பாக்டிரியன் ஒட்டகங்கள் (Bactrian camel) மங்கோலியன் ஒட்டகங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. அவை ஒரு கண்கவர் மற்றும் தனித்துவமான ஒட்டக இனமாகும். அவை சாதாரண ஒட்டகங்களில் இருந்து பல விதங்களில் வேறுபட்டு இருக்கின்றன. அவற்றின் சிறப்புகள் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
இரட்டைத் திமில்கள்: மங்கோலியன் ஒட்டகங்களுக்கு இரண்டு கூம்புகள் உள்ளன. அதேசமயம் மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்காவில் பொதுவாகக் காணப்படும் பிற ஒட்டகங்களுக்கு ஒரே ஒரு கூம்பு மட்டுமே உள்ளது. இவற்றின் உடலில் இருக்கும் நீளமான தடித்த ரோமங்கள் குளிர்கால நிலைக்கு பொருத்தமாக அவற்றை பாதுகாக்க உதவுகின்றன.
இரட்டை அடுக்கு கோட்: இவற்றின் உடலில் இரட்டை அடுக்கு கோட் போன்ற அமைப்பு உள்ளது. மென்மையான அண்டர் கோட் மற்றும் கரடு முரடான வெளிப்புற அடுக்கு ஆகியவற்றைக் கொண்டுள்ளது. எனவேதான் இவற்றால் குளிர்காலத்திலும் கோடை காலத்திலும் இரண்டு விதமான பருவ நிலைகளை தாக்குப்பிடிக்க முடிகிறது. இவற்றின் கூம்புகள் வட்டமாகவும் சாதாரண ஒட்டகங்களை விட பெரியதாகவும் இருக்கும்.
குஷன் பாதங்கள்: இவற்றின் பாதங்கள் பெரியதாகவும் மெத்தை போன்று மென்மையாகவும் இருக்கும். அதனால் தங்களின் பூர்வீக வாழ்விடங்களில் இருக்கும் மென்மையான மணல் மற்றும் பாறை நிலப்பரப்பில் எளிதாக நடக்க உதவுகின்றன. சாதாரண ஒட்டகங்கள் திணிக்கப்பட்ட பாதங்களைக் கொண்டிருக்கின்றன. அவை மணல் பாலைவனங்களுக்கு மட்டும் ஏற்றவையாக உள்ளன.
இரு பருவ நிலைக்கும் ஏற்ற உடலமைப்பு: மங்கோலியன் ஒட்டகங்கள், பாலைவனங்கள் மற்றும் புல்வெளிகள் உட்பட மத்திய ஆசியாவின் கடுமையான குளிர்கால நிலைக்கு நன்கு பொருந்தி வாழ்கின்றன. அதேபோல வெப்பமான கோடை காலத்தில் தீவிர வெப்பநிலை கொண்ட சூழலில் கூட தாக்குப்பிடித்து வளர்கின்றன. ஆனால், பிற ஒட்டகங்கள் வெப்பமான வறண்ட பாலைவன சூழலுக்கு மட்டுமே ஏற்றவை.
அளவு மற்றும் எடை: மங்கோலியன் ஒட்டகங்கள் 6 முதல் 8 அடி உயரம் வரை இருக்கின்றன. ஆயிரம் முதல் 2200 பவுண்டுகள் வரை எடையுள்ளதாக இருக்கின்றன. இவற்றின் கூம்புகளில் கொழுப்பை சேமிக்கின்றன, தண்ணீரை அல்ல. உணவுப் பற்றாக்குறையாக இருக்கும் காலகட்டங்களில் இந்தக் கொழுப்பை ஆற்றலாக அவை மாற்றுகின்றன.
உணவுமுறை: மங்கோலியன் ஒட்டகங்கள் புதர்கள் மற்றும் பாலைவனத் தாவரங்கள் உள்ளிட்ட கடினமான மற்றும் நார்ச்சத்துள்ள தாவரங்களை உண்ணும். இவற்றின் சிக்கலான வயிறு கரடு முரடான உணவை திறம்பட ஜீரணிக்க உதவுகிறது. மேலும் உணவில் இருந்து அதிகபட்ச ஊட்டச்சத்துக்களை பிரித்தெடுக்கவும் உதவுகிறது. இந்த ஒட்டகங்கள் பகல் பொழுதில் உற்சாகத்துடன் இரை தேடும். இவை தனியாகவோ அல்லது குழுக்களாகவோ காணப்படும். ஒரு குழுவில் 30 விலங்குகள் வரை இருக்கும்.
கலாசார முக்கியத்துவம்: பல மத்திய ஆசிய கலாசாரங்களில் மங்கோலியன் ஒட்டகங்கள் பாரம்பரிய வாழ்க்கை முறைகள் மற்றும் பொருளாதாரங்களுடன் ஒருங்கிணைந்தவை. இவை வலிமை மற்றும் ஆற்றலைக் குறிக்கின்றன. போக்குவரத்து பொருள்களை எடுத்துச் செல்வதற்கு உதவுகின்றன. சவாரி செய்வதற்கும் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றின் பாலும் அருந்தப் பயன்படுகிறது. இவற்றின் உரோமங்கள் ஆடைகள் நெய்வதற்காக வெட்டப்படுகின்றன.
காட்டு பாக்டிரியன் ஒட்டகங்கள்: இரட்டைத் திமில் ஒட்டகங்களில் தனித்த ஒருசில உள் இனங்கள் இருப்பதாகக் கூறுகின்றனர். இவை தனி இனமாகும். இவை மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளன. சில நூறு எண்ணிக்கை மட்டுமே காடுகளில் உள்ளன. இவை மூன்று வெவ்வேறு இடங்களில் வாழும் வகைகளை கொண்டுள்ளன. இயற்கை வாழ் இரட்டை திமில் ஒட்டகங்கள் கோபி பாலை நிலத்தில் வாழ்கின்றன. இவை வளர்ப்பு இரட்டைத் திமில் ஒட்டகங்களில் இருந்து பழக்க வழக்கங்களிலும் மரபணு தொடரமைப்பு முறைகளிலும் மாறுபட்டு உள்ளன. மிகக் குறைந்த எண்ணிக்கையில் இருக்கின்றன. வளர்ப்பு ஒட்டகங்கள் உப்பு நீரைக் குடிக்காது. ஆனால் இயற்கைவாழ் இரட்டைத் திமில் ஒட்டகங்கள் உப்பு நீரைக் குடித்து வாழும் என்று கூறுகிறார்கள்.