சரும நோய்களைப் போக்கும் சிறந்த நிவாரணி புங்கம்!

புங்க மரம்
புங்க மரம்https://mooligaikal.blogspot.com

சாலையோரங்களில் நிழலுக்காக வளர்க்கப்படுபவை புங்க மரங்கள். பளபளப்பான கரும்பச்சை இலைகளையும், இளஞ்சிவப்பும் வெண்மையும் கலந்த நெற்பொரி போன்ற பூக்களையும், நீள் சதுர காய்களையும் உடைய மரம் இது. கடற்கரையிலும் ஆற்றங்கரையிலும் தானே வளர்வது. தினசரி சாலையோரங்களில் இவற்றைப் பார்க்கும் நாம், இதன் மருத்துவப் பயன்களை பற்றி அறிந்ததில்லை. அதனைக் குறித்து இனிக் காண்போம்.

புங்க மரத்தின் இலை, பூ, காய், விதை, வேர் என அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டவை. இவை சரும நோய்களைப் போக்கும் மிகச் சிறந்த மருந்தாகும். புங்கம் வேர்பட்டைச் சாறு (புங்கம் பால்) நோய் நீக்கி உடலைத் தேற்றவும், சதை, நரம்புகளை சுருங்கச் செய்யவும், தாதுக்கள் அழுகுவதை தடுக்கவும் பயன்படுத்தலாம்.

புங்கம் பூ, புளியம்பூ, பூண்டு, சீரகம், நன்னாரி வேர், வசம்பு, வெப்பாலை அரிசி இவற்றை இடித்து பசும்பாலில் அரைத்துக் கலக்கி நல்லெண்ணெய் கலந்து பதமாக காய்ச்சி வடித்து அரை அல்லது ஒரு தேக்கரண்டி காலை மட்டும் ஒரு மண்டலம் சாப்பிட, அனைத்துக் கரப்பான், சரும நோய்கள் தீரும். புங்கம் பூவை நிழலில் உலர்த்தி நெய்யில் வறுத்து பொடி செய்து அரை தேக்கரண்டி காலை, மாலை இரண்டு அல்லது மூன்று மண்டலம் தேனில் சாப்பிட 20 வகை மேக நோயும் நீங்கும்.

புங்கம், புளி, மா, வேம்பு, கறிவேம்பு ஆகியவற்றின் இலை, சுக்கு, மிளகு, சீரகம், இந்துப்பு இவற்றை ஒரு லிட்டர் நீரிலிட்டு அரை லிட்டராகக் காய்ச்சி 50 மில்லியாக காலை, மாலை கொடுத்து வர மாந்தம், உள்சூடு, பித்த சுரம் ஆகியவை தீரும். குழந்தைகளுக்கு இதை பாதி அளவாகக் கொடுக்கலாம். புறணி நீக்கிய புங்கம் வேர் பட்டையை இடித்துப் பிழிந்த பாலுடன் சம அளவு தேங்காய் பால் சேர்த்து காய்ச்சி எண்ணெய் பிரியும் பதத்தில் வடித்து, பஞ்சில் நனைத்து பிளவை, ஆறாத புண்கள் ஆகியவற்றுக்கு போட்டு வர அவை விரைவில் ஆறும்.

இதையும் படியுங்கள்:
பாவங்களைப் போக்கும் பர்வதமலை மல்லிகார்ஜுனேஸ்வரர்!
புங்க மரம்

புங்கம் வேர், சிற்றாமணக்கு வேர், சங்கம் வேர் இவற்றை எடுத்து அரை லிட்டர் பூண்டு சாற்றுடன் 2 லிட்டர் விளக்கெண்ணெயில் கலந்து அதில் வாதமடக்கி வேர் பட்டை, கடுகு ரோகிணி பொடித்துப் போட்டு கலந்து 15 நாட்கள் வெயிலில் வைத்து வடிகட்டி காலை மட்டும் ஒரு தேக்கரண்டி கொடுத்து வர எவ்வித சரும நோயும், கரப்பான், சொறி, சிரங்கு, புண் புரைகளும் தீரும்.

இந்த வைத்திய முறைகளை முக்கியமாக ஒரு வைத்தியரிடம் இதன் மருத்துவ பலன்களை கலந்து ஆலோசித்து அதன்படி எடுத்துக் கொண்டால் உடல் நோய் விரைவில் குணமாகும்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com