

ஒரு காலத்தில் இந்தியாவில் ஆயிரக்கணக்கான குழந்தைகள் போலியோ நோயால் நிரந்தர ஊனமுற்றனர். கால்களில் பலவீனம், வாழ்நாள் முழுவதும் நடக்க முடியாத நிலை, குடும்பங்களுக்கு பெரும் மனவேதனை ஏற்படுத்திய இந்த நோய் இன்று இந்தியாவில் ஒழிக்கப் பட்டுள்ளது. இதற்குக் காரணம் தேசிய பல்ஸ் போலியோ தடுப்பூசி திட்டம் மற்றும் பெற்றோர்களின் ஒத்துழைப்பாகும்.
இளம்பிள்ளை வாதம் எனப்படும் போலியோ என்பது ஒரு வைரஸ் கிருமியால் ஏற்படும் தொற்றுநோய். இது பெரும்பாலும் மாசுபட்ட உணவு, தண்ணீர் மற்றும் சுகாதாரமற்ற சூழல் மூலம் பரவுகிறது. பெரும்பாலான குழந்தைகளுக்கு சாதாரண காய்ச்சல் போல் தோன்றினாலும், சில குழந்தைகளில் கை, கால் தசைகளை நிரந்தரமாக செயலிழக்கச் செய்யும். இதற்கு மருந்து இல்லை, தடுப்பூசி மற்றும் போலியோ சொட்டு மருந்து மட்டுமே பாதுகாப்பு.
இந்திய அரசு 1995 ஆம் ஆண்டு தேசிய பல்ஸ் போலியோ திட்டத்தைத் தொடங்கியது. நாடு முழுவதும் ஒரே நாளில் ஐந்து வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. இந்தப் பெரும் முயற்சியின் பலனாக, 2011 ஆம் ஆண்டில் தான் இந்தியாவில் கடைசியாக ஒருவர் போலியோவால் பாதிக்கப்பட்டார்.
2014 ஆம் ஆண்டு இந்தியா போலியோ இல்லாத நாடாக அறிவிக்கப்பட்டது. ஆனால் உலகின் சில நாடுகளில் இன்னும் போலியோ இருப்பதால், அது மீண்டும் இந்தியாவுக்குள் வராமல் தடுக்க தடுப்பூசி திட்டம் மற்றும் 'பல்ஸ் போலியோ'வை தொடர்ந்து கடைப்பிடிப்பது அவசியமாகும்.
பல பெற்றோர்கள் 'என் குழந்தைக்கு ஏற்கனவே அனைத்து தடுப்பூசிகளும் போட்டுவிட்டோம்; மீண்டும் பல்ஸ் போலியோ சொட்டு மருந்து ஏன்?' என்று கேட்கிறார்கள். வழக்கமான தடுப்பூசி அட்டவணை தனிப்பட்ட குழந்தையைப் பாதுகாக்கிறது. பல்ஸ் போலியோ திட்டம் சமூகத்தில் வைரஸ் பரவுவதைத் தடுக்க உதவுகிறது. எனவே இரண்டுமே ஒவ்வொரு குழந்தைக்கும் முக்கியம்.
பெற்றோருக்கான அறிவுரைகள்:
ஐந்து வயதுக்குட்பட்ட ஒவ்வொரு குழந்தைக்கும் பல்ஸ் போலியோ நாளில் கட்டாயமாக போலியோ சொட்டு மருந்து கொடுக்க வேண்டும்.
வழக்கமான தடுப்பூசிகள் போட்டிருந்தாலும் பல்ஸ் போலியோ சொட்டு மருந்தை கொடுக்க வேண்டும்.
குழந்தைக்கு சளி, இருமல் அல்லது லேசான காய்ச்சல் இருந்தாலும் சொட்டு மருந்து கொடுக்கலாம்.
வயிற்றுப்போக்கு இருந்தாலும் பெரும்பாலான நேரங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கலாம்.
பிறந்த சில நாட்களே ஆன குழந்தைகளுக்கும் பல்ஸ் போலியோ நாளில் சொட்டு மருந்து கொடுக்க வேண்டும்.
