தரையில் வளரும் பல்வேறு விதமான புற்கள் அதிக மருத்துவ குணம் உடையவை. அதைத் தேடி கண்டுபிடித்து சரியான முறையில் பயன்படுத்திக் கொண்டால், பல்வேறு நோய்களுக்கு மருந்தாகவும், பல நோய்களை அண்ட விடாமலும் செய்துவிடலாம். அப்படிப்பட்ட புல் வகைகள் சிலவற்றை இந்தப் பதிவில் காண்போம்!
தர்பைப் புல்: தர்பை புல் நீர்வளம் மிக்க இடங்களில் வாய்க்கால், வரப்புகளில் அடர்ந்து உயர்ந்து வளரும் ஒரு புல் வகை. பூஜை செயல்களுக்கு பயன்படுத்துவதால் இது அர்ச்சனை புல் என்றும் குறிப்பிடப்படும். தமிழகமெங்கும் காணக் கிடைக்கிறது. இந்தப் புல் முழுமையும் மருத்துவப் பயனுடையது. சிறுநீரைப் பெருக்குதல், சதை நரம்புகளைச் சுருங்கச் செய்து குருதி சீழ்க் கழிவுகளைத் தடுத்தல் ஆகிய குணங்களை உடையது. தர்பை புல்லை வேருடன் எடுத்து ஒன்றிரண்டாக இடித்து ஒரு கலத்தில் இட்டு கொதி நீர் அரை லிட்டர் ஊற்றி 3 மணி நேரம் ஊற வைத்து வடிகட்டி ஒரு நாளைக்கு நான்கு வேளை குடிக்கலாம். சிறுநீரை மிகுத்து அதிலுள்ள மாசுகளை அகற்றும்; இரத்தப்போக்கைக் கட்டுப்படுத்தும். பெரும்பாடு, சீத பேதி ஆகியவை தீரும்.
தர்பைப் புல் பாய், தலையணை போன்ற தியான விரிப்புகள் மீது அமர்ந்து தியானம் செய்தால் 'மனம் நங்கூரம் பாய்ச்சிய கப்பல் போல' அமைதியுறும். ஆதலால் இந்த தியான விரிப்புகளை வீட்டில் வைத்திருப்பது நன்மை பயக்கும். இந்த விரிப்புகளின் மீது படுத்து உறங்கினாலும் ஆழ்ந்த உறக்கம் வரும். தர்பைப் புல்லை பூஜை அறையில் வைத்துக் கொள்ளலாம். இதனால் இறைவனின் பரிபூரண அருள் கிடைக்கும். தர்பை புல்லுக்கு, 'அக்னி கர்ப்பம்' என்று பெயர். இந்த புல்லின் சாம்பலில் காரமும், புளிப்பும் கலந்து இருக்கும். இறைவன் படிமங்களையும், ஐம்பொன்னால் ஆன பூஜை சாமான்களையும் இந்த புல்லின் சாம்பலால் தேய்க்கும் போது ஒளியுடனும், ஆற்றல் குன்றாமலும் இருக்கும்.
லெமன் கிராஸ்: புல் வகையை சேர்ந்த இந்தத் தாவரம் இந்தியாவில் மலைப்பகுதியில் சிறப்பாக செழித்து வளர்கிறது. லெமன் கிராஸ் புல்லின் சாற்றை அருந்தும்போது அது மனித இரத்தத்தில் கலந்து இருக்கும் அழுக்கை சுத்திகரித்து இரத்தத்தை தூய்மையாக மாற்றுகிறது. மன அழுத்தம் நீங்கி மனது புத்துணர்வு பெறுகிறது. ஆழ்ந்த உறக்கம் தருகிறது. மன அழுத்தம் வந்தால் ஜீரண சக்தி குறைவுபடும். இதனால் குடல்புண் உண்டாவது இயற்கை. லெமன் கிராஸ் மன அழுத்தத்தை நீக்குவதால் ஜீரண சக்தி மேம்படுவதுடன், குடல் சார்ந்த பிரச்னைகள் நீங்கி விடுகின்றன.
இதன் சாற்றில் கொலஸ்ட்ரால் இல்லாததால் இது இருதய பாதுகாப்பிற்கு உகந்ததாகும். இதில் போலிக் ஆசிட் இருப்பதால் கர்ப்பிணி பெண்கள் ஆரோக்கியமாக குழந்தை பெற உதவுகிறது. இதில் உள்ள வைட்டமின் ஏ, சி போன்றவை முதுமையை தள்ளிப் போடுகின்றன. மேலும், லெமன் கிராஸ் புல்லில் பொட்டாசியம், துத்தநாகம், கால்சியம், இரும்புச்சத்து, மெக்னீசியம் போன்ற தாது உப்புக்கள், நுண் ஊட்டச்சத்துக்கள் நிரம்ப உள்ளன. ஆதலால் அடிக்கடி உடல் வலி, இருமல், கபம், காய்ச்சல், தலைவலி என்று அவதிப்படுபவர்களின் பிரச்னையை லெமன் கிராஸ் போக்குகிறது.
