வலிப்பு நோய்க்கு நிவாரணம் தரும் சடாமாஞ்சில் மூலிகை!

சடாமாஞ்சில்
சடாமாஞ்சில்
Published on

பாரம்பரிய மருத்துவ முறையான ஆயுர்வேதத்தில் பல்வேறு வகையான மூலிகைகள் பயன்படுத்தப்படுவதை அறிவோம். அவற்றுள் நரம்பு பாதிப்புகளுக்கு நிவாரணமாக பயன்படுத்தப்படும் மூலிகைதான் சடாமாஞ்சில். தற்போது மறைந்து வரும் மூலிகைகளுள் இது ஒன்றாகவும் அறியப்படுகிறது.

இது இமயமலை, நேபாளம் மற்றும் சீனாவின் மலைத்தொடர்களில்  வளர்க்கப்படுகிறது. 1 மீட்டர் வரை வளரக்கூடிய இந்த தாவரத்தின் இலைகள் பதினைந்திலிருந்து 20 சென்டி மீட்டர் நீளமும், 2.5 சென்டி மீட்டர் அகலமும் கொண்டிருக்கும். இதன் பூக்கள் மங்கிய சிவப்பு நிறத்தில் அல்லது நீல நிறத்தில் இருக்கும். இதன் தண்டு, கிழங்கு முடி போன்ற நார்களுடன் தாடி போல் இருப்பதாலேயே இதற்கு சடாமாஞ்சில் என்னும் பெயர் வந்தது என்கிறார்கள். இதன் வேர்த்தண்டுக்கிழங்குகள் அழுத்தி வடிகட்டப்பட்டு, அத்தியாவசிய எண்ணெயை உருவாக்குகின்றன.

இது வாசனை திரவியம், பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. அற்புதமான ஊட்டச்சத்துக்களுடன் உயிர்வேதியியல் சேர்மங்கள் மற்றும் இராசயனங்கள் கொண்டு  மருத்துவ சிகிச்சைகளுக்கு ஏற்றதாகிறது. இதில் உள்ள சில சேர்மங்களில் ஆக்டினிடைன், அரிஸ்டோலீன், கரோட்டின், கராலீன், கிளாரெனோல், கூமரின் உள்பட எண்ணற்ற பல சேர்மங்கள் உள்ளன.

இதன் சக்தி வாய்ந்த ஆக்ஸிஜனேற்ற மற்றும் நரம்பியல் பண்புகள் ஆக்ஸிஜனேற்ற செல் சேதத்துக்கு எதிராக உடலை பாதுகாக்கிறது. இந்த மூலிகை நரம்பு மண்டலத்தில் ஹார்மோன்களின் சமநிலையை பராமரிக்க உதவுகிறது. இதனால் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வலிப்பு நோயை குறையச் செய்கிறது. ஆயுர்வேதத்தில் வலிப்பு நோய்களைத் தடுக்க சடாமாஞ்சில் வேரை மருந்தில் சேர்ப்பது குறிப்பிடத்தக்கது.

சடாமாஞ்சில் எண்ணெயை நல்லெண்ணெயுடன் கலந்து தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் நரம்பு தளர்ச்சி குறையும் என்கின்றனர். சடாமாஞ்சில் வேர் சக்தி வாய்ந்த நரம்பு டானிக்காக செயல்பட்டு  மன அழுத்தத்தையும் சோர்வையும் குறைத்து ஆரோக்கியமான நரம்பு செயல்பாட்டை மேம்படுத்துவதற்கு உதவுகிறது.

மன அழுத்தத்தை எதிர்த்துப் போராடவும் அறிவாற்றல் செயல்திறனை அதிகரிக்கவும் நரம்பு பலவீனத்தை குறைக்கவும் இந்த மூலிகை உதவுவதாக சொல்கிறது ஆயுர்வேதம். நரம்பு குறித்த நிவாரணங்களினால் உடல் மற்றும் மனதில் அமைதி பெற உதவும் சடாமாஞ்சில் தூக்கமின்மைக்கு சிகிச்சையளிப்பதற்கான ஒரு நிருபிக்கப்பட்ட இயற்கை தீர்வைத் தருகிறது.

இதையும் படியுங்கள்:
மனப் பதற்றத்தை உடனே குறைக்க உதவும் 10 எளிய வழிமுறைகள்!
சடாமாஞ்சில்

மேலும், சடாமாஞ்சில் பலவிதமான சரும உபாதைகளுக்கு இயற்கை மருந்தாக தீர்வு தருகிறது. இது, அழற்சி போன்ற சருமத்தில் ஏற்படும் பூஞ்சை தொற்றுகளுக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது. சரும அரிப்பு, செதில் உதிரும் நிலை போன்றவற்றுக்கு சடாமாஞ்சில் பொடியை தடவினால் நல்ல பலன் கிடைக்கும். சொரியாசிஸ் தழும்புகள் கூட மறையும். காயங்களின் மீது இந்த பொடியை தடவினால் பாக்டீரியாவால் ஏற்படும் தொற்றுநோய்களை தடுக்கச் செய்யும்.

சடாமாஞ்சில் சக்தி வாய்ந்த பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் கொண்டவை என்பதால் காலரா, ஃபுட் பாய்ஸன், செப்டிக் டெட்டனஸ் போன்ற பல தொற்றுகளுக்கு இது பயனுள்ளதாக இருக்கும். இது சிறுநீரக நோய்த் தொற்றுகளையும் குணப்படுத்தும் என்றெல்லாம் ஆயுர்வேதம் குறிப்பிடுகிறது.

இதுபோன்ற பல்வேறு உடல் பாதிப்புகளுக்கு தீர்வாக அமைகிறது சடாமாஞ்சில் எனும் ஆயுர்வேத மூலிகை. இருப்பினும், இதை சுயமாக முயற்சிப்பது தவறு. மேற்பூச்சாக சடாமாஞ்சில் எண்ணெயை பயன்படுத்தலாம். ஆனாலும் எந்த ஒரு மருத்துவத்தையும் சுயமாக எடுக்காமல் மருத்துவரின் அறிவுரையுடன் எடுப்பது பாதுகாப்பானது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com