ஒவ்வொரு காலத்திற்கும் ஏற்றவாறு உணவினை சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்தை சிறப்புடன் வைத்துக் கொள்ள உதவும். குளிர்காலத்தில் உணவு எளிதில் செரிக்காது. மந்தமான நிலை இருக்கும். அதனால், சுறுசுறுப்பை தரும் வகையில் உள்ள உணவுகளை உட்கொள்வது சிறப்பானதாக இருக்கும். முள்ளங்கியில் உள்ள ஆரோக்கிய நன்மைகள் அதை குளிர் காலத்திற்கு ஏற்ற உணவாக மாற்றுகிறது.
குளிர்காலத்தில் தான் முள்ளங்கி அதிக அளவில் கிடைக்கும். உணவில் முள்ளங்கியை சேர்த்துக் கொள்வதால் பல நன்மைகளும் கிடைக்கும். முள்ளங்கி தண்ணீர் சத்து மிகுந்த காய்கறி என்பதால், அதை உணவில் சேர்த்து சாப்பிடும் போது நீர் சம்மந்தமான நோய்களை சரி செய்ய உதவுகிறது.
குளிர்காலத்தில் ஆரோக்கியமாக இருக்க முள்ளங்கியை சாப்பிட மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். இதில் கால்சியம், போலிக் ஆசிட் , வைட்டமின்-ஏ, பி, சி, புரதம், சல்பர், சோடியம், மெக்னீசியம் மற்றும் அயோடின் ஆகியவை உள்ளன. உடலை பலப்படுத்துவதிலும், உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவதிலும் முள்ளங்கி சிறப்பானது.
செரிமான நன்மைகள்:
முள்ளங்கிச் சாறு, குடல் மற்றும் வயிறு தொடர்பான கோளாறுகளை குணப்படுத்த உதவுகிறது. இதில் கரையாத நார்ச்சத்து ஏராளமாக உள்ளது. நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வது செரிமான அமைப்பை பலப்படுத்துகிறது. செரிமானம் தாமதமாக நடைபெறுபவர்களுக்கு முள்ளங்கி நன்மை பயக்கும். முள்ளங்கியில் உள்ள நீர் சத்து விரைவில் செரிமானமாக உதவுகிறது. குடல் பாதையில் உள்ள நச்சினையும் வெளியேற்றுகிறது. இதனால் மலச்சிக்கல் பிரச்சனை வராமல் தடுக்கப்படுகிறது. முள்ளங்கி கல்லீரலில் உள்ள நச்சுக்களையும் நீக்குவதால் இயல்பாக செரிமான அமைப்புகளை வைத்துள்ளது.
சர்க்கரை நோய்:
முள்ளங்கி சாப்பிடுவதன் மூலம் சர்க்கரை நோய் படிப்படியாக குறைகிறது. முள்ளங்கியில் உள்ள நார்ச்சத்து, மற்ற என்சைம்கள் கணையத்தின் பண்புகளை தூண்டி விடுகின்றன. நார்ச்சத்து உடலின் உள்ள சர்க்கரையின் அளவையும் கட்டுப்படுத்தும். இதனால் இன்சுலின் சுரந்து சர்க்கரை நோயைப் குறைக்கிறது.
உயர் இரத்த அழுத்தம்:
முள்ளங்கியில் பொட்டாசியம் அதிகமாக உள்ளது. பொட்டாசியம் இரத்தத்தை சுத்தம் செய்து இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்கும். சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி, பொட்டாசியம் நிறைந்த உணவுகளை சாப்பிடுவது உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது. மேலும், முள்ளங்கியில் உள்ள அந்தோசயனின், உடலில் சீரான இரத்த ஓட்டத்திற்கு உதவுகிறது.
சிறுநீரக கோளாறுகளை சரி செய்யும்:
முள்ளங்கி சிறுநீரகங்களை சுத்தம் செய்து, அழற்சியை குறைத்து ஆரோக்கியமாக இருக்க வைக்கிறது. இதனால் உடலில் நீர் பற்றாக்குறை ஏற்படாது. நச்சுப் பொருட்களையும் வெளியேற்றுகிறது. சிறுநீரகக் கல் ஏற்படாமல் தடுக்கிறது. கல் இருந்தால் அதையும் நன்கு கரைக்கும் வேலையை செய்கிறது. சிறுநீரக பாதையில் உள்ள தொற்றுக்களை நீக்கி உடலினை சரி செய்கிறது. யூரிக் அமிலம் அதிகமாக சுரப்பவர்களுக்கு முள்ளங்கி சரியான ஒரு தேர்வாக இருக்கும். அடிக்கடி சிறுநீர் கழிப்பவர்களுக்கும் இது அருமருந்தாக உள்ளது.