
பொதுவாக, இயற்கையாக வளரும் பழங்கள் நம் உடலுக்கு தேவையான பல ஊட்டச்சத்துகளை வழங்குகின்றன. அதிலும் அதிக சத்து நிறைந்த ஒன்று தான் செவ்வாழைப்பழம். இதில் வைட்டமின் சி, பி6, பி1, பி2, இரும்புசத்து, நார்சத்து, பொட்டாசியம், புரதம், கால்சியம், மெக்னிசியம், ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளிட்ட ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இந்த பழத்தில் உள்ள சத்துகளை போலவே அதன் தோலிலும் பல ஊட்டச்சத்துகள் உள்ளன. இந்நிலையில், செவ்வாழைப்பழத்தின் தோல்கள் சருமத்திற்கும், கண்களுக்கும் எவ்வாறு பயன் அளிக்கிறது என்பதை பற்றி விரிவாக தெரிந்து கொள்வோம்.
நன்மைகள் என்ன?
தினமும் செவ்வாழைப்பழம் சாப்பிடுபவர்களுக்கு சரும பிரச்சினைகள் வருவதில்லை என்று சொல்லப்படுகிறது. இதில் நார்சத்து மட்டுமல்லாமல் தண்ணீர் சத்து மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்களும் அதிகமாக உள்ளன.
இதனால் சருமத்திற்கு தேவையான நீர்ச்சத்தை வழங்கி முகத்தில் ஏற்படும் சுருக்கங்களை குறைக்க உதவுகிறது. அதேபோல், பிரிட்ஜில் வைத்த செவ்வாழைப்பழத்தின் தோலை முகத்தில் மசாஜ் செய்தால் கரும்புள்ளிகள் நீங்கும்.
முகப்பரு மற்றும் சிறுசிறு கட்டிகள் இருந்தால் பழத்தின் தோலை அரைத்து சருமத்தில் தொடர்ந்து பூசி வந்தால் நல்ல மாற்றத்தை காணலாம்.
செவ்வாழைப்பழத் தோல் ஸ்கிரப் செய்வது எப்படி?
முகம் பொலிவு பெற செவ்வாழைப்பழத்தை அரைத்து அதோடு காய்ச்சிய பால், முல்தானி மட்டி, கடலைமாவு ஆகியவற்றை பேஸ்ட்டாக கலந்து முகம் மற்றும் கழுத்து, கை, கால் பகுதிகளில் தடவி, ஐந்து நிமிடங்கள் கழித்து விரல்களால் மசாஜ் செய்து பின்னர் குளிர்ந்த நீரில் கழுவுங்கள்.
இதன் மூலம் சருமத்தில் உள்ள நுண்ணுயிர்கள், தூசு, கரும்புள்ளிகள் வெளியேறி இறந்த செல்களை நீக்கும். வறண்ட சருமம் உடையவர்களுக்கும் இந்த முறை நல்ல பயனளிக்கும்.
கண் பிரச்னைகளுக்கு தீர்வு
செவ்வாழைப்பழத்தில் வைட்டமின் ஏ சத்து மிகுந்ததால் மாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது உதவுகிறது.
தினமும் 100 கிராம் சாப்பிட்டு வந்தால் கண் தொடர்பான பிரச்னைகள் வராமல் பாதுகாக்கலாம். கண் பார்வை மங்குவதை முன்னரே உணர்ந்தால் தினமும் ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட்டு வரலாம்.
பழத்தை போலவே இதன் தோலும் கண்களை பாதுகாக்க உதவி செய்கிறது. இதன் தோலை கண்களின் மேல் வைப்பதால் சூட்டைக் குறைத்து, நீர் வடிதலை கட்டுப்படுத்தி, கண்களுக்கு குளிர்ச்சி தரும்.
ஆகவே, செவ்வாழைப்பழம் மற்றும் அதன் தோல் சரும பராமரிப்பு மற்றும் கண் ஆரோக்கியத்திற்கு இயற்கை மருந்தாக பயன்படுகிறது. மேற்கண்ட குறிப்பை பின்பற்றி வருவதால் சருமம் பொலிவு பெறுவதுடன், உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.