
1) பார்வை மற்றும் செவித்திறனில் குறைபாடுகள்:
மூப்பின் காரணமாக கண் பார்வை குறைவதும், காது கேளாமையும் கீழே விழுவதற்கு காரணமாகின்றன. பார்வை திறனிலும், கேட்கும் திறனிலும் குறைபாடுகள் இருந்தால் நடக்கும் பொழுது தரை நிலை மற்றும் தடைகள், அதாவது, வழியில் ஏதாவது சாமான்கள் விழுந்து கிடப்பதோ, தரையில் தண்ணீர் சிந்தி கிடப்பதையோ அறியாமல் கால் வைக்கும் பொழுது விழும் அபாயம் அதிகரிக்கிறது.
2) மூட்டு நெகிழ்வுத் தன்மை பாதிப்பு:
வயதானவர்கள் மூட்டுகளில் நெகிழ்வுத் தன்மையை இழப்பதால் நடக்கும் பொழுது வழுக்கி விழுகின்ற அபாயம் அதிகரிக்கிறது. மூட்டுகளில் வலி மற்றும் வீக்கம் இருப்பவர்களால் காலை எடுத்து வைப்பதில் தடுமாற்றமும், சிரமமும் ஏற்படும். எனவே, தடுக்கி விழும் நிலை ஏற்படுகிறது.
3) தசை பலவீனம்:
மூப்பின் காரணமாக தசைகள் பலவீனம் அடைவது ஒரு காரணமாகும். இது நடக்கும் பொழுது சமநிலையை நிலை நிறுத்த கடினப்படுத்துகிறது. அத்துடன் கீழே விழுந்தாலும் அதை தாங்கும் அளவிற்கு தசை பலமும் இருக்காது. இதனால் தவறுதலாக அடி எடுத்து வைத்து தடுமாறி விழுந்துவிடும் அபாயம் உள்ளது.
4) நரம்பு சம்பந்தமான பிரச்னைகள்:
பொதுவாகவே வயதானவர்களுக்கு நரம்புகள் மற்றும் எலும்புகள் பலவீனப்பட்டிருக்கும். நரம்பு சம்பந்தமான பிரச்னைகள் இருப்பவர்கள் சமநிலையை தக்க வைக்க முடியாமல் விழும் வாய்ப்பு அதிகம். நரம்பு பிரச்னை காரணமாக கால்களில் கூர்மையான குத்தும் வலியை உணர்வதாலும், சில சமயம் உணர்வு நரம்புகள் சேதம் அடைவதால் ஏற்படும் உணர்வின்மை காரணமாகவும் சமநிலை இழப்பு ஏற்படுகிறது.
5) பயம் மற்றும் மருந்துகளின் பக்கவிளைவுகள்:
மூப்பின் காரணமாக விழுந்து விடுவோமோ என்ற பயம் ஏற்படுவது இயல்பானது தான். இது அவர்களை பலவீனமாக்குவதுடன், சில மருந்துகளின் பக்க விளைவின் காரணமாகவும் கீழே விழும் அபாயம் உள்ளது. வயதின் காரணமாக ஏற்படும் உடல் நல பாதிப்பிற்கு எடுத்துக் கொள்ளும் மருந்துகள் சில சமயம் சமநிலை மற்றும் நடக்கும் திறனை பாதிக்கலாம்.
சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்:
கீழே விழாமல் இருப்பதற்கு சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கலாம்.
வயதானவர்கள் உள்ள வீடுகளில் ஈரமான தரைகள், பாத்ரூம், குளியலறை மற்றும் கழிவறைகள் சுத்தமாக பராமரிக்க வேண்டியது மிகவும் அவசியம். இல்லையெனில் என்னதான் மெதுவாக நடந்தாலும் வயதானவர்கள் வழுக்கி விழும் ஆபத்து அதிகம்.
குளியலறையை பயன்படுத்தி முடித்ததும் ஈரமின்றி உலர்வாக இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். ஈரம் எங்கிருந்தாலும் அங்கு பூஞ்சைத் தொற்று ஏற்படும் வாய்ப்பு அதிகம். அங்கு கால்களை ஊன்றும் பொழுது பிடிமானம் இல்லாமல் வழுக்கி விடும்.
சமையலறை, குளியலறை, கழிவறைகளில் பதிக்கப்படும் டைல்ஸ்களில் தண்ணீர் இருந்தால் தெரிவதில்லை. எனவே வழுக்கி விழாதபடி ஆன்டிஸ்கிட் டைல்ஸ்கள் பதிக்க வேண்டியது மிகவும் அவசியம்.
முடிந்தால் முதியவர்கள் புழங்கும் எல்லா இடங்களிலும் அதிக வழுவழுப்பு இல்லாத சொரசொரப்பான தரையாக அமைப்பது நல்லது.
அத்துடன் அவர்கள் பயன்படுத்தும் கழிவறைகளில் பிடிமானத்திற்கு ஒரு கைப்பிடியை பொருத்தி விடுவதும் நல்லது. அவர்கள் அதனை பிடித்துக் கொண்டு உட்கார்ந்து எழுந்திருப்பதற்கு வசதியாக இருக்கும்.