
உலகில் உள்ள 30 சதவீத மக்களுக்கு நகம் கடிக்கும் பழக்கம் இருக்கிறது. இருப்பினும் அதிகமாக நகம் கடிக்கும் பழக்கம் இருப்பவர்கள், கையில் உள்ள நகங்கள் மற்றும் சதைப்பகுதிகளை சேதப்படுத்துகின்றனர். மேலும் அடிக்கடி நகம் கடிக்கும் பழக்கம் இருந்தால், வாயில் கை வைப்பதன் காரணமாக பேக்டீரியா போன்ற நோய்த்தொற்று ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.
மூன்று முதல் நான்கு வயது வரை இருக்கும் குழந்தைகள் நகம் கடிக்கும் பழக்கத்தை கற்றுக் கொள்கிறார்கள். விரல் சப்பும் பழக்கம் இருக்கும் குழந்தைகளுக்கு நகம் கடிக்கும் பழக்கமும் சேர்ந்தே வந்து விடுகிறது. அதிக பதற்றம், பசி, ஸ்ட்ரெஸ், தனிமை போன்ற காரணங்களால் நகம் கடிக்க தொடங்குகிறோம். அதிகமாக நகம் கடிப்பவர்களுக்கு obsessive compulsive disorder பிரச்னை இருப்பதாக சொல்லப்படுகிறது.
நகம் கடிக்கும் பழக்கம் வந்துவிட்டால், அதை விடுவது கடினமாகும். இதனால் ஆரோக்கிய சம்மந்தமான பிரச்னைகள் ஏற்படுகிறது. பற்களில் பிரச்னை, நகங்களில் நோய்த்தொற்று ஏற்படும். அடிக்கடி வாயில் கை வைத்து நகம் கடிப்பதால் பேக்டீரியா வயிற்றுக்குள் சென்று நோய்த்தொற்றை ஏற்படுத்துகிறது. அதிகமாக நகம் கடிப்பது மனரீதியான பிரச்னைகளின் வெளிப்பாடாக இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.
எந்த பழக்கத்தையும் உடனடியாக நிறுத்துவது என்பது கடினமான காரியமாகும். தொடர்ந்து முயற்சிப்பதன் மூலமாக நல்ல பலனைப் பெறலாம்.
எந்த சமயத்தில் நகம் கடிக்கும் பழக்கம் ஏற்படுகிறது?
சலிப்பாக இருக்கும் போது, பதற்றப்படும் போது, கடினமான வேலை செய்யும் போது என்று எப்போது இந்த பழக்கம் ஏற்படுகிறது என்பதை கவனித்து அதற்கு பதில் ஸ்ட்ரெஸ் பால் பயன்படுத்துவது, சூவிங் கம் மெல்வது போன்று வேறு பழக்கத்தை மாற்ற முயற்சிப்பது நகம் கடிக்கும் பழக்கத்தை மறக்க சிறந்த வழியாகும்.
நகம் கடிக்காமல் இருப்பதற்கு நகத்தில் நெயில் பாலிஷ் போட்டுக் கொள்வது, நகத்தை சிறியதாக வெட்டிக்கொள்வது, கைகளில் Gloves போட்டுக் கொள்வது பலனைத் தரும். இவை அனைத்தும் பலனைத் தரவில்லை என்றால், Cognitive behavioural therapy மற்றும் acceptance and commitment therapy ஆகிய தெரபிகள் மூலமாக நகம் கடிக்கும் பழக்கத்தை நிறுத்த முடியும் என்று சொல்லப்படுகிறது.