
வழக்கமாக வாட்ஸ்அப்பில் பல பார்வேர்டு செய்திகள் வந்து கொண்டே இருக்கும் . இதை பல குழுக்களில் பகிரவே என்று சில நபர்கள் இருப்பார்கள். அந்த செய்திகளில் ஒன்று "சர்க்கரை நோய் என்பது ஒரு வியாதியே அல்ல, அது ஒரு ஊட்டச்சத்து குறைபாடுதான்" என்று தொடங்கி, பெரிய இழுவையோடு, ஒரு விளக்க செய்தி வந்திருக்கும். "சர்க்கரை உடலுக்கு தேவையான ஒன்று, அது அதிகரிப்பது குறைபாடு அல்ல. சர்க்கரை நோய்க்கு அலோபதி மருத்துவம் செய்வதால் பல பக்க விளைவுகளை ஏற்படுத்தும். இது உங்களின் ஒவ்வொரு உறுப்பு செயலிழப்பை ஏற்படுத்தும்.." என்று பீதியை கிளப்பி இருப்பார்கள். இது போன்ற செய்திகளை யாரோ பதிவிட, அதை உண்மை என நம்பும் சிலரும் இருக்கிறார்கள்.
இது போன்ற செய்தியை நம்பி திடீரென்று அலோபதி மருத்துவத்தை நிறுத்தி உயிருக்கு போராடியவர்கள் பலர் உள்ளனர். இந்த செய்திகளை வாட்ஸ்அப்பில் படித்து பிரச்சாரம் செய்வதையே தொழிலாகக் கொண்டு தெருவிற்கு ஒருவர் இருக்கிறார். "எனக்கு சுகர் 450 இருக்கு, நான் மாத்திரையை தொடுவதே இல்லை , கடுமையாக உழைக்கிறேன் அதில் சுகர் எல்லாம் தெறிச்சி ஓடிவிடும்" என்பார். "உங்களுக்கு என்ன 250 தானே இருக்கு? அதெல்லாம் சுகரே கிடையாது" என்பார். "மாத்திரை எல்லாம் சாப்பிடாதீங்க அது கிட்னியை பாதிக்கும்" என்று சொல்லுவார். ஆனால், சொல்லிய நபர் காலையிலே கிளிப்டின் வகை மாத்திரையை விழுங்கி விட்டுதான் வந்திருப்பார். இவர்களை நம்பி மாத்திரை போடாமால் 250 உள்ள சுகரை 400க்கு ஏற்றி ஹாஸ்பிடலில் கிடக்கின்றனர் பலர்.
இது போல கொழுப்பு பற்றிய பிரச்சாரம் உண்டு. "கொழுப்பு சத்து இருந்தால் தான் உடல் இயங்க முடியும். கொழுப்பை குறைக்க மாத்திரை எடுத்தால் உடல் சோர்வாகும்" என்று ஆரம்பித்து வாட்ஸ்அப்பில் தீயாய் பரவும் சில செய்திகள் உள்ளன. கொழுப்பும் சர்க்கரையும் உடலுக்கு தேவையான ஒன்று தான். ஆனால் , அவை நிர்ணயிக்கப்பட்ட அளவை தாண்டும் போது உயிருக்கு உலை வைக்கின்றன. சர்க்கரை நோய் அதிகமானால் அல்லது வைத்தியம் பார்க்கா விட்டால் சிறுநீரகம், கண், கை, கால், இதயம், எலும்பு என பல அங்கங்கள் மோசமான பாதிப்பை அடையும்.
"அதிக கொழுப்பை குறைக்காவிட்டால் அது இதயத்தை பாதிக்கும். இரத்த அழுதத்திற்கு வைத்தியம் தேவை இல்லை, அது தானாகவே சரி ஆகி விடும். அது போல இதய அடைப்புக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை என்பது தேவையில்லை, இதயத்தில் அடைப்பை அது தானாகவே சரி செய்து கொள்ளும்" என்று சில வாட்ஸ்அப் தகவல்கள் சுற்றுகின்றன. இதை எல்லாம் நம்பினால் உங்களின் உயிருக்கு கேடாய் முடியும். இரத்த அழுத்தம் கட்டுக்குள் கொண்டு வர மருந்து அவசியம். அது போல பைபாஸ், ஆஞ்சியோ சிகிச்சை முறைகள் மருத்துவரால் பரிந்துரைக்கும் போது அதை பின்பற்றுவது அவசியம். அந்த மருத்துவர் மீது நம்பிக்கை இல்லாவிட்டால் வேறு ஒரு மருத்துவரை அணுக வேண்டுமே தவிர வாட்ஸ்அப் தகவலை நம்ப கூடாது.
சில மருந்துகளில் பக்க விளைவுகள் உண்டு என்றாலும், அது மோசமான நிலைக்கு கொண்டு சொல்லாது. இந்த மாத்திரைகள் அரசாங்கத்தால் பல முறை ஆய்விற்கு உள்ளாக்கப்பட்டு நம்பகமானது என்று முடிவு கிடைத்த பின்னர்தான் மருத்துவரும் பரிந்துரைக்கிறார்.
நீரழிவு, இரத்த அழுத்தம், கொலஸ்டிரால் போன்ற நோய்களுக்கு மாத்திரை எடுத்துக் கொள்பவர்கள் நீண்ட ஆயுளுடன்தான் இருக்கின்றனர். வாட்ஸ்அப் தகவல்களை நம்பி உடல் நிலையை மோசமாக்கி கொண்டவர்களும் உள்ளனர்.