சந்தனம் வாசனைக்கு மட்டுமல்ல; மருத்துவத்துக்கும்தான்!

சந்தனக்கட்டை தூள்
சந்தனக்கட்டை தூள்
Published on

கோயில்களில் பிரசாதமாகத் தரப்படும் சந்தனம் நெற்றியில் பொட்டு இடவோ, வாசனைத் திரவியமோ மட்டுமல்ல; ஆயுர்வேத மருத்துவப்படி பார்த்தால் சந்தனத்தில் பெருமளவு மருத்துவ குணங்கள் இருக்கின்றன. குறிப்பாக, முகப்பருவுக்கான மருந்தில் சந்தனம் பெரும் பங்கு வகிக்கிறது.

முகப்பரு தொல்லையால் அவதிப்படும் டீன் ஏஜ் பெண்களுக்கு சந்தனம் எளிதான நிவாரணம். சந்தனம், மஞ்சள் இரண்டையும் அரைத்து பேஸ்ட் பக்குவத்தில் தினமும் தூங்கும் முன் முகத்தில் பூசி வர வேண்டும். இவ்வாறு தொடர்ந்து 14 நாட்கள் செய்து வரும்போது முகப்பரு நீங்கி விடும். அதோடு முகத்திற்கு வசிகர அழகும் கிடைக்கும். அது மட்டுமின்றி, உடலில் இருக்கும் நோய் கிருமிகளும் நசிந்து போகும்.

சிறு குழந்தைகளுக்கு உடலில் சொறியும், அதன் மூலம் சிறு சிறு பருக்களும் தோன்றும். அப்பருக்கள் இளம் சிவப்பு நிறத்தில் இருக்கும். சந்தனத்துடன் துளசி சாற்றை சேர்த்து நன்றாக அரைத்து தினமும் இரண்டு நேரம் குழந்தைகளின் உடலில் பூசி வாருங்கள். தொடர்ந்து மூன்று நாட்கள் இவ்வாறு செய்வதால் சொறி, பருக்கள் நீங்கி விடும்.

சந்தனம் கிருமிகளை எதிர்த்து உங்கள் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும். இதன் காரணமாக சிறுநீர் பாதை நோய் தொற்று மற்றும் வலிக்கு ‘சந்தன சர்பத்' பரிந்துரைக்கப்படுகிறது. சந்தனத்தில் உள்ள இயற்கையான ஆன்டி மைக்ரோபியல் பண்புகள் சிறுநீரக தொற்றுகளிலிருந்து எளிதாக விடுபட உதவுகிறது. சந்தன சர்பத், சர்க்கரை, வெட்டிவேர் மற்றும் சுத்தமான சந்தன பவுடர் கலந்து செய்யப்படுவது.

சந்தன சர்பத் உங்கள் உடலை கோடை வெப்பத்தால் ஏற்படும் பிரச்னைகளில் இருந்து குணப்படுத்தும். சந்தனத்தின் அழற்சி எதிர்ப்பு பண்புகள் எந்த வகையான எரியும் உணர்வையும் அமைதிப்படுத்தும் மற்றும் கிருமி நாசினிகள், முகப்பரு மற்றும் புண்கள் உருவாகாமல் தடுக்கும். இந்தப் புத்துணர்ச்சியூட்டும் பானம் இதயம், மூளை, வயிறு மற்றும் கல்லீரலுக்கும் குளிர்ச்சியான விளைவை அளிக்கிறது. இது சோர்வு மற்றும் பலவீனத்தை தடுப்பதோடு, சிறுநீர் வெளியேற்றத்தை மேம்படுத்துகிறது.

முகத்தில் அதிக தழும்பு உள்ளதா? சந்தனத்தை பால் அல்லது ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 1 மணி நேரம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனால் முகத்தில் உள்ள தழும்புகள் மட்டுமின்றி, வெயிலால் ஏற்பட்ட கருமையும் அகலும்.

