முடவாட்டுக்கிழங்கு என்பது தமிழ்நாட்டு மலைப்பகுதிகளில் கிடைக்கும் ஒரு வகை பெரணித் தாவரத்தின் கிழங்கு ஆகும். இக்கிழங்கை கொல்லிமலையில், முடவன் ஆட்டுக்கால் கிழங்கு என்றும், ஏற்காடு சேர்வராயன் மலைப்பகுதியினர் ஆட்டுக்கால் என்றும் அழைப்பர். இக்கிழங்குகள் பார்ப்பதற்கு கம்பளி போர்த்தியது போல மெல்லிய இலைகளுடன் ஆட்டுக்கால் போன்றே காணப்படும்.
35 முதல் 40 வயதானதும் பொதுவாக எல்லோரும் சொல்வது மூட்டு வலியைத்தான். அன்று கோல் ஊன்றாத பாட்டி, தாத்தாக்களை எல்லாம் பார்த்துள்ளோம். ஆனால், இன்று நடுத்தர வயதிலேயே மூட்டு வலி வந்து பலரை முடக்கிப் போட்டு விடுகிறது. இதற்குத் தீர்வு காண எத்தனை வைத்தியங்கள் செய்தும் பலருக்கும் பலன் கிடைப்பதில்லை. இதனால் மாடிப்படி ஏற முடியாமலும், சில அடி தூரம் கூட நடக்க முடியாமலும், சம்மணம் போட்டு உட்கார முடியாமலும், முடங்கிக் கிடக்கிறார்கள். இதை எல்லாம் தீர்த்து வைக்கக்கூடிய ஒரு மூலிகைக் கிழங்குதான் முடவாட்டு கிழங்கு. இதை சைவ ஆட்டுக்கால் கிழங்கு என்று கூறுவார்கள். அதாவது ஆட்டுக்கால் சூப் குடித்தால் எத்தனை நன்மைகளோ அத்தனை நன்மைகள் இதை சாப்பிட்டால் வந்து சேரும். இது இரு பாறைகளுக்கிடையே வளரக்கூடிய மலைப் பகுதிகளில் மட்டுமே விளையும் ஒரு தாவரம் ஆகும்.
இது தமிழகத்தில் கொல்லிமலையிலும், சேர்வராயன் மலையிலும் கிடைக்கிறது. இதற்கு வேர்கள் கிடையாது. பாறைகளில் விளையக்கூடிய இந்தக் கிழங்குகள், செம்பு, தங்கம், இரும்பு, கால்சியம், பாறைகளில் இருக்கும் சிலிக்காவை உறிஞ்சும் தன்மை கொண்டது. வாதம், பித்தம், கபம் ஆகியவற்றை விரட்ட சித்தர்கள் இதை 48 நாட்களுக்கு சாப்பிட்டு வந்தனர்.
மருத்துவ குணம்: இந்தக் கிழங்கை 6 மாதம் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம். குழந்தைகளின் வாத நோய்களுக்கு இது அருமருந்து. கழுத்து வலி, தோள்பட்டை வலி, முதுகு வலி போன்றவற்றை குணப்படுத்தும். முடக்கு வாதம் வந்து முடங்கியவர்கள் இந்தக் கிழங்கில் சூப் வைத்துக் குடிக்கலாம். மேலும் மூட்டு வலி, முழங்கால் வலி, குதிகால் வலி, கெண்டைக் கால் வலி, தசைப்பிடிப்பு, வீக்கம், காய்ச்சல், செரிமான உபாதைகள், உள்ளிட்டவைகளுக்கு இந்தக் கிழங்கு அற்புதமான மருந்து. கர்ப்பப்பை சுருங்குதல், உள்ளுறுப்பு சுருங்குதல், புற்றுநோய், உள்ளிட்டவற்றுக்கு நல்ல மருந்து. முடவாட்டு கிழங்கில் உள்ள முடி போன்ற தோலை எடுத்து நன்கு கழுவி சுத்தம் செய்து சுடுநீரில் போட்டு குளித்து வந்தால் சரும அலர்ஜி, தேமல், அரிப்பு போன்றவை நீங்கும். இந்தக் கிழங்கைக் கொண்டு கொல்லிமலையில் சூப் செய்யப்படுகிறது. இந்த சூப்பின் சுவை அப்படியே ஆட்டுக்கால் சூப்பின் சுவையை போலவே இருக்கும்.
சூப் தயாரிக்கும் முறை: முடவாட்டுக் கிழங்கின் மேல் தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி இதைப் பயன்படுத்தலாம். அல்லது சிறு துண்டுகளாக நறுக்கி காயவைத்து இடித்து பொடியாக செய்து எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். இத்துடன் மிளகு, சீரகம், இஞ்சி, பூண்டு, சின்ன வெங்காயம் மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சூப் தயாரிக்கப்படுகிறது. இதில் தக்காளி மற்றும் புளி சேர்க்கக்கூடாது.
அருவிக்கு ஏறி, இறங்கி சென்று குளித்து விட்டு வருவோர் இந்த சூப்பை குடித்தால் புத்துணர்ச்சி அடைவதாகத் தெரிவிக்கின்றனர். அழிந்து வரும் இந்த மூலிகைக் கிழங்கை பாதுகாக்க வேண்டும் என்பதால் தற்போது இந்தக் கிழங்கை எடுக்க வனத்துறையினர் அனுமதிப்பதில்லை. இதனால் தனியாருக்கு சொந்தமான நிலங்களில் இந்த முடவாட்டுக்கிழங்கு பயிரிடப்படுகிறது.