பெண்கள் மாதவிடாயின்போது இரத்தப்போக்கை உறிஞ்சுவதற்கு முன்பெல்லாம் பெரும்பாலும் பேட் பயன்படுத்தி வந்தனர். ஆனால், தற்போது அதில் நிறைய சாய்ஸ் வந்துவிட்டது. பேட், டேம்பான், மென்ஸ்டுரல் கப்ஸ் போன்றவை இருக்கின்றன. இதில் பெண்கள் மாதவிடாயின்பொழுது பயன்படுத்தும் பேட் மற்றும் டேம்பான் இரண்டில் எதைப் பயன்படுத்துவது மிகவும் வசதியானது என்பதைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
பேட் என்பது செவ்வக வடிவில் இருக்கும். இது பஞ்சைப் பயன்படுத்தி செய்யப்பட்டுள்ளது. மாதவிடாயின்போது உதிரத்தை உறிஞ்சிக்கொள்ள இதைப் பயன்படுத்துகிறார்கள். இதை அணிந்துக்கொள்வது சுலபமாகவும், வசதியாகவும் இருக்கும். பேடை ஒவ்வொரு 4 மணி நேரத்திற்கு ஒருமுறை மாற்ற வேண்டியது அவசியம். இதில் வரும் Fragrance padஐ பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது. இதனால் நோய்த்தொற்று வரும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
டேம்பானும் பேடைப் போலவே உறிஞ்சும் பொருளைப் பயன்படுத்தி செய்யப்பட்டுள்ளது. எனினும், டேம்பான் பார்ப்பதற்கு சின்ன ட்யூப் போன்று இருக்கும். டேம்பானின் இன்னொரு முனையில் நூல் ஒன்று இருக்கும். டேம்பானை அகற்ற வேண்டி வரும்பொழுது அந்த நூலைப் பிடித்து இழுத்து சுலபமாக எடுத்துவிடலாம்.
மாதவிடாயின்போது ஏற்படும் அதிகமான இரத்தப்போக்கு மற்றும் குறைவான இரத்தப்போக்குக்கு ஏற்றாற்போல அளவுகளில் டேம்பான்ஸ் விற்கப்படுகின்றன. டேம்பானை 6 மணி நேரத்திற்கு ஒருமுறை மாற்றினால் போதுமானதாகும். அதிக நேரம் டேம்பானை மாற்றாமல் விட்டு வைப்பது Toxic shock syndrome என்னும் பிரச்னையை ஏற்படுத்தக்கூடும்.
பெரும்பாலான பெண்களுக்கு பேட் ஒரு சிறந்த ஆப்ஷன் ஆகும். சுலபமாக நினைவில் வைத்துக்கொள்ளலாம், பயன்படுத்துவதும் எளிது, உபயோகிப்பதற்கும் வசதியாக இருக்கும். இதனாலும் Toxic shock syndrome ஏற்படும் வாய்ப்புகள் இருந்தாலும், டேம்பானை ஒப்பிடுகையில் குறைவேயாகும். டேம்பான் விளையாட்டு சம்பந்தமான துறையில் இருக்கும் பெண்களுக்கு மிகவும் வசதியாக இருக்கும்.
டேம்பானை பெண்கள் பயன்படுத்த விரும்பும் முக்கியமான காரணம், இதை பாக்கெட்டில் கூட வைத்து எடுத்துச் செல்லும் அளவிற்கு சிறியது மற்றும் சுலபமானதாகும். எனவே, பெண்கள் அவரவர் வசதிக்கு ஏற்றாற்போல பேட் அல்லது டேம்பான் எது வேண்டுமோ அதை தேர்வு செய்து பயன்படுத்துவது சிறந்ததாகும்.