பண்டிகைகள், கோயில் விழாக்கள், வீடுகளில் நவராத்திரி கொலு அலங்காரம், பொது மேடைகள் என்று பல இடங்களில், மக்களைக் கவரும் வண்ணம் அமைத்திருக்கும் மின்சார விளக்குகளைக் காணலாம். இந்தத் தொடர் விளக்குகள் அணைந்து எரிதல், பல வண்ணங்களில் ஓளி கொடுத்தல் என்று பல வகைகளில் கிடைக்கிறது. இந்த விளக்குகளுக்கெல்லாம் முன்னோடி 1882ம் ஆண்டில், எட்வர்ட் ஹிபர்ட் ஜான்சன் தன்னுடைய நியூயார்க் வீட்டில் அமைத்த மின்சார கிறிஸ்துமஸ் மரம்.
1500களில் புராட்டஸ்டண்ட் சீர்திருத்தவாதி மார்டின் லூதர் கிறிஸ்துமஸ் மரத்தின் நடுவே ஒளிரும் நட்சத்திரங்களைப் பிரதிபலிக்க விரும்பினார். ஆகவே, கிறிஸ்துமஸ் மரத்தை ஒளிரச் செய்ய மெழுகுவர்த்திகளை பயன்படுத்தும் பழக்கம் ஏற்பட்டது. இவை கிறிஸ்துமஸ் மரத்திற்கு அழகு சேர்த்தாலும், இவை பெரிய தீ விபத்திற்கு வித்திட்டன. ஒவ்வொரு வருடமும், கிறிஸ்துமஸ் முடிவில். மரங்கள் தற்செயலாகத் தீப்பிடித்து அதனால் ஏற்பட்ட பொருள் மற்றும் உயிர் சேதங்கள் பற்றிய செய்திகள் வருவது வாடிக்கையாக இருந்தது.
தாமஸ் ஆல்வா எடிசன் மின்சார விளக்கை 1879ம் ஆண்டு கண்டுபிடித்தார். அதற்கு முன்னால் எடிசன், ஜான்சன் அவர்களின் ஆட்டோமேட்டிக் டெலிகிராப் நிறுவனத்தின் மேலாளராக 1871ம் வருடம் முதல் பணியிலிருந்தார். ஆனால், குறுகிய காலத்தில் அவர்களின் பாத்திரங்கள் தலைகீழாக மாறின. முதலாளியாக இருந்த ஜான்சன், எடிசன் எலக்ட்ரிக் லைட் நிறுவனத்தின் துணைத் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
எடிசனின் மின்சார உற்பத்தி அமைப்பின் தலைமைப் பொறியாளராகவும் இருந்தார். இவை 1882ம் ஆண்டு, மின்சார விளக்கு கண்டுபிடிக்கப்பட்டு மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, கிறிஸ்துமஸ் சமயத்தில் புதிய வரலாறு படைக்க ஜான்சனைத் தூண்டியது.
மெழுகுவர்த்திகளுக்குப் பதிலாக மின்சார விளக்கை மாற்றியதில் கிறிஸ்துமஸ் மரங்கள் தீப்பிடிக்கும் அபாயம் கணிசமாகக் குறைந்தது. அதுமட்டுமல்லாமல், சிவப்பு, வெள்ளை, நீலம் என்ற வண்ண விளக்குகள், ஃப்ளாஷ் ஆகியவை பார்ப்பவர்களைக் கவர்ந்தன. அப்போதைய டெட்ராய்ட் போஸ்ட் பத்திரிகையில் பின்வருமாறு செய்தி வெளி வந்தது. ‘80 சிவப்பு, வெள்ளை மற்றும் நீல கை கம்பி பல்புகள் ஜான்சனின் கிறிஸ்துமஸ் மரத்தை ஒளிரச் செய்தன. கூரையில் பொருத்தியிருந்த இரண்டு கம்பிகளில் மேலும் 28 விளக்குகள் மின்னியது. அந்த மரம் ஒரு நிமிடத்திற்கு ஆறு முறை சுற்றியது. விளக்குகள் தொடர்ந்து நடமாடும் வண்ணங்களில் மின்னியது. மரத்தைச் சுழற்றிய க்ராங்க் மின்சாரம் கொண்டு இயக்கப்பட்டது. மினுமினுக்கும் பசுமையான அழகான காட்சி.’
மன்ஹாட்டன் நகரில் மின்சாரம் பரவியதும் நகரின் பெரிய செல்வந்தர்கள் பலரும் கிறிஸ்துமஸ் மரத்திற்கு மின்சார விளக்குகள் பொருத்த ஆரம்பித்தனர். ஆனால், முதலில் வெளிவந்த பல்புகளுக்கு ஸ்க்ரூ-இன் சாக்கெட்கள் இல்லை. ஆகவே விளக்குகளை வயரிங்க் செய்வதற்கு மின்சார நிபுணர்கள் தேவைப்பட்டனர். இதற்கு மரத்திற்கு 300 டாலர் செலவாகியது. 1894ம் வருடம், அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் கிறிஸ்துமஸ் மரம் முதல் முறையாக மின்சார விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டன. ஆனால், அதிக விலை காரணமாகவும், மின்சார தட்டுப்பாடு காரணமாகவும், இந்த மின்சார விளக்குகள் பரவலாக உபயோகிக்கப்படவில்லை.
1903ம் வருடம் ஜெனரல் எலெக்ட்ரிக் நிறுவனம், ‘ஃபெஸ்டூன்கள்’ என்று அழைக்கப்படும், விளக்குகளைத் தயாரித்து விற்பனை செய்யத் தொடங்கின. பிரபலமான பத்திரிகைகள், மின்சார விளக்குகளின் பாதுகாப்பு நன்மைகளை வலியுறுத்தி கட்டுரைகள் எழுதின. விளக்குகளுக்கு முன்பே வயரிங் செய்த பீங்கான் சாக்கெட்டுகள் இருந்ததால், மின்சார நிபுணர்கள் சேவை தேவைப்படவில்லை. ஆனால், இந்த மின்சார விளக்குகளின் விலை 12 டாலர் என்பதால் பெரும்பாலான மக்களைச் சென்றடையவில்லை. பெரிய அங்காடிகள் இந்த மின்சார விளக்குகளை 1.5 டாலருக்கு வாடகைக்கு அளித்தனர்.
1940ம் வருடம் அமெரிக்காவின் கிராமப் புறங்களில் மின்சாரம் பரவியது. அப்போது பெரும்பாலான கிறிஸ்துமஸ் மரங்களில் மெழுவர்த்திக்குப் பதில், மின்சார விளக்குகள் இடம்பெற ஆரம்பித்தன. தற்போது பற்பல வண்ணங்களில் எல்யிடி விளக்குகள் கிறிஸ்துமஸ் மரங்களை அலங்கரிக்கின்றன.
‘மின்சார கிறிஸ்துமஸ் மர விளக்குகளின் தந்தை’ என்று ஜான்சனை அழைக்கலாம்.