
மனித வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் மிக முக்கியமான ஒன்று தூக்கம். பொதுவாக சிலர் தாங்கள் இருக்கும் சூழலையும் மறந்து எந்த இடத்துலையும் தூங்கிவிடுவார்கள். அலுவலக பணிகள், வகுப்பறைப் பாடங்கள், நீண்ட தூர வாகனப் பயணம் செய்துவிட்டு வீடு திரும்பியதுடன் சிறிது நேரம் கிடைத்தாலும் தூங்குவது இயல்பு. இது போன்று ஓய்வு எடுப்பது தவறல்ல. ஆனால், எந்த நிலையில் தூங்க வேண்டும் என்பது மிகவும் முக்கியம். உண்மையில், தூங்குவதற்கான சிறந்த நிலை எது? யாருக்கு எந்த நிலை பொருத்தமானது? என்பதைப்பற்றி இங்கு தெரிந்து கொள்வோம்.
இளைஞர்கள் ஆரோக்கியமாக இருப்பவர்கள் எந்த நிலையிலும் தூங்கலாம். ஆனால் வயதானவர்கள் சிலர் தாங்கள் தூங்கும் நிலையில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக, ஏதேனும் உடல் நல பிரச்னைகள் இருந்தால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
முதுகு மற்றும் கழுத்து வலி உள்ளவர்கள்
முதுகு மற்றும் கழுத்து வலி உள்ளவர்கள் மல்லாந்து படுத்து தூங்குவது சிறந்த நிலையாக இருக்கும். இவ்வாறு தூங்குவதால் முதுகில் ஏற்படும் அழுத்தத்தை குறைக்கும். இந்த நிலையில் தூங்கும் போது தலையணையை சரியாக பயன்படுத்த வேண்டும்.
மூச்சுத் திணறல் மற்றும் குறட்டை
மூச்சுதிணறல் பாதிப்பு உள்ளவர்களுக்கு, தூங்கும் போது மூச்சு காற்று செல்லும் பாதைகள் தடைப்படலாம். இது சுவாசிப்பதில் சில பிரச்னைகளை ஏற்படுத்தி அடிக்கடி குறட்டையை ஏற்படுத்தும். இந்த சூழலில் பக்கவாட்டில் படுத்து தூங்குவது நல்லது.
கர்ப்பிணிப் பெண்கள்
கர்ப்பக்காலத்தில் குறிப்பாக கடைசி மூன்று மாதங்களில் பக்கவாட்டில் தூங்குவது பெரும்பாலான மருத்துவர்களால் அறிவுறுத்தப்படுகிறது. இடது, வலது என இரண்டு பக்கம் தூங்கினாலும் இடது பக்கத்தில் திரும்பி தூங்குவது சிறந்தது. ஏனெனில், இது உள் உறுப்புகளில் அழுத்தம் கொடுக்காமல், ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.
முக சரும பராமரிப்பு
மல்லாந்து தூங்குவது முகத்திற்கு நல்லது. ஏனென்றால், இந்த நிலையில் படுத்துக்கொள்ளும் போது நம் முகம் தலையணையில் அழுந்தாது. இது நம் சருமத்தை மென்மையாக பாதுகாத்து சுருக்கங்களையும் குறைக்கிறது.
சளி, காய்ச்சல், சுவாச பிரச்சனை
சிலருக்கு தங்கள் உடலை சற்று மேல் நோக்கி வைத்து தூங்குவது வசதியாக இருக்கும். குறிப்பாக, ஒவ்வாமை, சளி, காய்ச்சல், சுவாச தொற்றுகளால் பாதித்தவர்கள், நெஞ்சு எரிச்சல் உள்ளவர்களுக்கு இது உதவும். வழக்கமான நிலையில் படுக்கும் போது நம் வயிறு மற்றும் உணவு குழாய் ஒரே நிலையில் இருக்கும். இது வயிற்றில் இருக்கும் அமிலத்தை மேல் நோக்கி கொண்டு வரலாம். ஆனால், உடலை சற்று உயர்த்தி படுத்துக்கொள்ளும் போது உடலின் செயல்படும் ஈர்ப்பு விசை அமிலத்தை கீழே தள்ளிவிடும்.
குப்புற தூங்கும் நிலை
குப்புறப்படுத்து தூங்குவது எல்லோருக்கும் சிறந்த நிலையாக இருப்பதில்லை. இது முதுகு வலி, கழுத்து வலி, தோள்பட்டை வலி மட்டுமல்லாமல் முக சுருக்கத்தையும் ஏற்படுத்தும்.
எனவே, ஒவ்வொருவரும் தங்கள் உடல்நிலை, வசதி மற்றும் சூழ்நிலையைப் பொருத்து தூங்கும் நிலையை தேர்வு செய்ய வேண்டும். சரியான தலையணை, மெத்தை போன்றவை நல்ல தூக்கத்திற்கு வழிவகுக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)