார்கள்.

ஒரு குட்டித் தூக்கம் நமது இதயத்திற்கு நலம் பயக்கும். மன அழுத்தத்திற்குப் பிறகு 45 முதல் 60 நிமிடங்கள் வரை குட்டித் தூக்கம் போட்டவர்களுக்கு இரத்த அழுத்தம் சீரானாதாக ஓர் ஆய்வு கண்டறிந்துள்ளது. எனவே, மனஅழுத்தம் நிறைந்த சூழ்நிலைகளிலிருந்து நமது உடல் மீண்டுவர ஒரு குட்டித் தூக்கம் உதவும்.

இதையும் படியுங்கள்:
காலை ஒரு கப் போதும்... குடல் ஆரோக்கியம் முதல் நோயெதிர்ப்பு சக்தி வரை மேம்படுத்தும் 12 தேனீர்கள்!
Power Nap | குட்டித் தூக்கம்

பகலில் ஒரு குட்டித் தூக்கம் (power nap) போடுவது, வயதானவர்கள் இரவில் நன்றாகத் தூங்க உதவும். பிற்பகல் 1 மணி முதல் 3 மணி வரை 30 நிமிடங்கள் தூங்குவதும், மாலையில் நடைப்பயிற்சி மற்றும் உடலை நீட்டுதல் போன்ற மிதமான உடற்பயிற்சிகளைச் செய்வதும் இரவு நேரத் தூக்கத்தை மேம்படுத்த உதவுகிறது என்று ஆய்வுகள் காட்டுகின்றன. இதன் மூலம் மன மற்றும் உடல் ஆரோக்கியமும் மேம்படும்.

மழலையர் பள்ளிக்குச் செல்வதற்கு வெகு காலத்திற்கு முன்பே, பாலர் பள்ளி வயதுக் குழந்தைகள் பலர் பகல் தூக்கத்தை நிறுத்திவிடுகிறார்கள். அந்த வயதில் கற்றலுக்கும் வளர்ச்சிக்கும் பகல் தூக்கம் மிகவும் இன்றியமையாதது. தவறாமல் பகல் தூக்கம் போடும் குழந்தைகளால், தாங்கள் கற்றுக்கொண்ட விஷயங்களை எளிதாக நினைவுகூர முடிகிறது. அந்த வயதில் குறுகிய கால நினைவாற்றல் குறைவாக இருப்பதால், சிறு குழந்தைகளுக்கு அடிக்கடி தூக்கம் தேவைப்படுகிறது. மூளை நினைவுகளைத் தக்கவைத்துக் கொள்வதில் இது ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது.படங்கள் அல்லது தொடு உணர்வுகள் போன்ற ஒரே மாதிரியான விஷயங்களுக்கு இடையிலான வேறுபாட்டைக் கண்டறியும் திறனும் இதில் அடங்கும்.

ஒரு குட்டித் தூக்கத்தின் முழுப் பலன்களையும் பெற, நாம் அதைச் சரியான நேரத்தில் எடுக்க வேண்டும். பெரும்பாலான மக்கள் மதிய நேரத் தூக்கத்தையே மிகவும் இயல்பானதாகவும் பயனுள்ளதாகவும் காண்பார்கள்.

இதையும் படியுங்கள்:
கண் எரிச்சல் முதல் ஈறு வலி வரை... அடுக்கு நந்தியாவட்டையின் அசத்தல் பயன்கள்!
Power Nap | குட்டித் தூக்கம்
மருத்துவ மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு (Disclaimer): இந்த கட்டுரையில் உள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. இவை தொழில்முறை மருத்துவ ஆலோசனைகளுக்கு மாற்றாகாது. அவசர சிகிச்சைக்கும் மருத்துவ ஆலோசனைக்கும் தகுந்த மருத்துவரை அணுகவும்.

Reference

logo
Kalki Online
kalkionline.com