சாதாரணமாக நாம் போடும் டீயில் இந்தப் புல்லை சிறிதளவு கட் பண்ணி போட்டாலே போதும். அதைக் குடித்தால் அதுவே தலைவலியை போக்கும் தன்மை உடையதாக இருக்கிறது. லெமன் கிராஸ் வாசனைக்கு கொசுக்கள் வருவதில்லை என்பதால் படுக்கை அறைகளில் லெமன் கிராஸ் தைலத்தை தெளித்துக் கொள்கிறார்கள் நமது நாட்டு மக்கள். தமிழில் இதை அக்கந்தம், வாசனைப் புல், கற்பூரப் புல் என்றும் அழைக்கிறார்கள்.
கோரை: தரை மட்டத்திலிருந்து தோன்றியுள்ள தட்டையான இலையுடைய சிறு புல். முட்டை வடிவான நறுமணமுடைய சிறு கிழங்குகளை பெற்றிருக்கும். இக்கிழங்குகள் முத்தக் காசு என குறிப்பிடப் பெறுகின்றன. இக்கிழங்குகளே மருத்துவப் பயன் உடையவை. தமிழகமெங்கும் தாமே வளர்பவை. சிறுநீர், வியர்வை ஆகியவற்றை பெருக்குதல், சதை நரம்புகளை சுருங்கச் செய்தல், உள்ளழல் ஆற்றி உடல் பலம் அளித்தல், குடற்புழுவகற்றல், மாதவிலக்கைத் தூண்டுதல் ஆகிய செய்கைகளை உடையது.
இந்தக் கிழங்கை பொடித்து நீர் விட்டுக் காய்ச்சி வடிகட்டிப் பாலுடன் சேர்த்து காய்ச்சி மோராக்கி அதை உணவுடன் உட்கொள்ள குழந்தைகளின் பசியின்மை, செரியாமை, வயிற்றுப்போக்கு ஆகியவை தீரும். கோரைக்கிழங்கை உலர்த்தி பொடித்து தேனில் குழைத்து சாப்பிட, புத்திக் கூர்மை, தாதுப் பெருக்கம், பசி மிகுதல், உடற்பொலிவு ஆகியவை உண்டாகும். பச்சைக் கிழங்கை அரைத்து, விழுதினை உடலில் தடவி குளிக்க உடலில் உள்ள முடைநாற்றம் அகலும்.
அருகம்புல்: 'ஆல் போல் தழைத்து; அருகு போல் வேரோடி' என்ற பழமொழி இதன் சிறப்பை உணர்த்துகிறது. விநாயகருக்கு உகந்தது அருகம்புல். விநாயகருக்கு சிறப்பான நாட்களில் அருகம் புல் மாலையை சாத்திவிட்டு நம் வேலைகளைத் தொடர்ந்தால் எல்லாவற்றிலும் வெற்றி பெறலாம். அருகம் புல் ஜூஸ் அனைவரும் அதிகமாக கேள்விப்பட்டு அருந்தும் ஜூஸ். விளையாட்டு மைதானம், ரோட்டோர கடைகள், பூங்காக்கள் போன்ற இடங்களில் இந்த ஜூஸ் மிகவும் பிரபலம். காலையில் நடைபயிற்சி செய்பவர்கள் இதை வாங்கி அருந்துவதைக் காணலாம்.
அருகல்புல் ஜூசை அருந்தினால் இரத்த சர்க்கரையை குறைக்கும். பசியைத் தூண்டும். காயங்களை ஆற்றும். வயிற்றில் உள்ள புழு, பூச்சிகளை வெளியேற்ற உதவும். ஞாபக சக்தியைப் பெருக்கும். வாய் துர்நாற்றத்தைப் போக்கும். உடலில் ஏற்படும் கற்றாழை வாடை உட்பட ஏற்படும் வேண்டாத நாற்றத்தையும் போக்கும். ஹீமோகுளோபினை அதிகரிக்கும். இரத்தத்தில் உள்ள விஷத்தன்மையை வெளியேற்றும். இவ்வளவு மருத்துவ குணங்கள் உடையது அருகம்புல்.
இப்படி தரையில் வளரும் புற்களால் ஆன்மிக ரீதியாகவும் அறிவியல் பூர்வமாகவும் பல்வேறு நன்மைகளை அடையலாம். ஆதலால் இவற்றின் பயன்களை தெரிந்து கொண்டு தேவைக்கேற்ப பயன்படுத்தி ஆன்மிக வழி நடந்து, ஆரோக்கியம் காப்போம்!