ஹீமோகுளோபின் ஒவ்வொரு செல்லுக்கும் ஆக்சிஜனை கொண்டு செல்லும் அத்தியாவசியமான புரதம் ஆகும். இது உடலின் ஆரோக்கியத்தை பராமரிக்கவும் ஆற்றலை அதிகப்படுத்தவும் இன்றியமையாதது. உடலின் இரத்த ஓட்டம் நன்றாக இருந்தால் தான் சுறுசுறுப்பாகவும் , சோர்வில்லாமலும் இருக்க முடியும். உடல் ஆரோக்கியமாக இருந்தால் தான், நமது அன்றாட பணிகளை தொய்வில்லாமல் பார்க்க முடியும். இங்கு ஹீமோகுளோபின் குறைந்தால் அது ஆரோக்கியத்தை உடனடியாக பாதிக்கும், பெரும்பாலும் பெண்களுக்கு தான் இந்தக் குறைபாடு அதிகளவில் உள்ளது. இதனால் பெண்களுக்கு ஏற்படும் உடல்நலப் பிரச்னைகள் குறித்து இங்கு காண்போம்.
ஹீமோகுளோபின் எவ்வளவு இருக்க வேண்டும்?
உடலின் ஆரோக்கியத்தையும் ஆற்றல் மட்டத்தையும் பராமரிப்பதில் ஹீமோகுளோபின் மிகவும் முக்கியமானது. பொதுவாக பெண்களுக்கு இருக்க வேண்டிய ஹீமோகுளோபின் அளவு 12 - 15.5 g/dL, இந்தளவில் ஹீமோகுளோபின் எண்ணிக்கை இருந்தால், அது பெண்களின் ஆரோக்கியத்தை சீராக வைக்க உதவும்.
இதற்கும் குறைவாக ஹீமோகுளோபின் அளவு 11g/dL அளவிற்கு கீழே சென்று விட்டால், அவர்களின் ஆரோக்கியத்தை உடனடியாக பாதிக்கும். கை கால்களில் வலி, உடல் வலி, சோர்வு போன்ற பிரச்சனைகளை அவர்கள் சந்திக்க நேரிடும். இது மேலும் குறையும் போது அதிகப்படியான முடி உதிர்வு, உடல் வெளிர்தல், தலை சுற்றல், நடுக்கம் ஆகியவை ஏற்படும்.
ஹீமோகுளோபின் அளவு குறைய காரணம்?
பொதுவாக ஹீமோகுளோபின் அளவு குறைய பல காரணங்கள் இருந்தாலும், பெண்களுக்கு முக்கிய காரணமாக இருப்பது மாதசுழற்சி மற்றும் கர்ப்ப காலத்தில் ஏற்படும் இரத்த சோகை ஆகியவை தான். ஒரு சில பெண்களுக்கு இருக்கும் ஒழுங்கற்ற மாதசுழற்சியில், ஏராளமான இரத்தம் வெளியேறுவதால் இந்நிலை ஏற்படலாம். இந்தப் பிரச்சனையை சரிசெய்யாவிட்டால், அது மோசமான உடல்நிலைக்கு கொண்டு செல்லும்.
உடனடியான தீர்வுகள்:
உடலில் ஹீமோகுளோபின் அளவு 9 g/dL ஆக இருக்கும் போது உடனடியாக, அதன் அளவை அதிகரிப்பதில் கவனம் செலுத்த வேண்டும். ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க ஒரு சில சத்து ஊசிகள் போடப்பட வேண்டும். அதனுடன் தினசரி இரும்பு சத்து மாத்திரைகளும், வைட்டமின் பி, ஈ போன்ற மாத்திரைகளும் சாப்பிட வேண்டும். அத்துடன் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும் உணவுகளை தினசரி எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.
அதுவே ஹீமோகுளோபின் அளவு 7g/dL இருக்கும்போது உடனடியாக புதிய ரத்தம் ஏற்றப்பட வேண்டும். அதன் பின்னர் தொடர் கண்காணிப்பில் இருக்க வேண்டும். அதன் பின்னர் தினசரி உணவு முறைகளில் மாற்றங்களை கொண்டு வந்து ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க வேண்டும்.
ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும் உணவு வகைகள்
காய்கறிகள்: ஹீமோகுளோபின் அளவை அதிகரிப்பதில் முதன்மையானது பீட்ரூட் , தினசரி இதை ஜூஸாகவோ, பொரியலாகவோ உணவில் சேர்த்துக் கொள்ளலாம். கீரை வகைகள், அவரை, கேரட், பீன்ஸ், முருங்கைக் காய் ஆகியவை உடலில் ஹீமோகுளோபின் அதிகரிக்கச் செய்யும்.
பழங்கள்: பழங்களில் மாதுளை ஹீமோகுளோபினை அதிகரிக்கச் செய்வதில் முக்கியப் பங்கு ஆற்றுகிறது. உலர் திராட்சை, பேரிச்சை, அத்திப்பழம் போன்றவையும் சாப்பிடலாம்.
தானியங்கள் & பருப்பு வகைகள் : சிவப்பரிசி, கேழ்வரகு, கருப்பு கவுனி, மாப்பிள்ளை சம்பா போன்ற தானியங்களில் செய்த உணவுகளை தினசரி சாப்பிட வேண்டும். சோயாபீன்ஸ் கொண்டைக்கடலை, பொட்டுக் கடலை, பச்சை பயறு, பாதாம், வால்நட் போன்ற பருப்பு வகைகளை சாப்பிடுவதும் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும்.
அசைவம் : அதிக கொழுப்பு நிறைந்த கடல் மீன்கள், சிவப்பு நிற இறைச்சிகள், ஆட்டு சுவரொட்டி, முட்டை ஆகியவை சாப்பிடுவது அதிக பலனை தரும்.
தவிர்க்க வேண்டிய உணவுகள் : வாழைத் தண்டு, முள்ளங்கி ஆகியவை.