தானிய வகை என எடுத்துக்கொண்டாலே அதில் சிவப்பு அரிசியில் மட்டும்தான் விட்டமின் E சத்து நிறைந்துள்ளது. மேலும், இந்த அரிசியில் மாவுச்சத்து, நார்ச்சத்து போன்றவை அதிகம் இருப்பதால் இரத்தத்தில் அதிகம் சேர்ந்துள்ள கொழுப்பை கரைக்க உதவும். சிவப்பு அரிசியில் உள்ள தாது உப்புக்கள் நகங்கள், பற்கள், தசைகள், எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது.
நீங்கள் உடல் எடையை குறைக்க விரும்பும் நபராக இருந்தால், சிவப்பு அரிசி உங்களுக்கு ஒரு வரப்பிரசாதம். மற்ற அரிசிகளில் நார்ச்சத்து இல்லை. ஆனால், சிவப்பு அரிசியில் நார்ச்சத்து இருப்பதால் உடல் எடை குறைப்புக்கு சிறந்த தேர்வாகும். மேலும், சர்க்கரை நோய் உள்ளவர்கள் வெள்ளை அரிசி சாப்பிடுவதை விட சிவப்பு அரிசி மிகவும் நல்லது. சிவப்பு அரிசியை பயன்படுத்தி செய்யப்படும் உணவுகளை குழந்தைகளுக்கு அடிக்கடி கொடுப்பதால் அவர்களின் உடல் பலம் பெறும்.
மற்ற அரிசிகளை விட சிவப்பு அரிசியில் கார்போஹைட்ரேட் குறைவாகவும் இரும்புச்சத்து, துத்தநாகம், மக்னீசியம், மாங்கனிஸ், விட்டமின் பி1, பி3, பி6 போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகமாக உள்ளன.
இந்த அரிசியில் நார்ச்சத்தும் புரதமும் மிகுந்து காணப்படுவதால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே சாப்பிடலாம்.
தாய்மார்கள் சிவப்பு அரிசி உட்கொண்டால் அவர்களுக்கு தாய்ப்பால் அதிகம் சுரக்கும். மேலும், இதனால் அவர்களின் உடல் பிரச்னைகளும் சரியாகும்.
இது எளிதாக ஜீரணம் அடையும் என்பதால் இதை உட்கொள்ளுவதால் ஜீரணக் கோளாறு ஏற்படாது. வயிற்றில் மந்தத்தை ஏற்படுத்தாமல் எளிதாக இருப்பது போன்ற உணர்வைக் கொடுக்கும்.
இரத்த அழுத்த பிரச்னை மற்றும் நீரிழிவு நோய் உள்ளவர்கள் இந்த அரிசியை தாராளமாக உட்கொள்ளலாம்.
சிவப்பு அரிசியில் தோசை, புட்டு, களி போன்றவற்றை செய்து சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது என மருத்துவர்கள் பரிந்துரை செய்கின்றனர்.
எனவே, வாரம் ஒரு முறையாவது சிவப்பு அரிசியால் செய்யப்பட்ட உணவை எடுத்துக் கொள்ளுங்கள். நமது உடலை ஆரோக்கியமாக பார்த்துக் கொள்வது நமது தலையாயக் கடமை.