
இப்போதெல்லாம் புறா வீட்டில் வளர்ப்பது ஆபத்து என்று கூறுகின்றனர். புறா வளர்ப்பது எதனால் ஆபத்தாக மாறுகிறது என்பதை பார்ப்போம்.
வழக்கமாக புறாக்களை வீட்டில் வளர்ப்பது ஒரு அந்தஸ்து தரும் விஷயமாக பார்க்கப்பட்டது. ஒவ்வொரு ஊரிலும் பெரிய வீடுகளில் புறாக்களை வளர்ப்பார்கள். கோவில்கள் மற்றும் மசூதிகளில் அவை கூடு கட்டி வசிக்கின்றன. பெரிய அரண்மனைகள், பெரிய பங்களாக்களில் புறாக்கள் கூடு கட்ட ஏதுவாக சிறிய மாடங்கள் வைத்து கட்டப்பட்டன. இது போன்ற முக்கிய இடங்களில் புறாக்கள் வளர்வதை கண்ட பலரும் தங்கள் வீடுகளில் வளர்க்க ஆரம்பித்தனர்.
புறாக்கள் அழகான வடிவம் கொண்ட சிறிய பறவைகள். இது மனிதர்களை எளிதில் தாக்காது. புறாக்களின் நடையும் அது பறக்கும் போது வரும் பட பட சத்தமும் காண்போரை ரசிக்க வைக்கும்.
புறாக்கள் மிகவும் அமைதியான பறவைகள். அந்த அமைதிக்குப் பின் பல ஆபத்துகள் நிறைந்துள்ளன. புறாக்கள் மிகவும் கடுமையான நோய்களை ஏற்படுத்தக்கூடிய சில ஆபத்தான வைரஸ்களைக் கொண்டுள்ளன. புறாக்களின் எச்சம் ஆபத்தான நுரையீரல் நோய்களை ஏற்படுத்துகிறது. அந்த நுரையீரல் நோய்களை பற்றி காண்போம்.
கிரிப்டோகாக்கோசிஸ்:
கிரிப்டோகாக்கோசிஸ் என்பது கிரிப்டோகாக்கஸ் நியோஃபார்மன்ஸ் என்ற ஒரு வகை பூஞ்சையால் ஏற்படும் நுரையீரல் நோயாகும். இந்த நோய் தொற்று காய்ச்சல், சளி, இருமல் மற்றும் தசை வலி போன்ற அறிகுறிகளை ஏற்படுத்துகிறது. சில நேரங்களில் இந்த தொற்று மூளையை அடைந்து கடுமையான நோயாக மாறக்கூடும். இந்த பூஞ்சைகள் புறாக்களின் இறகுகளில் காணப்படுகின்றன.
ஹிஸ்டோபிளாஸ்மோசிஸ்:
ஹிஸ்டோபிளாஸ்மா காப்சுலேட்டம் என்ற பூஞ்சையால் ஏற்படும் ஒரு நோயை தான் ஹிஸ்டோபிளாஸ்மோசிஸ் என்று அழைக்கின்றனர். இந்தப் வகை பூஞ்சைகள் புறா எச்சங்களில் இருந்து காற்றில் பரவுகின்றன. அவை சுவாசத்தின் மூலம் பரவி இருமல், சளி, காய்ச்சல் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் போன்ற நோய்களை ஏற்படுத்துகின்றன.
சைட்டகோசிஸ்:
கிளமிடியா சிட்டாசி என்ற பாக்டீரியாவால் ஏற்படும் நோயை சைட்டகோசிஸ் என்கிறார்கள். இந்த நோயானது காய்ச்சல், சளி மற்றும் வறட்டு இருமலை ஏற்படுத்தும். இந்த நோய் மிகவும் ஆபத்தானதாகும். உரிய நேரத்தில் சிகிச்சையளிக்கப் படாவிட்டால் மோசமான நுரையீரல் நோயாக மாறும் ஆபாயத்தைக் கொண்டுள்ளது.
புறாக்களில் இருந்து வரும் நோய் தொற்றினை தவிர்க்க:
புறாக்களை வீட்டில் கூண்டில் அடைத்து வளர்க்காதீர்கள். அப்படி இருந்தால் அவற்றை பறக்க விடுங்கள். சிறிய மாடி வீடுகளில் வெளிப்புற மாடங்களை எல்லாம் உருவாக்காதீர்கள். ஒரு வேளை புறாக்களின் எச்சத்தை நீங்கள் மிதித்து விட்டால் அந்த இடத்தை நன்கு கழுவுங்கள்.
உயரமான கோவில்களில் உள்ள கோபுரங்களில் , மசூதிகளில் உள்ள உயரமான மினராக்களில் வசிக்கும் புறாக்களால் அதிக ஆபத்து இல்லை. புறாக்களை தூரமாக நின்று ரசியுங்கள்.அருகில் செல்ல வேண்டாம் . சில ஊர்களில் புறாக்களை சமைத்து சாப்பிடும் பழக்கம் உள்ளது.பறவைக் காய்ச்சல் நோய்கள் எளிதில் பரவும் என்பதால் புறாக்களின் இறைச்சி உண்பதை தவிர்த்து விடுங்கள்.