

நாக்கின் பின்புறம் கேன்சர் பாதித்தால், அறுவை சிகிச்சை செய்து கேன்சர் கட்டியை அகற்றுவது என்பது ஐந்து ஆண்டுகளுக்கு முன் சவாலான விஷயமாக இருந்தது. காரணம், தாடையை இரண்டாக பிளந்து, நாக்கின் பின்புறம் இருக்கும் கேன்சர் கட்டியை அகற்ற வேண்டும். பல நேரங்களில் கட்டியை அகற்ற சரியான கோணம் கிடைக்காது; கட்டியை அகற்றி பின் தாடையை இணைத்து பழைய நிலைக்கு கொண்டு வர மறு சீரமைப்பு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். இதற்கு 10 மணி நேரத்திற்கு மேல் ஆகும்.
அறுவை சிகிச்சைக்குப் பிறகு காயம் ஆறுவதற்கு பல மாதங்கள் ஆகலாம். பழைய நிலை அறுவை சிகிச்சையில் பேசுவதற்கும் உணவு அருந்துவதற்கும் சிரமமாக இருக்கும். எனவே, சிக்கலான இடத்தில் கேன்சர் பாதிப்பு உள்ளது என்றால், கதிரியக்க சிகிச்சை செய்து கொள்ளுங்கள் என்று சொல்லி அனுப்பி விடுவார்கள். கழுத்து, மார்பு பகுதிகளில் கேன்சர் பாதித்தாலும் இதே நிலைதான்.
நவீன ரோபோடிக் அறுவை சிகிச்சை முறையில், இரண்டு மணி நேரத்தில் துல்லியமாக கட்டியை அகற்ற கூடிய 'TORS' (Transoral Robotic Surgery) ஓரல் ரோபோட்டிக் சர்ஜரி செய்யப்படுகிறது. இதன் மூலம் அறுவை சிகிச்சை சுலபமாக செய்ய முடியும்; அடுத்த நாளே வாய் வழியாக இயல்பாக சாப்பிடவும், பேசவும் முடியும்.
ரோபோடிக்ஸ் சிகிச்சை மூலம் கழுத்து, வயிறு, மார்பு போன்ற சிக்கலான உடல் பகுதிகளில் வரக்கூடிய கேன்சருக்கு அறுவை சிகிச்சை செய்வது மிகவும் சுலபமாகும். தைராய்டு சுரப்பியில் கேன்சர் கட்டிகள் வந்தால், அதனை அறுவை சிகிச்சை செய்து தான் அகற்ற வேண்டும். இந்த இடமும் மிகவும் சிக்கலான பகுதியாகும். ஹார்மோன் கோளாறு, கேன்சர் கட்டி இரண்டும் பெண்களை அதிகம் பாதிக்கிறது.
தைராய்டு சுரப்பியில் கேன்சர் கட்டி இருந்து, அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டால், "கழுத்தில் வெளியே துளை போடுவதால் தழும்பு தெரியுமே!" என்று 15 முதல் 90 வயது வரை உள்ள எல்லா பெண்களும் தயங்குவார்கள். ரோபோட்டிக்ஸ் சிகிச்சையில் இந்த பிரச்னை இல்லை.
அக்குள் பகுதியில் ஒரு சென்டிமீட்டர் அளவில் துளை போட்டு, சுலபமாக தைராய்டு கட்டியை அகற்றி விடலாம். கம்ப்யூட்டர் உதவியுடன் துல்லியமாக, இயல்பை விட 10 மடங்கு பெரிதுப்படுத்தி, கேன்சர் பாதித்த பகுதியை மட்டும் அகற்ற முடிகிறது இந்த ரோபோடிக்ஸ் சிகிச்சை மூலம்.
இதே போன்று, தற்போது அதிகம் பாதிக்கும் மலக்குடல் கேன்சர், மற்றும் கேன்சருக்கு முந்தைய 'பாலிப்ஸ்' என்ற சிறிய கட்டிகள், நாக்கில் உருவாகும் கேன்சர், கழுத்தில் உருவாகும் நெறி கட்டிகளையும் ரோபோட் சிகிச்சை மூலம் சுலபமாக அகற்றி விடலாம். தற்போது வந்திருக்கும் ரோபோட்டிக் தொழில்நுட்பம் ஒரு வரப்பிரசாதம் ஆகும்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)