
உயிர்கள் முதலில் தோன்றியது உப்பு (Salt) நீரிலிருந்து தான். கடலை விட்டு நிலத்திற்கு வந்த பின்னும் உயிர்களின் வளர்ச்சிக்கு உப்பு இன்றியமையததாகிவிட்டது. உண்மையில் உப்பில்லா விட்டால் உயிர் வாழ்க்கையே இல்லை. நாம் உண்ணும் உணவு செரிக்க, நரம்புகளின் செயல் திறனை அதிகரித்து உமிழ்நீர் சுரக்க உப்பு உதவுகிறது. உயிரணுக்களின் வளர்சிதை மாற்றத்திற்கு உப்பு தேவையான ஒன்று. உடல் வளர்ச்சிக்கும், பாதுகாப்பிற்கும் உப்பு(Salt) தேவைப்படுகிறது.
முன் காலத்திய மனிதனின் உப்பு (Salt) உபயோகம் 250 மி.கி மட்டுமே. ஆனால், இப்போது 24 மடங்கு அதிகரித்து மனிதன் உப்பை உணவாகவே உட்கொள்கிறான். இந்த நிலையில் சில இடங்களில் 10,000 மி.கி வரை குடலுக்குள் உப்பை தள்ளி விஷம் ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
உப்பில் 40 சதவீதம் சோடியமும் 60 சதவீதம் குளோரைடும் உள்ளது. இவை இரண்டும் உடலுக்கு தேவையான ஒன்று தான்.
உங்கள் உடலில் உள்ள திரவங்களை சமநிலைப்படுத்தவும், நரம்புகள் மற்றும் தசைகள் குறிப்பாக உங்கள் இதயம் சரியாக செயல்படுவதை உறுதி செய்யவும் உடலுக்கு சோடியம் அவசியம்.
உங்கள் உடலில் சோடியம் குறைவாக இருக்கும் போது, சிறுநீரகங்கள் திரவத்தைத் தக்கவைத்துக் கொள்கின்றன. சோடியம் அதிகமாக இருக்கும் போது, சிறுநீரகங்கள் அதை சிறுநீரில் வெளியிடுகின்றன. அதிகமாக சோடியம் இருந்தால், அது இரத்தத்தில் படிந்து தண்ணீரைத் தக்க வைத்துக் கொள்ளும். இது இரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது. இது சிறுநீரக நோய், இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும்.
'உப்பில்லாத உணவு சுவை இருக்காது' என்பது உண்மை தான் அதற்காக அதனை அளவிற்கு அதிகமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. உணவில் சேரும் அதிகளவு உப்பு ரத்த அழுத்தம் உயர்விற்கு மட்டும் காரணமல்ல. அது நம் உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியையும் குறைக்கும் என்கிறார்கள் ஜெர்மனியின் பான் மருத்துவ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள். ஒரு நாளைக்கு ஒருவர் 5 கிராம் உப்பு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்கிறார்கள். அதே வேளையில் 5 கிராம் உப்பிற்கு குறைவாக உப்பு(Salt) சாப்பிடுவதும் கெடுதல் தான். குறைவான உப்பு சாப்பிடுகிறவர்களுக்கு இதய நோய்கள் வரும் வாய்ப்பு அதிகம் என்கிறார்கள்.
உப்பு உடலில் சேரும் போது நமது உணவில் இயல்பாகவே கால்சியம் சத்து குறைகிறது. எனவே, கண்களில் புரை நோய் உண்டாகிறது. சிறுவர்கள் விரும்பும் ஐஸ்கிரீமில் 'சோடியம் அல்கினேட்' என்ற உப்பைக் கலக்கிறார்கள். குளிர் பானங்களிலும் இதை கலப்பதால் உடல் உறுப்புகள் விரைவாக கெடுகின்றன.
நீங்கள் உணவில் நேரடியாக உப்பைக் குறைத்து சாப்பிட்டாலும், உங்கள் உடலில் உப்பு அதிகரிக்கும் ஏன் தெரியுமா? நீங்கள் எடுத்துக் கொள்ளும் சில உணவுப் பொருட்களில் மறைந்திருக்கும் சோடியம் உப்பால் தான் என்கிறார்கள்.
நாம் அன்றாடம் எடுத்துக் கொள்ளும் சில உணவுப் பொருட்கள் மூலம் எப்படி உப்பு உடலில் சேர்கிறது என்பதை பார்ப்போம்.
ஹோட்டல்களில் வாங்கி சாப்பிடும் சாலட்களில் 2 ஸ்பூனுக்கு 350 மி.கி சோடியம் சேர்க்கப்படுகிறது என்கிறார்கள். இதனை தவிர்க்க சாலட்களில் ஆலிவ் ஆயில் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து சாப்பிடுங்கள் என்கிறார்கள்.
காலை உணவாக தற்போது பலர் கார்ன் பிளேக்ஸ் சாப்பிடுகிறார்கள். கார்ன் பிளேக்ஸ் ஒரு கப்பில் 270 மி.கி சோடியம் சேர்க்கப்படுகிறது என்கிறார்கள்.
வெளியிடங்களில் வாங்கி சாப்பிடும் சூப்களில் ஒரு நாளைக்கு தேவையான பாதி அளவு சோடியம் சேர்கிறது என்கிறார்கள். சூப்கள் ஒரு முறை பரிமாறும்போது 1,000 மி.கி சோடியம் அதில் இருக்கலாம் என்கிறார்கள்.
பாஸ்ட் புட் எனப்படும் பாஸ்தா, சாஸ் இவை அனைத்திலும் சிபாரிசு செய்யப்பட்டதை விட பாதி அளவு அதிகமாக சோடியம் உடலில் சேர்கிறது என்கிறார்கள். வெளியிடங்களில் வாங்கி நாம் சமைக்கும் சீஸ் போன்றவைகளிலும் சோடியம் உப்பு சேர்த்தே வருகிறது என்கிறார்கள்.
கடைகளில் விற்கப்படும் பிரட் மற்றும் ரொட்டிகளில் அதன் வடிவமைப்பு மற்றும் சுவைக்காக சோடியம் சேர்க்கப்படுகிறது. ஒரு துண்டு ரொட்டியில் 200 முதல் 400 மி.கி சோடியம் இருக்கலாம் என்கிறார்கள். எனவே, இந்த மாதிரியான உணவுப் பொருட்களை தவிர்க்க வேண்டும். அட்லீஸ்ட் உணவுப் பொருட்களின் லேபிள்களில் குறிப்பிடப்பட்டுள்ள அளவை பார்த்து வாங்கியாவது பயன்படுத்த வேண்டும் என்கிறார்கள்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)