முன்கூட்டியே பிறந்த (Preterm) குழந்தைகளும் இந்தத் திட்டத்தில் பங்கேற்க வேண்டும்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள குழந்தைக்கும் போலியோ சொட்டு மருந்து அளிக்கலாம்.
பல்ஸ் போலியோ நாளில் தவறவிட்டால் அருகிலுள்ள சுகாதார மையத்தை உடனடியாக அணுகுங்கள்.
தடுப்பூசி முகாம் அருகில் இல்லையெனில் சுகாதாரப் பணியாளர்களிடம் தகவல் தெரிவியுங்கள்.
போலியோ சொட்டு மருந்து குழந்தைக்கு போலியோ நோயை ஏற்படுத்தாது.
போலியோ சொட்டு மருந்து பாதுகாப்பானதும் பல ஆண்டுகளாக பரிசோதிக்கப்பட்டதும் ஆகும்.
சொட்டு மருந்துக்குப் பிறகு வழக்கம்போல் தாய்ப்பால் கொடுக்கலாம்.
சொட்டு மருந்துக்குப் பிறகு உணவு அல்லது தண்ணீரை நிறுத்த வேண்டிய அவசியமில்லை.
சொட்டு மருந்தால் குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தி குறையாது.
பல்ஸ் போலியோ மற்றும் வழக்கமான தடுப்பூசி அட்டவணை இரண்டையும் முழுமையாகப் பின்பற்றுங்கள்.
தடுப்பூசி அட்டையை எப்போதும் பாதுகாப்பாக வைத்திருங்கள்.
வீட்டில் உள்ள ஐந்து வயதுக்குட்பட்ட எந்தக் குழந்தையையும் தவறவிடாதீர்கள்.
அண்டை வீட்டுக் குழந்தைகளும் தடுப்பூசி பெற்றுள்ளனரா என்பதை உறுதிப்படுத்த ஊக்குவியுங்கள்.
சமூக வலைத்தளங்களில் வரும் தவறான தகவல்களை நம்பாதீர்கள்.
வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளும் முன் போலியோ தடுப்பூசி விதிமுறைகளை தெரிந்து கொள்ளுங்கள்.
சுகாதாரமான குடிநீர் மற்றும் கழிப்பறை பழக்கங்களையும் கடைப்பிடியுங்கள்.
போலியோ நோய் வந்த பிறகு குணப் படுத்த மருந்து இல்லை.
தடுப்பூசி மற்றும் சொட்டு மருந்து மூலம் மட்டுமே குழந்தையையும் சமூகத்தையும் பாதுகாக்க முடியும்.
சந்தேகம் இருந்தால் குழந்தை நல மருத்துவரிடம் அல்லது அரசு சுகாதாரப் பணியாளரிடம் கேளுங்கள்.
பொதுவான நம்பிக்கைகள் – உண்மை என்ன?
என் குழந்தை ஆரோக்கியமாக இருக்கிறது; சொட்டு மருந்து தேவையில்லை.
தவறு.
ஆரோக்கியமான குழந்தைகளும் தடுப்பூசி பெற வேண்டும்.
ஒருமுறை சொட்டு மருந்து போதும்.
தவறு.
தேசிய திட்டத்தில் அறிவிக்கப்படும் ஒவ்வொரு முறையும் பெற வேண்டும்.
தடுப்பூசி குழந்தையை பலவீனமாக்கும்.
தவறு.
இதற்கு எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை.
தனியார் மருத்துவமனையில் தடுப்பூசி போட்டுவிட்டோம்; அரசு முகாமிற்கு செல்ல வேண்டியதில்லை.
தவறு.
வழக்கமான தடுப்பூசியுடன் பல்ஸ் போலியோ சொட்டு மருந்தும் அவசியம்.
உறுதி ஏற்போம்!
இந்தியா போலியோவை ஒழித்தது மருத்துவத் துறையின் வெற்றி மட்டுமல்ல, ஒவ்வொரு பெற்றோரின் பொறுப்புணர்வின் பலனே ஆகும். உலகிலிருந்து போலியோ முழுமையாக ஒழிய வேண்டும்.
பொன்மொழி
'இரண்டு சொட்டு மருந்து… ஒரு குழந்தையின் எதிர்கால நலனை பாதுகாக்கும்.'