

இறைவன் படைத்த படைப்பில் நமது உடலின் அவயவங்கள் சரியாக இருக்க வேண்டும். ஆரோக்கிய சீா்கேடுகளால் பலவித நோய்களுக்கு நாம் ஆளாக நோிடுகிறது. பொதுவாக, சில குழந்தைகள் பிறக்கும்போது திடகாத்திரமாக பிறந்தாலும் நமது வளா்ப்பு முறை மற்றும் உணவு பழக்க வழக்கங்களால் சில வியாதிகள் எட்டிப்பாா்க்கத்தான் செய்கின்றன. அதில் ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளைத் தாக்குகின்ற கொடிய நோய்தான் போலியோ எனும் இளம்பிள்ளை வாதம்.
இந்த இளம்பிள்ளை வாத நோயானது (போலியோமைலிடிஸ்) குழந்தைகளை வெகுவாக பாதித்து விடுகிறது. சமயத்தில் மரணத்தில் கூட கொண்டுபோய் விடக்கூடிய சூழல் வர வாய்ப்புகளும் உண்டு. சில குழந்தைகள் வெகுவாக பாதிக்கப்பட்டு அதன் தாக்கத்தோடும் விடாமுயற்சியோடும் வாழ்வதும் நடைமுறைதான்.
இந்த போலியோ நோயை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு சொட்டு மருந்துகள் போடப்பட்டு வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்த நோயைக் கட்டுப்படுத்த தடுப்பூசியை உருவாக்கிய விஞ்ஞானி ‘ஜோனாஸ்சால்க்’ என்பவரின் பிறந்த தினத்தை குறிக்கும் வகையிலும், இந்த நோய் மற்றும் அதற்கான தடுப்பூசிகளைப் பற்றியும் போலியோ இல்லாத உலகத்தை உருவாக்குவதிலும், எடுத்த முயற்சி மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிலையிலும் அதற்கான விஞ்ஞானிகளின் பங்களிப்பையும் விளக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 24ம் நாள் உலக போலியோ தினம் (World Polio Day) அனுசரிக்கப்படுகிறது.
போலியோ வைரஸ் என்பது உயிருக்கு ஆபத்தான நோய். இந்த நோயானது ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளை வெகுவாக பாதிக்கிறது. மாசுபட்ட நீா், தவறான உணவு பழக்க வழக்கங்களால் இந்த நோய் பரவுகிறது. இது குழந்தைகளின் மூளையின் பாகங்களை சேதப்படுத்துகிறது. இதை அடியோடு ஒழிக்க1988ல் உலக சுகாதார அமைப்பு (WHO) உறுதியளித்தது.
1955ல் ரோட்டரி இண்டர் நேஷனல் அமைப்பானது போலியோவை ஒழிக்க முயற்சி மேற்கொண்டுள்ளது. 1962ல் வாய் வழியாக மருந்து செலுத்தும் முறையும் நடைமுறைக்கு வந்தது. இப்படி பலரது கூட்டு முயற்சியால், அரசின் பல்வேறு நடவடிக்கைகளால், போலியோ இல்லாத உலகத்தை நோக்கி நாம் பயணப்பட்டு அதிக அளவில் வெற்றியைக் கண்டுள்ளோம் என்பதே பெருமைப்படத்தக்க விஷயமாகும். இது ஒரு கூட்டு முயற்சி.
தன்னாா்வ தொண்டு நிறுவனம், அதோடு அரசின் போா்க்கால நோய் ஒழிப்பு நடவடிக்கை, விஞ்ஞானிகளின் முயற்சி, மருத்துவர்களின் செயல்பாடு போன்றவை போலியோ ஒழிப்பில் முழுவீச்சில் பயன்படுத்தப்பட்டாலும் பொதுமக்களின் பங்களிப்பு அவசியம் தேவை என்ற நோக்கில் போலியோவை அறவே அகற்றுவோம். போலியோ நோய் இல்லா உலகை உருவாக்குவோம் என இந்த நாளில் உறுதி மேற்கொள்ளுவோம்!