
நம் உடலின் மிக முக்கிய உள்ளுறுப்புகளில் ஒன்று கல்லீரல். இது ஜீரணம், மெட்டபாலிசம், நச்சுக்களை நீக்குதல், நோயெதிர்ப்பு மண்டல செயல்பாடுகளை ஊக்குவித்தல் போன்ற பல வேலைகளை தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்து சிறந்த முறையில் செயலாற்றி வருகிறது. உடலில் முக்கிய இயந்திரம் போல செயல்பட்டு வரும் கல்லீரல் பித்த தோஷங்களின் மத்திய கூறுகளாகவும் செயலாற்றி வருவதாக ஆயுர்வேத தத்துவம் கூறுகிறது. ஆயுர்வேதம் கூறும் பாரம்பரிய வழக்கங்களைப் பின்பற்றுவது கல்லீரல் நோய்களைக் குணப்படுத்தவும் கல்லீரலை வலுவாக்கவும் உதவும். அது எப்படி என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.
1. மூலிகை மற்றும் ஸ்பைஸஸ் உபயோகித்தல்: மஞ்சள் ஆன்டி இன்ஃபிளமேட்டரி குணம் கொண்டது. ஆம்லா(நெல்லிக்காய்)வில் வைட்டமின் C மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளன.
திசுக்களுக்கு புத்துயிர் தர உதவும் குணம் கொண்டது ஜிலோய் (Giloy) என்னும் மூலிகை. திரிபலா, மூன்று பழங்களின் கலவையாக செயல்படுகிறது. இது ஜீரண மண்டல குடல் இயக்கப் பாதையை சுத்தப்படுத்த உதவும்.
குட்கி மற்றும் பூமியமலாகி போன்ற அதிகம் அறியப் படாத மூலிகைகள் கல்லீரல் திசுக்களின் வளர்ச்சிக்கும் வீக்கங்களைக் குறைக்கவும் உதவும். இந்த மூலிகைகள் அனைத்துமே கல்லீரலின் நச்சு நீக்கும் செயல்பாட்டில் நல்ல முறையில் உதவி புரிபவை.
2. உணவு முறை: லேசான கசப்பு சுவை கொண்ட வெந்தய கீரை, பசலை, காலே போன்றவை கல்லீரல் திசுக்கள் புத்துயிர் பெறவும், கல்லீரல் சுத்தமடையவும் உதவும். பீட்ரூட், கேரட், முள்ளங்கி போன்ற ஃபிரஷ் காய்கறிகள், பழங்கள், முழு தானிய வகைகள், லெமன் ஜூஸ் கலந்த வெது வெதுப்பான வாட்டர், இஞ்சி டீ, துளசி டீ போன்றவை கல்லீரல் ஆரோக்கியத்திற்கு உகந்தவை.
எண்ணெயில் பொரித்த உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள், கொழுப்பு நிறைந்த இறைச்சி, ஸ்பைசி மற்றும் அசிடிக் வகை உணவுகள் தவிர்க்கப் பட வேண்டியவை. ஏனெனில் இவை பித்தத்தை அதிகரிக்கச் செய்து நெஞ்செரிச்சல் மற்றும் அஜீரணத்தை உண்டுபண்ணும்.
3. நச்சு நீக்க உதவும் பழக்கங்களைப் பின்பற்றுதல்: மாலை வேளையில் சுடுநீரில் திரிபலா பொடியை கலந்து குடிப்பது அன்றிரவு முழுக்க நச்சு நீக்கும் செயல்பாடுகள் மெதுவாக நடைபெற்று கல்லீரல் முற்றிலும் சுத்தமடைய உதவும். தினசரி மூலிகை தைலம் உபயோகித்து அபியங்கா (Abhyanga) முறையில் உச்சி முதல் உள்ளங்கால் வரை மசாஜ் செய்யவும். இதனால் இரத்த ஓட்டம் அதிகரிக்கும். உடலிலுள்ள நச்சுக்கள் நீங்கி கல்லீரல் ஆரோக்கியம் மேம்படும்.
நாள் முழுவதும் சுடு நீர் குடிப்பது பித்த நீர் சுரப்பை அதிகரிக்கவும் நச்சு முழுவதுமாக நீங்கவும் உதவும்.
கபல்பதி (Kapalbhati), அனுலோம் (Anulom) மற்றும் விலோம் (Vilom) முறைகளைப் பின்பற்றி மூச்சுப் பயிற்சி செய்வது கல்லீரலுக்கு அதிக ஆக்ஸிஜன் கிடைக்க உதவும். இந்த பழக்கங்களை எல்லாம் பின்பற்றினால் கல்லீரல் நச்சுக்களின்றி சமநிலையில் வேலை செய்ய முடியும்.
4. யோகா மற்றும் உடலசைவு தெரபி: ஆயுர்வேத கொள்கைப்படி புஜாங்காசனா (Bhujangasana) மற்றும் தனுராசனா (Dhanurasana) என்ற இரண்டு யோகாசனங்களும் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்து கல்லீரலின் சிறப்பான செயல்பாட்டை ஊக்குவிக்கும்.
யோகாவின் மூச்சுவிடும் முறைகளைப் பின்பற்றி பிரணாயமா பயிற்சி செய்வது தோஷ நிலைகளைக் கட்டுப்படுத்தி ஸ்ட்ரெஸ் மற்றும் கல்லீரல் வீக்கங்களைக் குறைக்க உதவும். தினமும் நடைப்பயிற்சி, நீச்சல், சைக்கிளிங் போன்ற பயிற்சிகளை மேற்கொள்ளுதல், கல்லீரல் மீது படியும் கொழுப்புகள் தானாக குறையவும் கல்லீரல் சீராக செயல்படவும் உதவும்.
5. ஓய்வு, நேரம் தவறாத உணவு மற்றும் உறக்கம்: கல்லீரல் உடலிலுள்ள குறைகளை நிவர்த்தி செய்யும் செயல்களை இரவு பத்து மணிக்கு மேல்தான் செய்ய ஆரம்பிக்கும். அதற்குள் நாம் நம் உடலை ஓய்வு நிலைக்கு செல்ல அனுமதித்து விட வேண்டும். அதாவது தினசரி நம் இரவு உணவை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் முடித்துவிட்டு, குறிப்பிட்ட நேரத்தில் உறங்கச் சென்றுவிட வேண்டும். ஸ்ட்ரெஸ் இல்லாமல் உறக்கம் பெற பிடித்தமான பாடலை மெல்லிய குரலில் ஒலிக்க விட்டு படுத்துக்கொள்ளலாம். ஆல்கஹால் மற்றும் அனாவசியமான மாத்திரைகளை எடுத்துக்கொள்வதை கண்டிப்பாக தவிர்த்து விட வேண்டும். ஏனெனில் இவை இரண்டும் கல்லீரலின் வேலைப் பளுவை அதிகரிக்கச் செய்யும்.
ஆயுர்வேதம் பரிந்துரைக்கும் மேற்கூறிய வழிமுறைகளை அனைவரும் பின்பற்றி நல்ல ஆரோக்கியம் பெறுவோம்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)