முள்ளங்கி இந்தியா முழுவதும் பயிரிடப்படுகின்றது என்றாலும் காஞ்சிபுரத்தில் எக்காலத்திலும் அதிகப்படியான முள்ளங்கி பயிர் செய்து கடைகளில் விற்கப்படுவதால், காஞ்சிபுரம் வாசிகள் முள்ளங்கியை அதிகமாக உபயோகிப்பது உண்டு. இதனால் முள்ளங்கியை அதிகமாக பயன்படுத்தும் காஞ்சிபுர வாசிகளுக்கு மதுமேக வியாதி அதிகம் கிடையாது என்று கூறுவர்.
சாதாரணமாக முள்ளங்கி சிவப்பு முள்ளங்கி, வெள்ளை முள்ளங்கி என்பவை நீள வடிவமாய் இருப்பதை காண்போம். அப்படி இல்லாமல் உருண்டை வடிவமான முள்ளங்கியும் உண்டு. அவை குளிர்ந்த தேசங்களிலே பயிராக்கப்படுகின்றன.
முள்ளங்கியை துவரம் பருப்புடன் குழம்பு செய்து சாப்பிடுவதுண்டு.
முள்ளங்கியை துருவி நல்லெண்ணெயில் கடுகு தாளித்து பச்சடி போல் செய்வதும் உண்டு.
இப்படி முள்ளங்கியின் ரசத்தையும் அல்லது முள்ளங்கியையும் உபயோகித்தால் நீர் பையில் உள்ள நீர் நன்றாக பிரியும். அது ரத்தத்தை விருத்தி செய்யும். குளிர்ச்சியையும் உண்டு பண்ணும்.
மதுமேக வியாதியஸ்தர்களுக்கு முள்ளங்கி மிகவும் உபயோகமானது.
முள்ளங்கியை துருவி நிழலில் உலர்த்தி நெய், கற்கண்டு சேர்த்து லேகியம் போல் செய்து அதை மது மேகத்திற்கு உபயோகிப்பது உண்டு.
முள்ளங்கி ஆங்கில மருந்துகளில் ஸ்பிரிட்ஸ் ஈத்தர் நைட்ரஸ் என்னும் மருந்துகளுக்கு சமமாய் நீர்ப்பையில் வேலை செய்யக்கூடியது.
குடல் வாயு என்னும் நோயையும் போக்கும் படியான தன்மை வாய்ந்தது.
சிவப்பு முள்ளங்கியை உபயோகித்தால் ரத்த விருத்தி அதிகப்படும். மேக சுரங்களுக்குச் சிவப்பு முள்ளங்கி நன்மையைச் செய்யும்.
முள்ளங்கி ரசத்தில் ஒரு அவுன்சும், பொரித்த வெங்காரத் தூளில் ஓர் சிட்டிகையையும் சேர்த்து சாப்பிட்டால் நீர் பேதியாகும். பேதிக்கு சாப்பிட விரும்புபவர்கள் இது போல் செய்யலாம்.
முள்ளங்கியின் வேரை கஷாயம் வைத்துச் சாப்பிடலாம் அல்லது உலர்த்தி தூள் செய்து லேகியங்களிலும், தனியாகவும் சேர்த்துச் சாப்பிடலாம்.
காய்ச்சல், தலைவலி, சீதளம் முதலான வியாதிகள் உள்ள காலத்தில் முள்ளங்கியை உபயோகிக்கக் கூடாது.
வேர் இருதயத்திற்குச் சுறுசுறுப்பை உண்டு பண்ணும். நீர் பையில் வேலை செய்து நீர் இறங்கச் செய்யும். உஷ்ணத்தை குறைக்கும். பசியை உண்டு பண்ணும்.
விதையை கக்ஷாயம் வைத்து சாப்பிட குடல் வாதம் நீங்கும். அதிக விதை சேருமானால் வாந்தியை உண்டு பண்ணும். ஆதலால் குறைந்த அளவு உபயோகிப்பது நல்லது.
யுனானி வைத்தியர்கள் முள்ளங்கி விதையையும் முள்ளங்கியையும் அதிகமாக உபயோகிக்கின்றார்கள்.
முள்ளங்கி விதையை தாது விருத்தி லேகியங்களில் சேர்க்கிறார்கள். விதையைத் தூள் செய்து கற்கண்டு சேர்த்து ஒரு சிட்டிகை வீதம் காலை மாலைகளில் சாப்பிட தாது விருத்தியை உண்டு பண்ணும்.
முள்ளங்கி கீரையில் கல்லீரல் சம்பந்தப்பட்ட நோய்களைப் போக்கி இருதயத்துக்கு பலத்தைத் தரும் குணம் உள்ளது.
இதுபோல் நாம் அன்றாடம் பயன்படுத்தும் முள்ளங்கியில் உள்ள மருத்துவ குணங்களை தெரிந்து கொண்டு அதை பயன்படுத்தி நலம் பெறுவோமாக.