
பெரியவர்கள் எப்போதுமே "சாப்பிட்ட உடனே குளிக்காதே" என்று சொல்வதைக் கேட்டிருப்போம். ஆனால், இந்த பழக்கத்திற்கு பின்னால் உள்ள உண்மை என்ன, அதனால் ஏற்படும் விளைவுகள் என்ன என்பதை நாம் முழுமையாகத் தெரிந்து வைத்திருக்கிறோமா?
உணவு, உறக்கம், உடற்பயிற்சி போன்ற தினசரி பழக்கவழக்கங்களில் நாம் செய்யும் சிறு தவறுகள்கூட நம் உடல் நலத்தை பாதிக்கலாம். காலை உணவை தவிர்ப்பது, இரவில் கண் விழித்து செல்போன் பார்ப்பது, நேரம் கெட்ட நேரத்தில் சாப்பிடுவது போன்ற தவறான பழக்கங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் என்பது நமக்கு தெரியும். அதேபோல சாப்பிட்டவுடன் குளிப்பதும் உடலுக்கு நல்லதல்ல என்கிறார்கள் நிபுணர்கள்.
உணவு உண்டதும், நம் உடலின் செரிமான அமைப்பு சுறுசுறுப்பாக இயங்கத் தொடங்கும். அப்போது, நாம் சாப்பிட்ட உணவை செரிமானம் செய்வதற்காக வயிற்றுப் பகுதிக்கு அதிக அளவில் ரத்தம் பாயும். இது இயல்பான ஒரு உடலியல் செயல்பாடு. ஆனால், சாப்பிட்ட உடனேயே நாம் குளிக்கச் செல்லும்போது, உடல் வெப்பநிலை மாறுபாடு காரணமாக ரத்த ஓட்டம் திசை மாற வாய்ப்புள்ளது. வயிற்றுக்குச் செல்ல வேண்டிய ரத்த ஓட்டம் சருமத்திற்கு அதிகமாக செல்ல நேரிடலாம். இதனால் செரிமான செயல்முறை மெதுவாகும்.
உணவு செரிமானம் தாமதமானால் வயிறு உப்புசம், அஜீரணம், நெஞ்செரிச்சல் போன்ற வயிற்று உபாதைகள் ஏற்படலாம். மேலும், உடல் சோர்வு, மந்த நிலை போன்ற பிரச்சனைகளும் உருவாகலாம். சாப்பிட்ட உடனே குளிப்பது மட்டுமல்லாமல், சாப்பிட்டதும் டீ, காபி போன்ற பானங்கள் அருந்துவதும் செரிமானத்தை பாதிக்கும்.
எனவே, ஆரோக்கியமான செரிமானத்திற்கு உணவு உண்டவுடன் குளிப்பதை தவிர்ப்பது நல்லது. குளிப்பதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பு சாப்பிடுவது அல்லது குளித்து முடித்து ஒரு மணி நேரம் கழித்து சாப்பிடுவது சிறந்த வழி. இது தொடர்பாக உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால், மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது மிகவும் நல்லது.
உங்கள் உடல்நலம் குறித்த எந்த விஷயத்திலும் மருத்துவ நிபுணர்களின் கருத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பது எப்போதும் சிறந்தது. ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு சரியான உணவுப் பழக்கங்களும், அன்றாட நடவடிக்கைகளும் மிக அவசியம்.