சந்தனக்கட்டைகளை அரைத்து தலையில் தடவி வந்தால் கோடை வெயிலால் தலையில் ஏற்படும் கொப்புளங்கள் குணமாகும். மேலும், தலைவலி, மூளை, இதய பாதிப்புகளை சரிசெய்யும். சுத்தம் செய்த நல்ல சந்தனத்தை நீரில் கரைத்து அருந்திவந்தால் இரத்தத்தை தூய்மை செய்து, உடலை குளுமையாக்கி, மனதை ஊக்கப்படுத்தி, சுறுசுறுப்பாக வைத்திருக்கும்.

இதையும் படியுங்கள்:
பணியை சிறப்பாகச் செய்து, உற்பத்தித் திறனை மேம்படுத்த உதவும் 5 வழிகள்!
சந்தனக்கட்டை தூள்

சந்தனக்கட்டையை எலுமிச்சை சாற்றுடன் இழைத்து உடலின் அரிப்பு, நமைச்சல், சொறி சிரங்கு, தேமல், வீக்கம் உள்ள இடங்கள் மற்றும் சகல சரும வியாதிகளுக்கும் பயன்படுத்த அவை குணமாகும். சந்தனம் மற்றும் துளசியுடன் கற்பூரத்தைக் கலந்து தலையில் தடவினால் தலைவலி விரைவில் நீங்கும். சூட்டினால் உண்டாகும் கண் கட்டிகள் மறைய, சந்தன விழுதை எலுமிச்சை சாற்றில் கலந்து இரவில் கண் கட்டிகளின் மேல் தடவி வந்தால் குணமாகும். சந்தனப் பொடி மற்றும் புதினா பொடியை ஒன்றாக கலந்து குளிப்பதற்கு முன் உங்கள் முகம் அல்லது உடலில் மாஸ்க்காக பயன்படுத்துங்கள். இதோடு சிறிதளவு ரோஸ் வாட்டரையும் சேர்த்தால் கூடுதல் பலன் கிடைக்கும். சந்தன தேநீர் அதன் ஹெபடோப்ரோடெக்டிவ் பண்பு காரணமாக கல்லீரல் மற்றும் பித்தப்பை பிரச்னைகளை நிர்வகிக்க உதவுகிறது. சந்தன தேநீரை உட்கொள்வதன் மூலம் மனநல பிரச்னைகளும் மேம்படும்.

சந்தன எண்ணெய் சருமத்திற்கு பல்வேறு நன்மைகளைத் தருகிறது. சந்தன எண்ணெயை முகத்தில் தடவுவது சரும செல் வளர்ச்சியை ஊக்குவிக்க உதவுகிறது. பொதுவாக, இதை பேஸ்ட் அல்லது எண்ணெய் வடிவில் பயன்படுத்தும்போது தலைவலிக்கு சிறந்த தீர்வாகக் கருதப்படுகிறது. சந்தன எண்ணெயை உள்ளிழுப்பது அதன் அழற்சி எதிர்ப்பு பண்பு காரணமாக நுரையீரல் காற்றுப்பாதைகளில் ஏற்படும் வீக்கத்தைக் குறைப்பதன் மூலம் சுவாச தொற்றுகளை நிர்வகிக்க உதவுகிறது. பக்கவாதம் மற்றும் முடக்குவாதம் போன்ற வாத வியாதிகளுக்கு வெளிப்பூச்சு எண்ணெய்யாகவும் உள் மருந்தாகவும் இது பயன்படுகிறது. சந்தனத்தை மருதாணி விதைகளோடு கலந்து, தூபம் போட வீடுகளில் நறுமண காற்று வீசுவதுடன் மனம் தெளிவாகும்.

ஆயுர்வேதத்தின்படி, சந்தனத்தில் குளிர்ச்சி குணம் உள்ளது. எனவே, குளிர்ச்சியை உணரும் நபர்கள் மருத்துவ மேற்பார்வையின் கீழ் சந்தனத்தை எடுக்க வேண்டும். சந்தனத்தை அதிகமாக உட்கொள்வதைத் தவிர்ப்பது நல்லது. ஏனெனில், இது இரைப்பை குடல் தொந்தரவுகளை ஏற்படுத்தக்கூடும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com