
பூக்களின் அழகுக்கும், நறுமணத்திற்கும் மயங்காதவர்கள் இல்லை. ஆனால், குறிப்பாகக் கோடைக்கால வெப்பத்தில் பூக்கள் சீக்கிரமே வாடிவிடுவது அல்லது கறுத்துப் போய்விடுவது பலருக்கு வருத்தமளிக்கும். தினமும் பூக்கள் வாங்க முடியாதவர்கள், வாரத்திற்கு ஒருமுறை மொத்தமாக வாங்கி வைக்கும்போது, சில நாட்களிலேயே அவை புத்துணர்ச்சியை இழந்துவிடும். இப்படி வாடாமல், பூக்களை ஒரு வாரம் வரை ஃபிரெஷ்ஷாக வைத்திருக்கச் சில எளிய வீட்டு வழிமுறைகள் உள்ளன. அவை என்னென்ன என்று பார்ப்போம்.
நீங்கள் வாங்கிய பூக்களை, அழுத்தம் கொடுக்காமல் மெதுவாக ஒரு வாழை இலையில் வைத்துச் சுருட்டி, காற்றுப் புகாத ஒரு ஸ்டீல் டப்பாவில் வைத்து மூடி, ஃபிரிட்ஜில் சேமிக்கலாம். வாழை இலையின் ஈரப்பதமும், காற்றுப் புகாத டப்பாவும் பூக்களின் ஈரத்தன்மையை இழக்காமல் பாதுகாக்க உதவும். இந்த முறையில் மல்லிகை போன்ற பூக்கள் ஒரு வாரம் ஆனாலும் மொட்டாகவே புத்துணர்ச்சியுடன் இருக்கும்.
உங்கள் வீட்டில் வாழை இலை இல்லை என்றால், பூக்களை ஒரு மெல்லிய வெள்ளைக் காகிதத்தில் மெதுவாக வைத்துச் சுருட்டிக்கொள்ளுங்கள். இப்போது ஒரு காட்டன் துணியை எடுத்துத் தண்ணீரில் நனைத்து நன்றாகப் பிழிந்து கொள்ளுங்கள். காகிதத்தில் சுற்றிய பூவை இந்த ஈரமான காட்டன் துணிக்குள் லேசாக வைத்து, அதையும் ஒரு காற்றுப் புகாத ஸ்டீல் டப்பாவில் வைத்து மூடி, ஃபிரிட்ஜில் வையுங்கள். ஈரத் துணி பூக்களின் புத்துணர்ச்சியை நீண்ட நாட்களுக்குப் பாதுகாக்கும். துணி காய்ந்து போனால், மீண்டும் நனைத்து ஈரப்படுத்தி வைக்க வேண்டும்.
உங்கள் வீட்டில் ஃபிரிட்ஜ் வசதி இல்லை என்றாலும் பூக்களை ஃபிரஷ்ஷாக வைத்திருக்க வழி உண்டு. ஒரு அகன்ற பாத்திரத்தில் தண்ணீர் எடுத்துக் கொள்ளுங்கள். அந்தத் தண்ணீரின் மேல் ஒரு வாழை இலையை மிதக்க விடுங்கள் இப்போது நீங்கள் வாங்கிய பூக்களை அந்த வாழை இலையின் மேல் வையுங்கள். ஒரு காட்டன் துணியை ஈரப்படுத்திப் பிழிந்து, அந்தப் பாத்திரத்தை முழுமையாக மூடி விடுங்கள். அதன் மேல் ஒரு ஸ்டீல் தட்டை கவிழ்த்து வைத்தால் காற்று உள்ளே செல்லாது. இந்த முறையில் வெப்பம் குறையும், பூக்கள் வாடாது.
இந்த எளிய வீட்டுக்குறிப்புகளைப் பின்பற்றுவதன் மூலம், மல்லிகை மட்டுமின்றி, ரோஜா, முல்லை போன்ற பெரும்பாலான பூக்களையும் கோடைக்கால வெப்பத்திலும் ஒரு வாரம் வரை வாடாமல், வாங்கியது போலவே ஃபிரஷ்ஷாகப் பயன்படுத்தலாம். பூக்களின் அழகையும் நறுமணத்தையும் அதிக நாட்கள் அனுபவிக்க இந்த முறைகள் நிச்சயம் உதவும்.