உணவில் மட்டுமின்றி, மருத்துவ குணத்திலும் சிறந்து விளங்கும் பூசணிக்காய்!
இந்தியாவின் தேசிய விலங்கு புலி என்பது பலருக்கும் தெரியும். ஆனால், இந்தியாவின் தேசியக் காய் எதுவென்று கேட்டால் பலருக்கும் பதில் தெரியாது. இந்தியாவின் தேசியக் காயாக பூசணிக்காய் விளங்குகிறது. பூசணியில் சாம்பல் பூசணி, சிவப்பு பூசணி, மஞ்சள் பூசணி, சர்க்கரை பூசணி என்று பல வகைகள் உள்ளன. அரசாணிக்காய் என்றும் இது அறியப்படுகிறது.
வட அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்ட பூசணிக்காய் எப்படி இந்தியாவின் தேசியக்காயாக மாறியது என யோசிக்கலாம். எளிமையான, தனித்தன்மை மிக்க இது ஏழைகளின் காய் என்று அறியப்படுவதும் ஒரு காரணமாக இருக்கலாம். எந்த தட்பவெட்ப நிலைக்கும் சாதாரணமாக விளைந்து மலிவான விலையில் கிடைக்கும் என்பதால். பூசணியை வளர்க்க அதிக உழைப்பு தேவையில்லை. அவ்வளவு ஏன்? வளமான மண்ணும் தேவையில்லை எனலாம். சாதாரணமாக வீட்டு மொட்டை மாடியில் கூட தரையிலோ, கொடியாகவோ இதைப் படர விடலாம். பூசணிக்காய் வெப்பமான நாட்களிலும் நன்றாக விளைச்சல் தரும் என்பது மட்டுமின்றி, இனிப்பு சுவைக்காகவும் இதற்கு எப்போதும் வரவேற்பு உண்டு.
கல்யாண விருந்துகளிலும் தெய்வம் மற்றும் பித்ரு பூஜை படையல்களிலும் நிச்சயமாக பூசணிக்காய்க்கு தனி இடம் உண்டு. வெளிநாடுகளில் ஹாலோவீன் (Halloween) மற்றும் நன்றி தெரிவிக்கும் (Thanks giving) அந்நாட்டு கலாசார நிகழ்ச்சிகளின் போது பூசணியை மக்கள் பயன்படுத்தி மகிழ்கின்றனர்.
இந்தக் காயின் மருத்துவ குணங்களும் அதிகம். வைட்டமின் B1, B2, B6, D, C, பீட்டா கரோட்டீன், நார்ச்சத்து, கனிமச் சத்து, பொட்டாசியம், இரும்புச்சத்து, கால்சியம், காப்பர், ஜிங்க் இப்படி பல சத்துக்கள் நிறைந்துள்ள இது, பல்வேறு உடல் நல பாதிப்புகளுக்கு நிவாரணம் தருகிறது. உதாரணமாக, பூசணிக்காயில் உள்ள துத்தநாகச் சத்துகள் நமது உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கச் செய்கிறது. இதில் உள்ள மலமிளக்கும் பண்புகள் மலச்சிக்கலைத் தடுப்பதோடு, வயிற்றுப் போக்கு பிரச்னையை வரவிடாமல் தடுக்கிறது.
பூசணிக்காய் மட்டுமல்ல, பூசணி விதைகளிலும் மகத்தான மருத்துவ குணம் உள்ளது சிறப்பு. பூசணி விதையில் நார்ச்சத்து, புரதம், இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் இ ஆகிய சத்துகள் நிறைவாக உள்ளன. மேலும், மாங்கனீஸ், பாஸ்பரஸ், மக்னீசியம், தாமிரம், துத்தநாகம் ஆகிய அத்தியாவசிய தாதுச்சத்துகள் நிறைவாக உள்ளன.
தாவர உணவுகள் மூலம் கிடைக்கக்கூடிய ஒமேகா 3 அமிலம் பூசணி விதைகளில் அதிகளவில் உள்ளதாக மருத்துவக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. இந்த அமிலம் இன்சுலின் சுரப்பை அதிகரிக்கச் செய்து நீரிழிவு பாதிப்பு வராமல் தடுக்கும். மேலும், விதைகளில் ஆரோக்கியமான நல்ல கொழுப்பு நிறைந்துள்ளது. இதில் உள்ள நார்ச்சத்து, ஆன்டி ஆக்ஸிடன்டுகள் கல்லீரல் இயக்கத்தினை சீராக்கி உடல் நலனைக் காக்கும்.
பொதுவாக, பூசணிக்காயை நாம் பொரியல் அல்லது சாம்பாரில் சேர்த்து உட்கொள்வோம். மஞ்சள் பூசணியை ஆன்மிகத்தில் தொடர்புபடுத்தி அமாவாசை நாட்களில் தவறாமல் பொரியல் செய்து முன்னோர்களுக்குப் படைத்து உண்பது வழக்கம். ஆனால், தற்போது இயற்கை உணவு பற்றிய கவனம் அதிகரித்து மஞ்சள் பூசணியை ஜூஸ் வடிவிலும் எடுத்து பலர் ஆரோக்கியம் பெறுகின்றனர்.
இனி, பூசணிக்காய் சமையலை உண்ணும் போது கூடவே அதன் மருத்துவ பலன்களையும் தேசியக் காயான அதன் சிறப்பையும் நினைத்து பலன் பெறுவோம்.