ஒரே மாதத்தில் உங்கள் உடலை ஃபிட்டாக்கிக் காட்ட இந்த 4 விஷயங்கள் போதுமே!
உடலை ஃபிட்டாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று நாம் எல்லோருமே ஆசைப்படுவோம். ஆனால், அது பலருக்கும் சாத்தியப்படுவதில்லை. உடலை ஃபிட்டாக வைத்துக்கொள்வது நம் கையில்தான் உள்ளது. கீழ்க்காணும் இந்த நான்கு விஷயங்களை முறையாகக் கடைப்பிடித்தாலே போதும், நீங்கள் ஃபிட்டாக ஆகி விடுவீர்கள்.
முதல் வாரம் உங்களது உணவில் கவனம் செலுத்துங்கள்: உடல் சீராகவும், ஆரோக்கியமாகவும் செயல் பட உணவு மிக மிக முக்கியமானது. எனவே, தினசரி காய்கறிகள், பழங்கள், முளைக்கட்டிய தானியங்கள், சாலட் வகைகள், அசைவம் சாப்பிடுபவர்களாக இருந்தால் மீன் வகைகளை அதிகம் எடுத்துக் கொள்வதை பழகிக்கொள்வது உடலை ஃபிட்டாக வைக்க உதவும்.
இரண்டாவது வாரம் தூக்கத்தை மேம்படுத்துங்கள்: ஒருவருக்கு தூக்கம் மிகவும் இன்றியமையாதது. இரவில் அதிக நேரம் கண் விழிக்காமல் சரியான நேரத்திற்கு தூங்கி, சரியான நேரத்திற்கு எழுவதை பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். போதிய அளவு தூக்கத்தை ஒருவர் மேற்கொண்டால் மன அழுத்தம் குறைந்து உடல் ஆரோக்கியம் பெறும். குறைந்தபட்சம் தினமும் ஏழு மணி நேரமாவது உறங்குங்கள்.
மூன்றாவது வாரம் உடற்பயிற்சியை மேற்கொள்ளுங்கள்: தினமும் காலையில் தவறாமல் 45 நிமிடம் நடைபயிற்சி, ஓட்டம், சைக்கிளிங் போன்ற உடற்பயிற்சி செய்வதை கட்டாயமாக்கிக் கொள்ளுங்கள். மேலும், எந்த ஒரு இடத்திலும் லிஃப்ட் பயன்படுத்துவதைத் தவிர்த்து, முடிந்தளவு படிக்கட்டுக்களை பயன்படுத்தினால் அடிவயிறு மற்றும் தொடையில் தங்கியுள்ள கொழுப்புக்கள் கரைத்து வயிறு மற்றும் தொடை ஃபிட்டாக இருக்கும்.
நான்காவது வாரம் நிரந்தர மாற்றத்தை ஏற்படுத்துங்கள்: மேற்கண்ட மூன்று வார பயிற்சிகளையும் முறையாக கையாளுவதை தினசரி பழக்கமாக்கிக் கொள்ளுங்கள். மேலும், பாசிட்டிவான எண்ணங்களை உங்களின் மனதில் உருவாக்கும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். உங்களுக்குள் உன்னதமான ஆற்றல் மறைமுகமாக இருப்பதை உணருங்கள். நீங்கள் எந்தவிதமான கட்டுப்பாடும் இல்லாமல் வானில் சுதந்திரமாகப் பறக்கும் பறவையாக உணருங்கள். உங்கள் தினசரி அலுவலில் தியானம், யோகம் போன்றவற்றிற்கு இடம் கொடுங்கள். தினசரி சிறிது நேரத்தை விளையாட்டுக்காக ஒதுக்குங்கள். இவை அனைத்தும் உங்கள் வாழ்க்கைக்கு புத்துணர்ச்சி அளிக்கும். எனவே, மேற்கண்டவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்து, உங்கள் வாழ்க்கையில் அவற்றை நிரந்தரமாக்கிக்கொண்டால், நிச்சயம் உடலை ஆரோக்கியமாகவும், ஃபிட்டாக வும் மாற்றி அமைத்துக்கொள்ள முடியும்.
கட்டுப்பாட்டுடன் ஒரு மாதம் மேற்கண்டவற்றை பழகிப் பாருங்களேன். மிக எளிமையான விஷயங்கள்தானே. இவற்றை செய்து முடித்தால் உங்கள் உடல் உங்கள் சொல் கேட்கும். பிறகென்ன ஆரோக்கிய வாழ்வுதான்.